Published:Updated:

கம்ப்யூட்டர் லாக்கர் உடைப்பு; ஹார்டு டிஸ்க் அபேஸ்!- போலீஸுக்குக் கொள்ளையர்கள் சவால்

எஸ்.மகேஷ்
கம்ப்யூட்டர் லாக்கர் உடைப்பு; ஹார்டு டிஸ்க்  அபேஸ்!- போலீஸுக்குக் கொள்ளையர்கள் சவால்
கம்ப்யூட்டர் லாக்கர் உடைப்பு; ஹார்டு டிஸ்க் அபேஸ்!- போலீஸுக்குக் கொள்ளையர்கள் சவால்

சென்னை அண்ணா நகரில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. போலீஸுக்குச் சவால்விடும் வகையில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 

தொழிலதிபர்

சென்னை அண்ணாநகர், எல்.பிளாக், 1-வது பிரதான சாலையைச் சேர்ந்தவர், சத்யநாராயணன், (65). இவர் பெரம்பூரில் இருசக்கர வாகன `ஷோ ரூம்’ வைத்துள்ளார். இவரின் மனைவி, ஸ்ரீதேவி, (53). கணவனும் மனைவியும் ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்குக் கடந்த வாரம் சென்றனர். இதனால் வீட்டில் யாரும் இல்லை. அதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டுத் தப்பிவிட்டனர். நேற்று காலை வீட்டு வேலைக்கு வந்தவர்கள், கதவு உடைக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பிறகு, சத்யநாராயணனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். 

சத்யநாராயணன் வீட்டில் கம்ப்யூட்டர் லாக்கர் உடைக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் லாக்கரை எப்படி உடைத்தார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. லாக்கரிலிருந்த 100 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக கைக்கடிகாரம், 1 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர். வீட்டில் யாரும் இல்லாததால் சர்வசாதாரணமாகக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். இதனால் படுக்கையறையில் பொருள்கள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஒவ்வோர் அறையாகச் சென்று ஆய்வு செய்தனர். கைரேகைகளையும் பதிவு செய்தனர். பிறகு, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட யார் என்பதை கண்டறிய அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இன்டர்நெட் இணைப்பை முதலில் துண்டித்துள்ளனர். அதன்காரணமாக சிசிடிவி கேமராவில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் கொள்ளையர்களின் முகம் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதைக் கொண்டு கொள்ளையர்களைத் தேடி வருகிறோம். பொதுவாக வெளியூர் செல்பவர்கள், போலீஸ் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றால் ரோந்துப் பணியில் ஈடுபடும் போலீஸார் அந்த வீட்டை ஸ்பெஷலாகக் கண்காணித்திருப்பார்கள். கொள்ளைச் சம்பவமும் நடந்திருக்காது'' என்றனர். 

ஹார்டு டிஸ்க் மாயம் 

இந்தக் கொள்ளைச் சம்பவத்தையடுத்து அண்ணாநகர், எல் பிளாக், 26 வது தெருவில் உள்ள முரளி கிருஷ்ணன் என்பவரின் வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இவரின் வீட்டில் நேற்றிரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்களை கொள்ளையடித்தனர். பிறகு போலீஸிடம் சிக்கிக் கொள்ளாமலிருக்க வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் ஹார்டு டிஸ்கையும் கையோடு எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் இந்தக் கொள்ளைச் சம்பவத்திலும் கொள்ளையர்கள் யார் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டுள்ளனர். தற்போது சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் இருப்பதால் கொள்ளையர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் போலீஸார் உள்ளனர். 

தனியார் நிறுவனம் 

அண்ணாநகர் எல் பிளாக் 21 வது தெருவில் உள்ள தனியார் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 5 லட்சம் ரூபாயையும் சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் தூக்கிச் சென்றுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம்குறித்து அண்ணாநகர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அடுத்தடுத்து மூன்று இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கொள்ளை நடந்த வீதம் ஒரே மாதிரியாக உள்ளதால் மூன்று இடங்களிலும் ஈடுபட்டது ஒரே கொள்ளைக் கும்பலாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் போலீஸுக்கு சவால்விடும் வகையில் கொள்ளையர்களின் செயல்பாடுகள் உள்ளன.