Published:Updated:

குப்பையில் பெண்ணின் உடல்பாகங்கள்- சிக்கிய சினிமா இயக்குநர் #Chennai

குப்பையில் பெண்ணின் உடல்பாகங்கள்- சிக்கிய சினிமா இயக்குநர் #Chennai
குப்பையில் பெண்ணின் உடல்பாகங்கள்- சிக்கிய சினிமா இயக்குநர் #Chennai

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருநகர மாநகராட்சிக்குச் சொந்தமான பெருங்குடி குப்பை கிடங்கில், துண்டிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு கால்கள், கை ஆகியவை கிடந்தன. இந்த உடல் பாகங்களுக்குச் சொந்தமான பெண் யார் என்று போலீஸார் விசாரித்துவந்த நிலையில், தற்போது அந்த உடல் பாகங்கள் தொடர்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். 

இந்த உடல் பாகங்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீஸார் விசாரணை நடத்தினர். மற்ற உடல் பாகங்கள் தொடர்பாகவும், சென்னையில் மாயமான பெண்கள் தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் காணாமல் போன பெண்கள் தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள், நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியா என்பவரது உடல் எனத் தெரிய வந்தது. அவருக்கு வயது 38. இவரின் கணவர் தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். திரைப்பட இயக்குநராக இருக்கிறார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னை ஜாஃபர்கான் பேட்டையில் வசித்து வருகின்றனர்.

தன் மனைவி மீது கொண்ட சந்தேகத்தின் காரணமாக அவரைக் கொலை செய்து உடல் பாகங்களை வெட்டி வீசியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.  இதன் அடிப்படையில் போலீஸார் தற்போது சந்தியாவின் கணவரிடம் விசாரித்து வருகின்றனர். அவரிடம் கொலைக்கான காரணங்கள் தொடர்பாகவும், மற்ற உடல் பாகங்கள் தொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் தொடர்பாக போலீஸாரின் நீண்ட விசாரணைக்குப் பின்னர் இந்த க்ளூ கிடைத்துள்ளது.