Published:Updated:

‘காருக்கு வழிவிடாத கர்நாடக பஸ்!’ - அடித்து நொறுக்கிய வாணியம்பாடி தி.மு.க பொறுப்பாளர்

‘காருக்கு வழிவிடாத கர்நாடக பஸ்!’ - அடித்து நொறுக்கிய வாணியம்பாடி தி.மு.க பொறுப்பாளர்
‘காருக்கு வழிவிடாத கர்நாடக பஸ்!’ - அடித்து நொறுக்கிய வாணியம்பாடி தி.மு.க பொறுப்பாளர்

காருக்கு வழிவிடாமல் சென்ற கர்நாடக அரசுப் பேருந்தை அடித்து நொறுக்கியதோடு, ஓட்டுநரையும் கொடூரமாகத் தாக்கிய வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் தலைமையிலான கும்பலை, போலீஸார் தேடி வருகின்றனர்.

வேலூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு பெங்களூருவுக்குப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. வழியில், பேருந்தைப் பின்தொடர்ந்து அதிவேகமாகச் சென்ற கார், ஹாரன் அடித்து முந்திச் செல்ல முயன்றது. காருக்கு, வழிவிடாமல் சில கிலோ மீட்டர் தூரத்துக்குப் பேருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. காரில் வந்த கும்பல் ஆத்திரமடைந்து, வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் அருகில் பேருந்தை வழிமறித்தது. பேருந்து ஓட்டுநரை கீழே இழுத்து, ஆயுதங்களால் காரில் வந்த கும்பல் தாக்கியுள்ளது. பேருந்து மீதும் கற்களை வீசிச் சேதப்படுத்தினர். இதில், பேருந்து கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

தாக்குதலில், 57 வயதான ஓட்டுநர் குமரவேலுக்கு தலை, முகம், கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து, காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. தகவலறிந்ததும், வாணியம்பாடி டி.எஸ்.பி முரளி தலைமையிலான தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த ஓட்டுநரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பயணிகள், மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து, ஓட்டுநர் கொடுத்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

விசாரணையில், கர்நாடகப் பேருந்தை அடித்து நொறுக்கி ஓட்டுநரை தாக்கியது, வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையிலான கும்பல் எனத் தெரியவந்தது. அவர் உட்பட ராஜேஷ், சிவா, அப்பு, பிரவீண் ஆகிய 5 பேர் மீது 10 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜேஷ், சிவா ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார், தி.மு.க நகரப் பொறுப்பாளர் சாரதிகுமார் உட்பட மேலும் மூன்று பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.