Published:Updated:

காதல் கணவனை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி! - ஓராண்டுக்குப் பின்னர் தஞ்சையில் கைது

காதல் கணவனை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி! - ஓராண்டுக்குப் பின்னர் தஞ்சையில் கைது
காதல் கணவனை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி! - ஓராண்டுக்குப் பின்னர் தஞ்சையில் கைது

தஞ்சாவூர் அருகே, காதல் கணவனை கடந்த ஒரு ஆண்டுக்கு முன், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்து, வடிகால் குழாயில் புதைத்த மனைவி உட்பட 4 பேரை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

மதுரை மாவட்டம் திருமால்புரம் அருகே உள்ள மாரநேரிவாரியேந்தல் பகுதியைச் சேர்ந்தவர், திருமலைசாமி. இவரது மனைவி தங்கம்மாள். இவர்களது மகன் இளஞ்செழியன், தஞ்சாவூரில் இருந்துகொண்டு, அம்மாபேட்டையைச் சேர்ந்த கட்டட மேஸ்திரியான சரவணன் என்பவரிடம் வேலைபார்த்துவந்தார். இதனால் சரவணன், வேலை தொடர்பாக இளஞ்செழியனை அடிக்கடி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, சரவணனின் அக்கா மகளான ரேவதிக்கும், இளஞ்செழியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 2012-ம் ஆண்டு, இளஞ்செழியனும் ரேவதியும் தருமபுரிக்குச் சென்று திருமணம் செய்துகொண்டு தஞ்சை வெட்டுகார தெருவில் வசித்துவந்தனர். அவர்களுக்கு நித்தியாஸ் என்ற 6 வயது ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், இளஞ்செழியனுக்கு தன்னுடன் சேர்ந்து கட்டட வேலைசெய்த அம்மாபேட்டை அருகே உள்ள பெட்டுவாச்சாவடியைச் சேர்ந்த இளவாளன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து, இளவாளனை அடிக்கடி இளஞ்செழியன் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ரேவதிக்கும் இளவாளனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இளஞ்செழியன் கட்டட வேலை தொடர்பாக கடந்த 2017-ம் ஆண்டு தஞ்சையிலிருந்து மதுரைக்கு சென்றுவிட்டார்.  அதனால், வீட்டில் தனியாக இருந்த ரேவதியுடன், இளவாளனுக்கு நெருக்கம் அதிகமானது. விடுமுறை நாள்களில் இளஞ்செழியன் தஞ்சையில் உள்ள தனது மனைவி ரேவதி மற்றும் குழந்தைகளைப் பார்க்க வீட்டுக்கு வருவார். அப்போது, இளவாளன் அடிக்கடி வீட்டுக்கு வருவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், இளஞ்செழியன், குடிபோதையில் தனது மனைவி ரேவதியைத் திட்டியுள்ளார். 

இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த இளஞ்செழியன், மதுரையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தங்கி வேலை செய்துவந்தார். இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி, ரேவதி தனது கணவர் இளஞ்செழியனை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, 'இனிமேல் சண்டை போட வேண்டாம். சேர்ந்து வாழ்வோம்' என  பொங்கல் விடுமுறைக்கு தஞ்சைக்கு வரும்படிக் கூறினார். இதைக் கேட்டதும் இளஞ்செழியன் தஞ்சைக்கு வந்தார். அப்போது இளவாளன், மது அருந்துவதற்கு இளஞ்செழியனை அழைத்துள்ளார். இவர்களுடன் அரிதுவாரமங்கலத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரும் சேர்ந்துகொள்ள, 3 பேரும் மது அருந்தியுள்ளனர். இளஞ்செழியனுக்கு போதை தலைக்கு ஏறியதும், அங்கு மறைந்திருந்த ரேவதி, இளவாளன், கலியபெருமாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து, துண்டால் இளஞ்செழியன் கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர். 

 அதன்பின்னர், தங்களது நண்பரான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பருத்திவிடுதியைச் சேர்ந்த மணி என்ற ஆட்டோ டிரைவரை செல்போன் மூலம் அழைத்தனர். நள்ளிரவு ஆட்டோ வந்தவுடன், இளஞ்செழியன் உடலை போர்வையில் சுற்றி ஆட்டோவில்   எடுத்துச்சென்று, வல்லம் அருகே மின்னாத்துார் ஏரி அருகேயுள்ள தண்ணீர் வடிகால் குழாயில்  உடலைத் திணித்துவைத்தனர். துர்நாற்றம் எடுக்காமல் இருக்கவும், பிரேதத்தை நாய்கள் இழுத்துச் செல்லாமல் இருக்கவும், வடிகால் குழாயின் இரண்டு பகுதியிலும் நிறைய மண்ணை வைத்து அடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். இந்நிலையில், தஞ்சை சென்ற மகன் நீண்ட நாள்களாக வீட்டுக்கு வராமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த தாய் தங்கம்மாள், இளஞ்செழியனின் செல்போனில் தொடர்புகொண்டு பார்த்தார், எடுக்கவில்லை. இளஞ்செழியனின் மனைவி ரேவதியிடம் கேட்டபோது, எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ம் தேதி, அம்மாபேட்டை போலீஸில் மகனைக் காணவில்லை என்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, வாலிபர் மாயம் என்று வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தார். 

போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், தங்கம்மாள் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல்செய்தார். மதுரை உயர் நீதிமன்றம்,  காணாமல் போன இளஞ்செழியனை உடனே கண்டு பிடிக்கும்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாபேட்டை போலீஸாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, அம்மாபேட்டை போலீஸார் இளஞ்செழியன் செல்போன் எண்ணுக்கு வந்த எல்லா அழைப்புகளையும் சோதனைசெய்தனர். மேலும், இளஞ்செழியன் மனைவி ரேவதியின் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, ரேவதியிடம் போலீஸார் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். அத்துடன், இளஞ்செழியனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலைசெய்து, உடலை மின்னாத்தூர் ஏரி அருகே வடிகால் குழாயில் மறைத்து வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், உடலைப் பார்த்தபோது,  ஓர் ஆண்டு காலம் ஆனதால், இளஞ்செழியன் உடல் வெறும் எலும்புக் கூடாக இருந்தது. இதனால், சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்ய டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து, இளஞ்செழியன் மனைவி ரேவதி, இளவாளன், அவரது நண்பர்கள் கலியபெருமாள், ஆட்டோ டிரைவர் மணி ஆகிய 4 பேரையும் கைதுசெய்து விசாரித்துவருகிறார்கள்.