Published:Updated:

`தோப்புக்கு வாங்கக் கடனை தர்றேன்' - உறவினரை நம்பிய தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்!

`தோப்புக்கு வாங்கக் கடனை தர்றேன்' - உறவினரை நம்பிய தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்!
`தோப்புக்கு வாங்கக் கடனை தர்றேன்' - உறவினரை நம்பிய தந்தை, மகனுக்கு நேர்ந்த சோகம்!

கீரனூர் அருகே தனது தோட்டத்துக்கு வந்தால், வாங்கிய கடனை திருப்பி தருவதாகக் கூறி தந்தை, மகன் இருவரையும் நம்ப வைத்துக் கழுத்தறுத்து உறவினர் கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீராச்சாமி (50). விராலிமலையில், பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவர் உறவினரான கீரனூர் அருகே களமாவூரைச் சேர்ந்த மூர்த்தி என்பவருக்குப் பல லட்சம் ரூபாய் வரையிலும் கடன் கொடுத்துள்ளார். வீராச்சாமி பலமுறை கொடுத்த பணத்தைக் கேட்கும்போதெல்லாம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். பல வருடங்கள் வரையிலும், பணம் தராததால், பணத்தை உடனே கொடுக்க வேண்டும் என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தனது தோட்டத்தை விற்று கடனைத் தருகிறேன் என்று மூர்த்தி கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில், எனது தோட்டத்துக்கு வாருங்கள் பேசி முடித்துக்கொள்வோம் என்று வீராச்சாமியை அழைத்துள்ளார். இதை நம்பிய வீராச்சாமி, மூர்த்தியைப் பார்க்க தன் மகன் முத்து மற்றும் சம்பந்தி கிள்ளனூரைச் சேர்ந்த திரிசங்கு அவரின் மகன் ஜெயராமன் ஆகியோர் களமாவூரில் உள்ள மூர்த்தியின் தோட்டத்துக்குச் சென்றனர். அங்கு மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் தயார் நிலையில் இருந்தார். அப்போது வீராச்சாமி பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், திடீரென மூர்த்தியின் ஆதரவாளர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால், வீராச்சாமியையும், தட்டிக்கேட்க முயன்ற மகன் முத்து, சம்பந்தி திரிசங்கு அவரின் மகன் ஜெயராமன் ஆகியோரை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த வீராச்சாமி அவரின் மகன் முத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்து கீரனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகவும், உயிருக்குப் போராடிய திரிசங்கு, ஜெயராமனை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ் சம்பவ இடத்துக்கு வந்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தார். வீராச்சாமிக்கு பணம் தருவதாகவும், தன்னுடைய தோட்டத்தை எழுதித்தருவதாக ஆசைவார்த்தைக் கூறி தனது தோட்டத்துக்கு வரவழைத்து கூலிப்படையினரை வைத்துத் திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்கு பதிந்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தந்தை, மகன் என இருவரையும் உறவினரே இரட்டைக்கொலை செய்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.