Published:Updated:

`கருணைக் கொலை செய்துவிடுங்கள்!’ - ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால் முருகனுக்கு மிரட்டல்?

லோகேஸ்வரன்.கோ
`கருணைக் கொலை செய்துவிடுங்கள்!’ - ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால் முருகனுக்கு மிரட்டல்?
`கருணைக் கொலை செய்துவிடுங்கள்!’ - ஆளுநருக்குக் கடிதம் அனுப்பியதால் முருகனுக்கு மிரட்டல்?

``எங்களை விடுதலை செய்யாவிட்டால் கருணைக் கொலை செய்துவிடுங்கள் அல்லது சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து மரணிக்க அனுமதி கொடுங்கள்’’ என்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் முருகன், ஆளுநருக்கு இரண்டாவது முறையாகப் 14 பக்கங்கள் கொண்ட கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்தக் கடிதம் அனுப்பியதால், ``சிறைத்துறை டி.ஐ.ஜி தரப்பிலிருந்து முருகனுக்கு பல்வேறு தொல்லைகள் வருவதாக’’ அவரின் வழக்கறிஞர் புகழேந்தி திடுக்கிடும் தகவல்களைக் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் நளினி, அவரின் கணவர் முருகன், பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரைக் கடிதம் அனுப்பி வைத்தது. அந்தக் கடிதம் தொடர்பாக ஆளுநர் இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறார். இதனால் சிறையில் உள்ளவர்கள் மன உளைச்சலில் உள்ளனர். வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், கடந்த மாதம் 19 மற்றும் 20-ம் தேதி ஆகிய இரண்டு நாள்கள் திடீரென உண்ணாவிரதம் இருந்தார். கடந்த மாதம் 19-ம் தேதி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு 4 பக்க கடிதம் எழுதியிருந்தார் முருகன். 

அதில், `இவ்வழக்கில் விசாரணை செய்த புலனாய்வு அதிகாரிகள் மற்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள் கூட ராஜீவ்காந்தி கொலையில் எங்களுக்குச் சம்பந்தமில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனடிப்படையில், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை மனுவில் கையெழுத்திடாமல், நீங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாகக் காலதாமதம் செய்கிறீர்கள். எங்கள் மீது சந்தேகமிருந்தால், உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். இவ்வழக்கில் எங்களுக்குத் தொடர்பில்லை என்று நாங்கள் நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். அப்படி இல்லையென்றால், சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து மரணமடைகிறோம். 

உயிரை மாய்த்துக்கொள்ள எங்களுக்கு, நீங்கள் அனுமதி தர வேண்டும் என்று கூறியதோடு, ராஜீவ் கொலையில் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகப் பல்வேறு தகவல்களையும் முருகன் கடிதத்தில் கூறியிருந்ததாகவும், அந்த கடிதத்தை சிறைக் கண்காணிப்பாளர் ஆளுநருக்கு அனுப்பியதாகவும்’ முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி, அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில், வேலூர் சிறையில் கடந்த 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நான்கு நாள்கள், முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவதாக வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ``சிறையில் முருகனை 5-ம் தேதி சந்தித்தேன். கருணைக் கொலை செய்யுங்கள் அல்லது தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்து இறந்துபோவதற்கு அனுமதி கொடுங்கள் என்று 14 பக்கங்கள் கொண்ட மனுவை எழுதி 31-ம் தேதி ஆளுநருக்கு மீண்டும் கடிதம் அனுப்பியிருக்கிறார்.

ஆளுநருக்கு மனு அனுப்பியது ஏன்? என்று கேள்வி எழுப்பி வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி பிரச்னைகள் செய்து முருகனுக்கு பல்வேறு வகையில் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதாக’’ வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.