Published:Updated:

கரூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 கோடி மோசடி! - எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த மக்கள்

கரூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 கோடி மோசடி! - எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த மக்கள்
கரூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 கோடி மோசடி! - எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த மக்கள்

கரூர் அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.25 கோடியை வசூலித்த குப்புசாமி என்பவர், அந்தப் பணத்தைத் திரும்பக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கரூர் மாவட்ட எஸ்.பி-யிடம் புகார் கொடுத்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.  

கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோயில் ரோடு, ராசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் குப்புசாமி. இவர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தனது நிதி நிறுவனத்தின் மூலம் வங்கியைவிட அதிக வட்டி தருவதாகக் கூறி 400-க்கும் மேற்பட்ட மக்களிடம் 25 கோடி ரூபாய் நிதியைப் பெற்று ஏப்பம் விட்டுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக ஒழுங்காக வட்டியைக் கொடுத்து வந்த குப்புசாமி கடந்த இரண்டு வாரங்களாக மக்களுக்கு வட்டியைத் தராமல் கப்சிப் என்று அமைதியாக இருந்துள்ளாராம். கடந்த இரண்டு வாரங்களாக முதலீடு பணத்துக்கு வட்டி வராததைக் கண்டு பயந்து போய் மக்கள் விசாரித்தபோதுதான், பைனான்ஸ் நடத்திய குப்புசாமி வெளியூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இதனால், இன்று தேதி கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 25-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளிக்க வந்திருந்தனர். எஸ்.பி-யை பார்க்க முதலில் போலீஸார் அனுமதிக்கவில்லை. அதனால், அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜெயந்திரன் கூறுகையில்,``கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கு தெரிந்த நபர்தான் குப்புசாமி. அவரிடம் எனது உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் நம்பிக்கை அடிப்படையில், அவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து இருந்தார்கள்.

`வங்கியைவிட அதிக வட்டி’ என்று ஆசை வலைவிரித்துதான் பலரையும் தனது நிதி நிறுவனத்தில் பணம் போட வைத்தார் குப்புசாமி. அதை நம்பி நானும் பணம் போட்டேன். நான் ஆடு, மாடுகளை நம்பி குடும்பத்தை ஓட்டுறவன். நான் மட்டும் விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளை மேய்த்து விற்ற பணத்தில் சுமார் 15 லட்சம் ரூபாயை அவரது நிதி நிறுவனத்தில் சேமிப்பு செய்துள்ளேன். முறையாக வட்டி கொடுத்து வந்த அவர், கடந்த இரண்டு வாரங்களாக வட்டித் தொகையைக் கொடுக்க வராததால், எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரைப் பற்றி விசாரித்தபோது, அவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புனே நகருக்குத் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

அங்கு அவருடைய மகன் கவியரசன் பணி நிமித்தமாக தங்கியுள்ளார். அங்கே போய் மறைந்துகொண்டார். நிதி நிறுவனம் நடத்தி எங்களுடைய பணத்தை மோசடி செய்த குப்புசாமி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எங்கள் முதலீடு பணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும். இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை எஸ்.பி ராஜசேகரனாச்சும் நடவடிக்கை எடுப்பார்ங்கிற நம்பிக்கையில், இங்க மனு கொடுக்க வந்திருக்கோம். அவரும் நடவடிக்கை எடுக்கலன்னா, நாங்க குடும்பங்களோட நாண்டுக்கிட்டு சாக வேண்டியதுதான்’’ என்று கண்ணீர்விட்டார்.

இதனிடையே, மனு கொடுக்க வந்த பாதிக்கப்பட்ட மக்கள் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரனைச் சந்தித்து மனு அளிக்க அனுமதிக்கப்படாததால் நீண்ட நேரம் காத்திருந்து, இரண்டு மணிக்குப் பிறகே மனு அளித்தனர். ``மனு வாங்கவே இவ்வளவு நேரம் ஆவுதுன்னா, இவங்க நடவடிக்கை எவ்வளவு நேரம் எடுத்துக்குவாங்க?’’ என்று புலம்பியபடி சென்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். 

குப்புசாமி தரப்பில் பேசினால், ``யாரையும் ஏமாற்றவில்லை. சின்ன பொருளாதாரச் சறுக்கல். அது சரியானதும் ஊருக்கு வந்துவிடுவார். சம்பந்தப்பட்ட மக்களுக்கு உரிய பணத்தை வட்டியோடு திருப்பி தந்துவிடுவார்’’ என்று மட்டும் சொன்னார்கள்.