Published:Updated:

புதுக்கோட்டையில் அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பான மோதல் - பா.ஜ.க பிரமுகர் அடித்துக் கொலை!

புதுக்கோட்டையில் அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பான மோதல் - பா.ஜ.க  பிரமுகர் அடித்துக் கொலை!
புதுக்கோட்டையில் அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பான மோதல் - பா.ஜ.க பிரமுகர் அடித்துக் கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பாக  இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் கட்டையால் தாக்கியதில் பாஜக பிரமுகர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்தரசன் கோட்டையைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் செல்வவிநாயகம்(30). பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் இவர் பத்தரசன் கோட்டையில் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெற்பயிர் நடவு செய்து இருந்தார். இவருக்கும் தர்மராஜன்வயலைச் சேர்ந்த அர்ஜூணன் என்பவருக்கும் இடையே அரசு நிலத்தில் விவசாயம் செய்வது, அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பான முன்விரோதம் இருந்துள்ளது. கண்மாய் உள் வரத்து பகுதியில் விவசாயம் செய்து உள்ளதால், கண்மாய்க்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் மற்ற விவசாயிகள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சிலர் குற்றம்சாட்டி வந்தனர். பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே விவசாயம் செய்து இருந்தார்.
 இந்த நிலையில், கதிர் அறுக்கும் நேரத்தில் இன்று பத்தரசன்கோட்டைக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த அர்ஜூணன், செல்வவிநாயகத்துடன் நிலம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில், அர்ஜூணன் தரப்பினர் செல்வவிநாயகத்தை கட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கினர். இதைத் தட்டிக்கேட்ட செல்வவிநாயகத்தின் உறவினர்களையும் தாக்கினர். செல்வவிநாயகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உறவினர்களான ஜெய்சங்கர்(25), திருநாவுக்கரசு(27), ஜெயக்குமார்(45) ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல், செல்வவிநாயகம் உயிரிழந்தார்.மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு நிலத்தை உரிமை கோருவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவர் உயிரிழந்த சம்பவம்  அறந்தாங்கியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.