Published:Updated:

`என் தம்பி லவ் மெரேஜ் பண்ணியதால் பெற்றோரைக் கடத்திட்டாங்க!'- கதறும் ஜெனிபா 

`என் தம்பி லவ் மெரேஜ் பண்ணியதால் பெற்றோரைக் கடத்திட்டாங்க!'- கதறும் ஜெனிபா 
`என் தம்பி லவ் மெரேஜ் பண்ணியதால் பெற்றோரைக் கடத்திட்டாங்க!'- கதறும் ஜெனிபா 

`என் தம்பி லவ் மெரேஜ் பண்ணியதால் பெற்றோரைக் கடத்திட்டாங்க!'- கதறும் ஜெனிபா 

`என் தம்பி லவ் மெரேஜ் செய்ததால் வீட்டுக்கு வந்த போலீஸார், அப்பா, அம்மாவையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று மூன்று நாள்களாகியும் விடுவிக்கவில்லை' என்று பேராசிரியை ஜெனிபா கண்ணீர் மல்க தெரிவித்தார். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திங்கள் சந்தை அருகில் உள்ள  மாங்குழிப் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்தாஸ். தனியார் கம்பெனியில் டெக்னீசியனாக வேலை பார்க்கிறார். இவரின் மனைவி அன்புலதா. நர்ஸாகப் பணியாற்றுகிறார். இவர்களின் மகன் அப்சல் ஜெனிஷ். 22 வயதாகும் இவர், சென்னையில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்தார். அதே கல்லூரியில் சென்னையைச் சேர்ந்த சுரேகா என்பவரும் படித்தார். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். 

வழக்கம் போல காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி 25.1.2019-ல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் சுரேகாவைக் காணவில்லை என அவரின் அப்பா மனோகரன் சென்னை செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் நாகர்கோவிலுக்குச் சென்று ஆல்பர்ட்தாஸ், அன்புலதா ஆகியோரை விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர். 

இந்தநிலையில் பதிவுத் திருமணம் செய்த காதல் ஜோடியிடம் சினிமா பிரபலம் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது அவரிடம் சுரேகா, வாழ்ந்தால் அப்சலுடன்தான் வாழ்வேன் என்று பிடிவாதமாகக் கூறியுள்ளார். அதன்பிறகும் அப்சலின் அப்பா, அம்மா ஆகியோரிடம் இன்னமும் போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் சென்ற அப்பா, அம்மா எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எனவும் அவர்களை சட்ட விரோதமாக போலீஸ் காவலில் வைத்திருப்பதாகவும் மாநில மனித உரிமை ஆணையம், சென்னை போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்.பி, மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் புகார் மனு அளித்துள்ளார் ஜெனிபா.

அவரிடம் பேசினோம். ``நான் பெங்களூருவில் பேராசிரியையாகப் பணியாற்றுகிறேன். என்னுடைய தம்பி அப்சல் ஜெனிஷ், தன்னுடன் படித்த சுரேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜெனிஷ் இன்ஜினீயரிங் படித்துள்ளார். சுரேகா, பி.எஸ்சி பட்டதாரி. இவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டினர் கொடுத்த புகார் அடிப்படையில் என்னுடைய அப்பா, அம்மாவை 28.1.2019-ம் தேதி செம்மஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி விசாரணைக்காக அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

என்னுடைய அம்மாவின் செல்போனில் பேசிய எஸ்.ஐ. விசாரித்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். எதற்காக அவர்களிடம் விசாரிக்க வேண்டும். போலீஸூக்கு பயந்து என்னுடைய தம்பியும், அவரின் மனைவியும் தலைமறைவாக உள்ளனர். மேலும் எங்கள் குடும்பத்தினரும் ஒருவித அச்சத்துடன் இருக்கிறோம். எனவே, அம்மா, அப்பாவை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்றார். 

சுரேகாவின் அப்பா மனோகரனைத் தொடர்புகொள்ள பலதடவை முயற்சி செய்தோம். அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் மனோகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நான் மெடிக்கல் கடை நடத்தி வருகிறேன். என்னுடைய மகள் சுரேகா, சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளார். 24.1.2019-ல் காலை 10.30 மணிக்கு வேளச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்குச் செல்வதாக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அன்புலதா, உறவினர் ஒருவரிடம் போனில் பேசியுள்ளார். ``சென்னையில் உள்ள ஹோட்டலில் ஏசி அறையில் தங்கியிருக்கிறேன். புடவை, சாப்பாடு தந்தார்கள். ஆனால், வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது'' என்று அந்த உறவினர் பதற்றத்துடன் தெரிவித்தார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளியிடம் பேச முயன்றோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து இந்தத் தகவலை தென்சென்னை போலீஸ் உயரதிகாரி ஒருவரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். விவரங்களைக் கேட்ட அந்த அதிகாரி, விசாரித்துவிட்டு நடவடிக்கை எடுப்பதாக நம்மிடம் தெரிவித்தார். 

அடுத்த கட்டுரைக்கு