Published:Updated:

`நயவஞ்சகமாக ஏமாத்திட்டாங்க!'- 8 மாதக் குழந்தையுடன் தர்ணாவில் பெண் இன்ஜினீயர்

எஸ்.மகேஷ்
`நயவஞ்சகமாக ஏமாத்திட்டாங்க!'- 8 மாதக் குழந்தையுடன் தர்ணாவில் பெண் இன்ஜினீயர்
`நயவஞ்சகமாக ஏமாத்திட்டாங்க!'- 8 மாதக் குழந்தையுடன் தர்ணாவில் பெண் இன்ஜினீயர்

சென்னை நொளம்பூரில் கணவருடன் சேர்த்துவைக்கக்கோரி, 8 மாதக் கைகுழந்தையுடன் இன்ஜினீயர் பிரணிதா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை நொளம்பூர் 4-வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி. தி.மு.க பிரமுகரான இவரின் வீட்டில் நேற்று காலை கைக்குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்ததும், நொளம்பூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவரின் பெயர் பிரணிதா (32). ரகுபதியின் மகன் தினேஷின் மனைவி என்று தெரியவந்தது. காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம், பல மணி நேரம் நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பிரணிதா, இரவு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

என்ன நடந்தது என்று பிரணிதாவின் அப்பா பவலணனிடம் கேட்டோம். ``நான் வங்கியில் வேலை பார்த்து ஓய்வுபெற்றுவிட்டேன். ஷெனாய் நகரில் குடியிருந்துவருகிறேன். என்னுடைய மகள் பிரணிதாவுக்கும் தினேஷுக்கும் கடந்த 2009-ல் திருமணம் நடந்தது. பிரணிதா, இன்ஜினீயரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துவந்தார். 2009-ல் 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினார். ஸ்கூலில் முதல் மதிப்பெண் எடுத்தவர். திருமணத்துக்குப் பிறகு அவரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. 

இரண்டு முறை என்னுடைய மகளிடம் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தினேஷ். இதனால் பிரணிதா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து, கணவர் வீட்டுக்குச் சென்றார் பிரணிதா. 

2017-ல் பிரணிதா கர்ப்பமடைந்தார். அதன்பிறகு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கை தினேஷ் வாபஸ் பெற்றார். 25.5.2018-ல் குழந்தை பிறந்தது. எனது மகளையும் பேரனையும் தினேஷ் வீட்டுக்கு அழைத்துச்செல்லாமல் காலம் கடத்திவந்தார். இதனால், பிரணிதா, பேரன் ரோகித், நான், என் மனைவி ஆகியோர் தினேஷ் வீட்டுக்குச் சென்றோம். அப்போது அவர்கள் எங்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. 

வீட்டுக்குள்  குழந்தையுடன் பிரணிதா அமர்ந்திருந்தபோது உடைமைகளை கணவர் வீட்டினர் தூக்கிவீசினார்கள். அதன்பிறகு பிரணிதாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து, கைக்குழந்தையுடன் வெளியில் தள்ளினர். இதனால்தான் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் பிரணிதா. அப்போது அங்கு வந்த நொளம்பூர் போலீஸார், தினேஷிக்கு ஆதரவாக நடந்துகொண்டனர். இரவில் வந்த போலீஸார் தர்ணாவில் ஈடுபட்டால் பிரணிதாவை கைது செய்வோம் என மிரட்டினர். அதற்கு எங்களை குடும்பத்தோடு கைது செய்யுங்கள் என்று போலீஸாரிடம் கூறினோம். அதன்பிறகு குழந்தையை பனியில் வைத்திருக்காதீர்கள். நாளை காலை பேசிக் கொள்வோம் என்று சமரசப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டனர். 

