Published:Updated:

`கொலை செய்துவிட்டு போன் செய்தார் பாலகிருஷ்ணன்!' - சந்தியாவின் பெற்றோர் அதிர்ச்சித் தகவல்

`கொலை செய்துவிட்டு போன் செய்தார் பாலகிருஷ்ணன்!' - சந்தியாவின் பெற்றோர் அதிர்ச்சித் தகவல்
`கொலை செய்துவிட்டு போன் செய்தார் பாலகிருஷ்ணன்!' - சந்தியாவின் பெற்றோர் அதிர்ச்சித் தகவல்

சென்னையில் கொலைசெய்யப்பட்ட சந்தியா, கணவர் பாலகிருஷ்ணன் குறித்து அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளனர், சந்தியாவின் பெற்றோர்.  

சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் வீசப்பட்ட பெண்ணின் உடல்பாகங்கள் குறித்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் யார் என்பதைக் கண்டறிந்த போலீஸார், அவரை கொலைசெய்தவரையும் கைதுசெய்துள்ளனர். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் சந்தியா. அவரின் கணவர் பெயர் சினிமா தயாரிப்பாளர், இயக்குநருமான பாலகிருஷ்ணன் என்ற தகவலை போலீஸார் தெரிவித்தனர்.  இந்த நிலையில், சந்தியாவின் அப்பா ராமசந்திரன், அம்மா பிரசன்னா ஆகியோரிடம் பள்ளிக்கரணை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இருவரும் பரபரப்பான தகவலைத் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சந்தியா கொலைகுறித்த தகவலை அவரின் அப்பா ராமசந்திரன், அம்மா பிரசன்னா ஆகியோருக்கு தெரிவித்தோம். உடனடியாக நாகர்கோவிலிருந்து சென்னைக்கு வந்தனர். துண்டிக்கப்பட்ட அவரின்  உடல் பாகங்களைப் பார்த்து, அவர்கள் கண்ணீர்விட்டனர். பிறகு அவர்கள், சந்தியா கடந்த மாதம் எங்களுடன் போனில் பேசினாள். அப்போது, கணவர் பாலகிருஷ்ணன், சந்தியாவுக்கு கையில் பச்சை குத்த சிலரை வீட்டுக்கு அழைத்து வந்த தகவலைத் தெரிவித்து, கண்ணீர்விட்டுக் கதறியதாகக் கூறினர். அதோடு, பாலகிருஷ்ணன் செய்த கொடுமைகளையும் எங்களிடம் தெரிவித்தனர். ராமகிருஷ்ணன், பிரசன்னா தெரிவித்த தகவல் அடிப்படையில் பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம்" என்றனர். 

சந்தியாவின் அப்பா ராமசந்திரன், டீ கடை நடத்திவருகிறார். மகள் இறந்த துக்கத்திலிருந்த அவருக்கு ஆறுதல் கூறினோம். அதன்பிறகு அவர் நம்மிடம், ``சந்தியாவுக்கும் பாலகிருஷ்ணனுக்கும் கடந்த 13/11/2000-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பத்திரிகை அச்சடித்து சிறப்பாக திருமணத்தை நடத்தினோம். திருமணத்துக்குப் பிறகு, சந்தியா தூத்துக்குடியில் டூவிபுரத்தில் குடியிருந்தார். அப்போது, அவரை அடித்து சித்ரவதைசெய்வார்.  சந்தேகப்பட்டு மொட்டைகூட அடித்துள்ளார். சித்ரவதையைத் தாங்க முடியாமல், வீட்டுக்கு வந்து அழுவாள். ஆனால் சந்தியா  குறித்து பாலகிருஷ்ணன் சொல்லும் தகவல்கள் அனைத்தும் பொய். என்னுடைய மகளை இப்படி அநியாயமாகக் கொலை செய்துவிட்டானே" என்றார் கண்ணீர் மல்க. 


சந்தியாவின் தங்கை கூறுகையில், என்னுடைய அக்காள் சந்தியா, கிறிஸ்துமஸ் தினத்தன்று வீட்டுக்கு வந்திருந்தார். 75 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக்கிட்டு சென்னைக்கு வந்தார். அதன்பிறகு, போனில் எங்களுடன் பேசினார். அக்காவை கொலைசெய்த பிறகு, எங்களுக்கு போன்செய்தார். அப்போது, சந்தியாவை வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கிறேன் என்று கூறினார். அதன்பிறகு, தூத்துக்குடி போலீஸில் பாலகிருஷ்ணன், சந்தியாவை அம்மா பிரசன்னா கடத்தியதாகப் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில், யூ டியூப் மூலம் பெண்ணின் கை, கால்கள் பாகங்கள்குறித்த செய்தியைப் பார்த்தபோதே எனக்கு சந்தேகம் இருந்தது. இப்போதுதான் எல்லா விவரமும் தெரியவந்துள்ளது. என்றார்.