பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“அவன் வெளியில வரவே வேணாம்!”

“அவன் வெளியில வரவே வேணாம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அவன் வெளியில வரவே வேணாம்!”

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

ன்று நினைத்தாலும் பதைபதைக்க வைக்கிறது... பிப்ரவரி 5,2017 அன்று, போரூர் மதனந்த புரத்தைச் சேர்ந்த இன்ஜினீயர் பாபுவின் ஆறு வயது மகள் ஹாசினிக்கு நேர்ந்த கொடூரம். அன்று தன் வயதுப் பிள்ளைகளுடன் பட்டாம்பூச்சியாய் விளையாடித் திரிந்தவளின் அடுத்த சில மணி நேரம் கோரமாய் நகர்ந்து முடிந்தது. ஹாசினி வசித்து வந்த அதே அப்பார்ட்மென்ட்டைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் தஷ்வந்த், அந்தக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து மாங்காடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குப்பைகளுக்கு நடுவே எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

“அவன் வெளியில வரவே வேணாம்!”

இவ்வளவு கொடூரக் கொலையாளியை, தந்தைப்பாசத்தால் போராடி ஜாமீனில் மீட்டு வந்தார் தஷ்வந்த்தின் தந்தை சேகர். ஆனால், வெளியே வந்த தஷ்வந்த் அடுத்ததாக, தன் அம்மாவையும் கொன்றுவிட்டுத் தப்பி ஓடினான். மும்பையில் தலைமறைவாகியிருந்தவனை, குன்றத்தூர்க் காவல்நிலைய அதிகாரிகள் சிறப்புப்படை அமைத்துக் கண்டுபிடித்தனர். தஷ்வந்த் குற்றவாளி எனச் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உறுதிசெய்து தூக்குத் தண்டனை வழங்கியது. இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது மீண்டும் சேகர், தஷ்வந்த்தைச் சிறையிலிருந்து மீட்கப் போராடுகிறார் என்ற தகவல்கள் வந்ததும் அவரைத் தேடிச் சென்றேன். சேகரைச் சந்திக்கும் முயற்சி கடுமையாக இருக்க, முன்னதாக அவர் மனைவி சரளாவின் உறவினர்களிடம் பேசினேன்.

“ரெண்டு வருஷம் ஆகிடுச்சு தம்பி. ஆனாலும் அந்தத் துயரத்துல இருந்து எங்களால வெளிவர முடியல. ஒரு ஈ, எறும்புக்குக்கூட துரோகம் நினைக்காத எங்கக்காவுக்குப் போயி இப்படி ஒரு மகன் பிறந்துட்டானே. பிஞ்சுக் குழந்தையோட வாழ்க்கைய சீரழிச்சது மட்டுமல்லாம, பெத்த தாயையே அடிச்சுக் கொன்ன அந்த அரக்கனை இன்னமும் ஜெயில்ல உசுரோட வெச்சிருக்காங்களே” - கலங்கிய கண்ணீரோடு கோபமாகப் பேசுகிறார் சரளாவின் தங்கை ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

“அக்காவைப் போலவே மாமாவுக்கும் நல்ல மனசு. ஆனா, அவங்க ரெண்டு பேரோட குணத்துக்கும் நேர்மாறா இருந்தான் மணி (தஷ்வந்த்தை வீட்டிலுள்ளவர்கள் மணி என்றுதான் அழைக்கிறார்கள்). சின்ன வயசுல இருந்தே பிடிவாதக்காரன். அவனுக்கு எது பிடிச்சிருந்தாலும் உடனே அது வேணும்னு நிப்பான். வீட்டுல தங்குறதே கிடையாது. எப்பவும் பிரெண்ட்ஸ்கூட தான் சுத்திட்டிருப்பான். ‘அவனைக் கண்டிச்சு வையுங்க’ன்னு அக்கா, மாமாகிட்ட சொல்லிட்டேயிருப்பா. ‘சின்னப் பையன்தானே, விட்டுப் புடிக்கலாம்’ னு சொல்லி மாமா அக்காவோட வாயை அடைச்சிடுவாரு. ‘அவனை நெனைச்சா பயமா இருக்கு. எப்படியாச்சும் புத்திமதி சொல்லித் திருத்தணும்’னு சொல்லிட்டே இருப்பா. ஆனா, `இதெல்லாம் பல வீடுகள்லயும் புள்ளைங்க பண்ற சேட்டைதானே... படிச்ச பையன்; நாலு இடத்துக்குப் போக வர இருக்கான்; திருந்திடுவான்னு நினைச்சோம். இப்படி ஒரு காரியத்தைச் செய்வான்னு சத்தியமா நாங்க யாரும் கனவுலகூட நினைக்கலைங்க” என்றவரின் குரல் விம்முகிறது.

