Published:Updated:

திட்டம் போட்ட தாய்; பணத்துக்காக சிறுவன் செய்த கொலைகள் - டெல்லியில் நடந்த கொடூரம்

திட்டம் போட்ட தாய்; பணத்துக்காக சிறுவன் செய்த கொலைகள் - டெல்லியில் நடந்த கொடூரம்
திட்டம் போட்ட தாய்; பணத்துக்காக சிறுவன் செய்த கொலைகள் - டெல்லியில் நடந்த கொடூரம்


புதுடெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வயதான தம்பதியின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் வீரேந்தர் குமார் (78), சரளா (71) என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட நிலையில், இந்த வயதான தம்பதியினர் புதுடெல்லியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வந்துள்ளனர். ஜனவரி 26-ம் தேதி, உறவினர்கள் இவர்களைத் தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளனர்.  இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், அவர்கள் வசித்துவந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று  வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். நீண்டநேரமாகத் தட்டியும் யாரும் கதவைத் திறக்கவில்லை. அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர்.  அவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. கதவின் அருகே சென்று உள்ளே பார்க்க முயன்றுள்ளனர். அப்போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள், உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தக் குடியிருப்புக்கு வந்த போலீஸார், வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வயதான தம்பதியினர் சடலமாகக் கிடந்தனர். உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். முதலில் தம்பதியினர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். ஆனால் உறவினர்களிடம் விசாரித்ததில், அந்த வயதான தம்பதியினரின் வீட்டில் ஒரு பெண் பகுதிநேரமாகப் பணியாற்றியது தெரியவந்தது. வயதான தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் இருந்ததால், இறந்து சில நாள்கள் இருக்கும். பணிப்பெண் இந்த நாள்களில் வராதது ஏன் என காவல் துறையினர் சந்தேகித்தனர்.  அதையடுத்து அந்தப் பெண்குறித்த தகவல்களைக் காவல்துறையினர் திரட்ட ஆரம்பித்தனர். 50 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்துவருவது தெரியவந்தது. அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் மற்ற வீடுகளிலும் பணிபுரிந்து வந்தததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், அந்தக் குடியிருப்பில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், போலீஸார் சந்தேகப்படும் வகையில் ஒரு சிறுவன் நடத்துகொண்டது காவல் துறையினருக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அந்தச் சிறுவனைப் பிடித்து காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய நிலையில், காவலர்களின் கிடுக்குப்பிடி விசாரணையில் பணத்திற்காக வயதான தம்பதியினரைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார். இந்த சதித்திட்டத்தைத் தீட்டியது தனது தாய்தான் என போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்தச் செய்தி, குடியிருப்புவாசிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  இதையடுத்து, தாய் மகன் இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். 


இதுதொடர்பாக காவல் துறையினர் கூறுகையில், “வயதான தம்பதியினருக்கு மசாஜ் செய்வதற்காக வந்த பெண், பீரோவில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் இருந்ததைப் பார்த்துள்ளார். வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முடிவுசெய்து, இதற்குத் தனது மகனை பயன்படுத்திக்கொள்ளவும் துணிந்துள்ளார். ஜனவரி 18 -ம் தேதி, வழக்கம் போல அந்தக் குடியிருப்புக்கு வந்துள்ளார்.  அப்போது, சரளா மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருக்குத் தெரியாமல் தனது மகனை வீட்டிற்குள் அழைத்துவந்தவர், பணிகளை முடித்துவிட்டு அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வீட்டிற்குள் மறைந்திருந்த சிறுவன், பீரோ சாவியைக் கொடுக்குமாறு சரளாவை மிரட்டியுள்ளான்.

சாவி தனது கணவரிடம்தான் உள்ளது எனக் கூற, ஆத்திரத்தில் அவரைத் தாக்கிக் கொலைசெய்துள்ளார். அதையடுத்து, அந்த வீட்டிலேயே தங்கிவிட்டான். வெளியில் சென்றிருந்த வீரேந்தர் குமார் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளார். அப்போது அந்த சிறுவன், வீட்டுக்குள் அமைதியாக இருந்துள்ளான். இதையடுத்து, தன்னிடம் இருந்த சாவியைக்கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றுள்ளார்.  அந்த மூன்று படுக்கையறை கொண்ட வீட்டில் மனைவி தரையில் கிடந்ததைக் கண்டு அருகில் சென்று பார்த்துள்ளார். அங்கு மறைந்திருந்த சிறுவன் வீட்டைப்பூட்டிவிட்டு அவரிடம் பீரோ சாவியைக் கேட்டுள்ளான். பயத்தில் செய்தவறியாமல் சாவியைக் கொடுத்துள்ளார். அவரது கழுத்தில் கத்தியைக்கொண்டு கீறிவிட்டு, வீட்டில் இருந்த பணம் நகைகளைக் கொள்ளையடித்துள்ளான். இரவு முழுவதும் அந்த வீட்டிலே அவன் தங்கிவிட்டான். காலையில்தான் அங்கிருந்து வெளியேறியுள்ளான்.

வழக்கமாக குடியிருப்புகளுக்குள் யார் வருகிறார்கள் என்பதைக் குறிப்பெடுக்க பதிவேடு இருக்கும். அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு அந்தப் பெண் சென்றுள்ளார். ஆனால், அவரது மகன் வந்து சென்றதைக் காவலாளி ஏன் கவனிக்கவில்லை எனத் தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைப்பெற்றுவருகிறது எனக் கூறினர்.

இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ''எங்கள் கண்முன்னே நடமாடிக்கொண்டிருந்தவர்கள் இவ்வளவு பெரிய கொடூரத்தைச் செய்வார்கள் என நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. அந்தச் சிறுவன் வராந்தாவில் சுற்றிக்கொண்டிருப்பான். அவன் இப்படிப்பட்ட கொடூரத்தைச் செய்வான் என எண்ணவில்லை'' என்றனர்.