Published:Updated:

முன்விரோதத்தால் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

முன்விரோதத்தால் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!
முன்விரோதத்தால் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

திருவாரூர்: முன்விரோதம் காரணமாக திருவாரூரில் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

தற்போது கூலிப்படை கொலைகளைக் காட்டிலும், முன்பகை காரணமாக கொலை செய்வது தான் பெருகி வருகிறது. சமீபத்தில் சீர்காழியில் நடந்த இரட்டை கொலைகள். இப்போது திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடந்த இரட்டை கொலைகளுமே அதற்கு சாட்சி.

முன்விரோதத்தால் அண்ணன், தம்பி வெட்டிக்கொலை!

கொரடாச்சேரியை சேர்ந்த ஹாஜி முகமது, ராஜா, மதன் ஆகியோர் ஆரம்பத்தில் நண்பர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இதில் ஹாஜி முகமது இஸ்லாமிய அமைப்பிலும், ராஜா, மதன் ஆகியோர் நாம் தமிழர் கட்சியிலும் இருந்து வந்திருக்கிறார்கள். மூன்று பேருமே இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கி விற்பது போன்ற சிறுசிறு வேலைகள் செய்து சம்பாதித்து வந்திருக்கிறார்கள். அப்போதே யாருடைய வளர்ச்சி அதிகம் என்பதில் போட்டி இருந்திருக்கிறது.

##~~##
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மதனும், ராஜாவும் தாங்கள் சார்ந்த நாம் தமிழர் கட்சி கொடிக்கம்பத்தை இடித்து விட்டதாக ஹாஜி முகமது மீது குற்றம் சுமத்தி இருக்கிறார்கள். உண்மைக்கு மாறாக இந்த குற்றச்சாட்டு இருந்ததாலும், கட்சி செயல்பாட்டில் சரியில்லாததாலும் கட்சியில் இருந்து ராஜாவும், மதனும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்பிறகு தான் பகை முற்றியிருக்கிறது.
சமீபத்தில் மதனும், ராஜாவும் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டுவதாக தனது உறவினர்களிடம் சொல்லியிருக்கிறார் ஹாஜி முகமது. அதை வைத்து மதனையும் ராஜாவையும் தீர்த்து கட்ட ஹாஜி முகமது திட்டம் போட்டிருக்கிறார். அதன்படி நேற்று இரவு மதன் வீட்டிற்கு சென்ற ஹாஜி முகமது தனது உறவினர்களான ருக்குன் பாட்ஷா, மன்சூர் அலிகான், மர்ஜித் அலிகான், முகமது ரியாஸ் ஆகியோரையும் அழைத்து சென்றிருக்கிறார்.
மற்றவர்களை வெளியில் நிறுத்தி விட்டு தான் மட்டும் மதன் வீட்டு வாசலில் நின்று மதனை வீட்டிற்கு வெளியே அழைத்திருக்கிறார். நண்பர் தானே என நம்பி வெளியே வந்த மதனை வீட்டு வாசலிலேயே வெட்டியிருக்கிறார்கள் ஹாஜி முகமது தரப்பினர். வீட்டிற்கு உள்ளேயிருந்து இதைப்பார்த்த ராஜா தப்பிப்பதற்காக ஓடி இருக்கிறார். இருந்தும் விடாத கொலைவெறி பிடித்த கும்பல் விரட்டிப்பிடித்து ராஜாவையும் வெட்டி கூறு போட்டிருக்கிறது.
தற்போது ஹாஜி முகமதுவும், ருக்குன் பாட்ஷாவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களை தேடி வருகிறது கொரடாச்சேரி போலீஸ். கொலை செய்யப்பட்ட ராஜாவும், மதனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: கே.குணசீலன்