“அவன் வெளியில வரவே வேணாம்!”



“அன்னிக்கு அக்காதான் எனக்கு போன் பண்ணி, ‘நம்ம அப்பார்ட்மென்ட்ல இருக்கிற ஒரு குழந்தை காணாமப்போயிடுச்சுடி. அக்கம்பக்கத்துல எல்லாரும் தேடிட்டிருக்கிறாங்க. கூட தஷ்வந்த்தும் போயிருக்கான். பாவம்டி... எப்பவுமே கண்ணு முன்னாடியே திரியுற குழந்தை... சீக்கிரமே கிடைச்சிடணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டி ருக்கேன்’னு சொல்லிட்டிருந்தா. தன் புள்ளதான் குற்றவாளின்னு தெரிஞ்சதும், ‘என் வயித்துல பொறந்துட்டு எப்புடி இவனால இப்புடி ஒரு காரியம் பண்ண முடிஞ்சது’ன்னு அழுதழுது பைத்தியக்காரி மாதிரி ஆகிட்டா. அக்கா, தஷ்வந்த்துக்கு தண்டனை கிடைக்கணும்னுதான் நினைச்சா’’ என்ற ரேவதி, தன் அக்காவையும் இழக்க நேரிட்டதைச் சொல்லும்போது இன்னும் உடைந்துபோகிறார். ரேவதியின் கணவர் தொடர்ந்தார்.

“தஷ்வந்த்தை ஜாமீன்ல எடுக்க வேணாம்னு அவங்கப்பா சேகர்கிட்ட நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ‘நம்ம வீட்டுல இது மாதிரி ஒரு சம்பவம் நடந்திருந்தா நீ சும்மா இருப்பியா?’ன்னு கேட்டேன். ஆனா, அவரு தஷ்வந்த்தை வெளிய எடுத்துடணும்னு உறுதியா இருந்தாரு” என்றவரை நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார் ரேவதி.

“ஜாமீன்ல வந்த தஷ்வந்த்கிட்ட அக்கா பேசவேயில்லை. வீட்டுல இருந்தா அவன் முகத்துல முழிக்கணுமேங்கிறதுக்காக அடிக்கடி கோயிலுக்குப் போயிடுவா. புறாவுக்குத் தானியம் போடுறது, எறும்புக்குப் பச்சரிசி போடுறது, பிள்ளையாருக்கு விளக்கு போடுறதுன்னு கோயில் கோயிலா ஏறி இறங்கினா. ‘எதுக்காக இதெல்லாம் செய்ற?’ன்னு கேட்டப்போ, ‘ஹாசினிக்காகத்தான்... இதெல்லாம் செஞ்சாலாவது அந்தக் கொழந்தை யோட ஆன்மா சாந்தியடையும்னு தான்’னு சொல்லுவா. தஷ்வந்த்கிட்டயே அடிக்கடி, ‘ஏன்டா, ஒரு குழந்தையப் போயி இப்புடிப் பண்ணிட்டியே, உனக்கு உறுத்தலையா?’ன்னு சொல்லிட்டே இருந்திருக்கா. அதுதான் தஷ்வந்த்துக்கு அக்கா மேல கோவத்தை வர வெச்சிருக்கு.

