Published:Updated:

`கோடிகளில் வைரங்கள் கொள்ளை; கும்பமேளாவில் சாது வேடம்!’ - போலீஸில் சிக்கிய பலே திருடன்

ராம் பிரசாத்
`கோடிகளில் வைரங்கள் கொள்ளை; கும்பமேளாவில் சாது வேடம்!’ - போலீஸில் சிக்கிய பலே திருடன்
`கோடிகளில் வைரங்கள் கொள்ளை; கும்பமேளாவில் சாது வேடம்!’ - போலீஸில் சிக்கிய பலே திருடன்

சார்., என் மேல நம்பிக்கை இருக்குல பொருளை கொடுங்க நல்ல காசு பார்த்துடலாம் என வியாரிகளிடம் கேட்டுள்ளார் 31 வயதான யாதிஷ் ஃபிசாடியா. 7 வருடமா வைர வியாபாரிகள் மற்றும் புரோக்கர்கள் மத்தியில் நல்ல பழக்கம்தான் யாதிஷ்க்கு. விலை மதிப்பில்லாத வைரங்களுக்கு நல்ல லாபம் பார்க்கலாம் என வைர வியாபாரிகளிடம் கேட்க நம்பிக்கையின் அடிப்படையில் சூரத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் கொடுத்துள்ளனர். சில நாள்களுக்குப் பின்னர் வைர வியாபாரிகள் யாதிஷை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளனர். அவரது செல்போன்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவரைக் குறித்து விசாரித்ததில் யாதிஷ் காணவில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. யாதிஷை காணவில்லை என அவரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் யாதிஷிடம் சுமார் 1 கோடி மதிப்புள்ள வைர நகைகளைக் கொடுத்த சுரேஷ் என்பவர் கடந்த டிசம்பர் மாதத்தில் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். வைரங்களுக்காக யாதிஷ் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவதுகூட நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் இந்த வழக்கு நகரத்தொடங்கியது. போலீஸார் விசாரணையில் யாதிஷ் 25 பேர்களிடம் வைரங்கள் பெற்றதும் அதன் மதிப்பு சுமார் 27 கோடிக்கு மேல் இருக்கும் என்பது தெரியவந்தது. கடந்த மூன்று மாதங்களில் இந்த வியாபாரிகளைத் தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து வைரங்களை அவர் வாங்கியது தெரியவந்தது. அப்போதுதான் யாதிஷ் இவர்களை மோசடி செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. யாதிஷின் கூட்டாளிகளும் மாயமானதால் சந்தேகம் வலுக்கத்தொடங்கியது. இதையடுத்து சூரத்தில் இருந்த வைர வியாரிகள் அனைவரும் அலர்ட் செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் யாதிஷ் கூட்டாளி கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொண்டு விசாரணையில் வைரங்கள் மற்றும் பணம் ஆகியவை யாதிஷிடம் இருப்பதும், வைரவியாபாரிகளைத் திட்டமிட்டு ஏமாற்றியதும் தெரியவந்தது. போலீஸார் தனிப்படை அமைத்து இந்த வழக்கைத் தீவிர விசாரிக்க ஆரம்பித்தனர். வைரங்களைப் பறிகொடுத்தவர்கள், யாதிஷ் மற்றும் அவரின் மாமா இருவரையும் நன்றாகத் தெரியும். மேலும் இவர்கள் 7 வருடமாகத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற நம்பிக்கையில் அளித்ததாகத் தெரிவித்தனர்.

காவல்துறைக்குக் கிடைத்த ரகசிய தகவலில் யாதிஷ் ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர், ஹிமாச்சலப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றது தெரியவந்தது. மேலும், ஒடிசாவில் இருந்து கும்ப மேலாவுக்குத் திரும்புவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால், அங்கு போலீஸாருக்கு தண்ணீகாட்டிவிட்டு எஸ்கேப் ஆனார். கும்பமேளாவில் சாதுக்கள் வேடத்தில் வந்ததால் அடையாளம் காண்பது போலீஸாருக்கு சிக்கலாக இருந்துள்ளது. கோடிகளைக் கொள்ளையடித்த யாதிஷ் சாதுக்கள் வேடத்தில் கும்பமேளாவில் தனது சந்திப்புகளை முடித்துக்கொண்டு தப்பிவிட்டான்.

இதையடுத்து மகாராஷ்ட்ரா மாநிலம் கல்யாணுக்குப் பணத்தை வாங்க வரும் தகவல் கிடைத்துள்ளது. போலீஸ் ஹை அலர்ட் செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பைக்குப் பயணமானதை அறிந்துகொண்ட காவல்துறையினர், அவனை நிழல்போல் பின் தொடர்ந்தனர். பணத்தைக் கைப்பற்ற வந்த யாதீஷை கல்யாண் ரயில் நிலையத்தில் வைத்து கையும் களவுமாகப் போலீஸார் கைது செய்தனர். அவனுடைய கூட்டாளிகள் 6 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.