தினேஷ், அவரின் அப்பா ரகுபதி மற்றும் குடும்பத்தினர் எங்களை நயவஞ்சகமாக ஏமாற்றிவிட்டார்கள். தி.மு.க. பிரமுகர் என்பதால் போலீஸாரும் அவர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்கின்றனர். ரகுபதியும் தினேஷும் திருநின்றவூரில் செங்கல் சூளை நடத்திவருகின்றனர். இன்ஜினீயரிங் படித்ததாகக் கூறினார்கள். ஆனால், அதிலும் அரியர்ஸ் இருக்கிறது. எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்" என்றார் கண்ணீருடன். 

தினேஷிடம் பேசினோம். ``எனக்கும் பிரணிதாவுக்கும் திருமணம் நடந்த சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் என்று கூறி அவர் பிரச்னை செய்தார். அடிக்கடி தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவார். அதன்பிறகு எங்கள் வீட்டுக்கு வருவார். இப்படியே சென்ற என்னுடைய வாழ்க்கையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்பிறகு எங்கள் வீட்டுக்கு வந்த பிரணிதா சில மாதங்கள் இருந்தார். பிறகு தனிக்குடித்தனம் என்று தகராறு செய்துவிட்டு அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டார். பிரணிதாவின் குடும்பத்தினரால் நானும் என்னுடைய குடும்பத்தினரும் பல்வேறு சங்கடங்களையும் அவமானத்தையும் சந்தித்துள்ளோம். 

திருமண முடிந்த நாளிலிருந்து இந்நாள் வரை என்னுடைய வாழ்க்கையே வழக்குகளில் ஆஜராகுவதிலேயே கடந்து செல்கிறது. நீதிமன்றம், போலீஸ் நிலையம் என அலைவதால் தொழிலைச் சரிவர கவனிக்கவில்லை. பி.இ படிப்பில் எனக்கு அரியர்ஸ் இருப்பதை பிரணிதா குடும்பத்தினர் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தினர். கடந்த 2018-ல் வீட்டுக்கு வந்த பிரணிதா தவறுகளை மன்னித்துவிடும்படி கூறினாள். அவரின் பெற்றோரும் மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகு நாங்கள் இருவரும் சில மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தோம். பிரணிதா கர்ப்பமடைந்தார். எங்களுக்கு சந்தோஷம். குழந்தை பிறந்தபோதுகூட நான்தான் ஆஸ்பத்திலியில் பிரணிதாவை அருகிலிருந்து கவனித்தேன். ரோகித்துக்கு செயின் வளையல் எல்லாம் ஆசையாக வாங்கி அணிவித்தோம்.

நீதிமன்றத்தில் நடந்த விவாகரத்து வழக்கை குழந்தைக்காகவும் பிரணிதாவுக்காகவும் வாபஸ் பெற்றேன். குழந்தை பிறந்தபிறகு பிரணிதாவின் வீட்டுக்கு ஆசையாக நான் சென்றபோது என்னை அவர்கள் அவமானப்படுத்தினார்கள். குழந்தைக்காகவும் மனைவிக்காகவும் பொறுத்துக் கொண்டேன். ஆனால், என்னையும் என் குடும்பத்தினரையும் தரக்குறைவாகப் பேசினார்கள். ஏன் என்னை ஆண்மை இல்லாதவன் என்றுகூட திட்டினார்கள். இந்தச் சமயத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த வழக்கில் நான் முன்ஜாமீன் பெற்றுள்ளேன்.

பிரணிதா மற்றும் அவரின் குடும்பத்தினரின் நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட நான், மீண்டும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சமயத்தில் என்னையும் என் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தத்தான் கைக்குழந்தையுடன் வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பிரணிதாவின் அம்மா சியாமளா, பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார். அப்பா பவலணன், வங்கியில் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வில் இருக்கிறார். பவலணன் செய்த தில்லாலங்கடி வேலைகளை வெளியில் சொன்னால் அவர்களுக்குத்தான் அசிங்கம்" என்றார். 

இதுகுறித்து நொளம்பூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``நாங்கள் யாருக்கும் ஆதரவாகச் செயல்படவில்லை. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரித்தோம். அவர் நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. இதனால் சமரசப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்" என்றனர்.