அன்னிக்குக் கார்த்திகை தீபம். உடம்பெல்லாம் ரத்தக்கறை உறைஞ்சுபோயி அக்கா வீட்டுல கிடந்த கோலத்தைப் பாத்து எனக்கு உசுரே விட்டுப்போச்சு.  அக்காவோட தலையில எதையோ வெச்சு அடிச்சிருக்கான். இப்புடி ஒரு பையனப் பெத்துட்டோமேன்னு நினைச்சு தினம் தினம் அக்கா மருகிட்டு இருந்தாலும், கடமையேன்னு அவனுக்கு சமைச்சுப் போட்டுக்கிட்டுதான் இருந்தா. அவளைப் போயி அடிச்சுக் கொல்ல எப்படித்தான் அவனுக்கு மனசு வந்ததோ தெரியலை. ஆரம்பத்துலேயே சேகர் மாமா அக்கா பேச்சைக் கேட்டு அவனைக் கண்டிச்சிருந்தா, ஹாசினியையும் பறிகொடுத்திருக்க மாட்டோம்; அக்காவையும் இழந்திருக்க மாட்டோம். இவ்வளவு நடந்தும் ஏன் அவனை இன்னும் உயிரோட வெச்சிருக்காங்கன்னுதான் தோணுது. இப்போவாவது தாமதிக்காம அவனைத் தூக்குல போடணும். அப்போதான் ஹாசினியப் பெத்தவங்களுக்கு நியாயமும், குழந்தைங்க மேல கைய வெக்கணும்னு நினைக்கிற அயோக்கியனுங்களுக்கு பயமும் வரும்” என்று ஆதங்கத்தோடு பேசியவர் இறுதியாக,

“அக்கா, ஹாசினியோட அப்பாவையும் அம்மாவையும் சந்திச்சு அவங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு அழணும்னு சொல்லிட்டே இருந்தா. அதுக்குள்ள அவளுக்கு இப்படி ஒரு முடிவு வந்துடுச்சு. அவளுக்குப் பதிலா நான் போய் அவங்களைச் சந்திச்சுட்டு வரணும்னு நினைக்கிறேன். சீக்கிரமே போகணும்’’ என்றபோது மனதின் கனம் கூடுகிறது.

குன்றத்தூர்ப் பகுதியிலேயே இருக்கிறது சேகரின் வீடு. அவரிடம் பேச வேண்டும் எனத் தொடர்ந்து அவரை அலைபேசியில் அழைத்தேன். என்னை நேரில் சந்திப்பதற்கு அவர் மறுத்துவிட்டார். ‘`என்னை விட்டுருங்க.ரெண்டு வருசமா எல்லாத்துலயும் இருந்து ஒதுங்கி இருக்கேன்’’ என்று சொல்லிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார். சைதாப் பேட்டையிலுள்ள சேகரின் தந்தை வீட்டுக்குச் சென்றேன். பலகட்ட முயற்சிக்குப் பிறகு சேகர் என்னிடம் பேசினார். அவர் ஊடகத்திடம் பேசுவது இதுவே முதல் முறை.

“நான் தஷ்வந்த்தை வெளியில எடுக்கப் போறேன்னு எல்லாரும் சொல்லுறாங்க. ஆனா, நான் அப்படி எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. நிச்சயமா இனி நான் எப்பவும் அவனுக்கு ஆதரவா போகமாட்டேன். அவனைப் பத்தின நினைப்பு எதுவுமே இருக்கக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆரம்பத்துலேயே என் மனைவி பேச்சைக் கேட்டு அவனைக் கண்காணிச்சிருக்கணும். சின்ன வயசுல இருந்தே அவனுக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துப் பண்ணினேன். ஆனா, அவனைக் கண்டிச்சு வளர்க்காம விட்டுட்டேன். நான் அவனை என் மனைவியோட பொறுப்புல விட்டுருக்கணும். அப்போ அவன் மேல இருந்த பாசம் என் கண்ணை மறைச்சிடுச்சு. ஆனா ஒண்ணு... அவனுக்குத் தூக்குத்தண்டனை மட்டும் வேணாம். ஆயுள் முழுக்க அவன் ஜெயில்லயே கிடக்கட்டும். ஏற்கெனவே ரெண்டு உசுரு போயிடுச்சு. இன்னொரு உசுரும் போக வேண்டாம்” - சேகரின் வார்த்தைகள் உடைகின்றன.

மு.பார்த்தசாரதி