Published:Updated:

`காவல்துறையினர் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!’ - கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேதனை

`காவல்துறையினர் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!’ - கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேதனை
`காவல்துறையினர் மனம் புண்படும்படி பேசுகிறார்கள்!’ - கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேதனை

சென்னையில் கடந்த வாரம் காவலர்கள் திட்டியதாக டிராவல்ஸ் ஓட்டுநர் வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. அதைக் கண்டித்தும், காவலர்களால் ஓட்டுநர்கள் தரக்குறைவாக நடத்துவதையும் அரசுக்கும் பொதுமக்களுக்கும் விளக்கும் விதமாக இன்று தமிழ் நாடு முழுவதும் கால்டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள் மற்றும் வாடகை பேன்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் ஆட்டோ ஸ்டேண்டு, பேருந்து நிறுத்தங்களிலும் தனியார் வாகன ஓட்டுநர்கள் அமைதியான முறையில் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள்.

இதுபற்றி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் சேலம் மாவட்ட இணைச் செயலாளர் குமரேசன், ``நாங்களும் மற்றவர்களைப்போல பெற்றோர்களால் ஒழுக்கமாக வளர்க்கப்பட்டுப் படித்து டிரைவர் தொழிலுக்கு வந்திருக்கிறோம். இரவு, பகல் பாராமல் கண் விழித்து ஒரு நொடிப் பொழுது கூடக் கவனக்குறைவு இல்லாமல் எங்க உயிரைப் பணையம் வைத்து பயணிகளை பத்திரமாகக் கொண்டு போய் சேர்க்கிறோம்.

எங்க ஒரு உயிரை நம்பி குறைந்தது 50 உயிர்கள் இருக்கிறது. எங்களோடு பயணிக்கும் பொதுமக்கள் அன்பாகவும், மரியாதையோடும் எங்களை நடத்துவார்கள். ஆனால், அவர்களுக்கு முன்பு காவல்துறையினர் வாகனத்தை நிறுத்தி ஓரங்கட்டச் சொல்லி எங்களை ஒரு திருடர்களை போல வாடா.. போடா... என்று ஒருமையில் பேசி மனதைப் புண்படுத்துவார்கள். எங்கள் மீது தவறே இல்லை என்றால் கூட கையூட்டு வாங்கி அனுப்புவார்கள்.

இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சுற்றுலா மற்றும் கால்டாக்ஸி ஓட்டுநர்களும் உளவியலாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்தப் பிரச்னை கேரளா மாநிலத்தில் ஓரளவுக்கு இல்லை. தமிழக அரசு இதில் தலையிட்டு சக மனிதர்களைப் போல மரியாதையாக நடத்த நடவடிக்கை எடுப்பதோடு ஒவ்வொரு காவல்துறை லிமிட்டிலும் கையூட்டு வாங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்றார்.