Published:Updated:

`சந்தியாவின் தலை எங்கே?’ - தேடி அலையும் போலீஸ் 

`சந்தியாவின் தலை எங்கே?’ - தேடி அலையும் போலீஸ் 
`சந்தியாவின் தலை எங்கே?’ - தேடி அலையும் போலீஸ் 

சென்னையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சந்தியாவின் தலையை போலீஸார் தேடிவருகின்றனர். அதுதொடர்பாக சந்தியாவின் கணவராக சினிமா இயக்குநரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கடந்த 21-ம் தேதி மாலை 6 மணியளவில் பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை கிடந்தது. அதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தியதில் துண்டிக்கப்பட்ட கை, கால்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த சந்தியாவின் உடல் பாகங்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரின் கணவரான தூத்துக்குடி, டூவிபுரத்தைச் சேர்ந்த சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை போலீஸார் கைதுசெய்தனர். 

சந்தியாவின் மற்ற உடல்பாகங்கள் எங்கே என்று பாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவர், ஈக்காட்டுத்தாங்கல் பாலத்தின் கீழே உள்ள அடையாற்றிலும் எம்.ஜி.ஆர்.நகர், கே.கே.நகர் பகுதிகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வீசியதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய இடங்களில் போலீஸார் தேடியபோது தலை, இடுப்புக்கும் மேல்பகுதியைத் தவிர மற்ற உடல்பாகங்கள் அழுகிய நிலையில் கிடைத்தன. சந்தியாவின் தலை எங்கே என்று தொடர்ந்து போலீஸார் பாலகிருஷ்ணன் கூறிய இடங்களில் தேடிவருகின்றனர். 

கொலை வழக்கில் சிக்கிய பாலகிருஷ்ணன், சினிமாவில் கதை சொல்வதுபோல மனைவியைக் கொன்ற தகவலைத் போலீஸாரிடம் விளக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையின்போது போலீஸாருக்கு பாலகிருஷ்ணன் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். மனைவியை ஏன் துண்டு, துண்டாக வெட்டி கூறுபோட்டீர்கள் என்ற கேள்வியைப் போலீஸார் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது அவரின் முகம் கோபத்தில் மாறியதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``பாலகிருஷ்ணனிடம் விசாரித்தபோது அவர் எதையும் மறைக்காமல் நடந்த தகவல்களைக் கூறிக்கொண்டிருந்தார். சந்தியாவின் உடலை ஏன் துண்டு, துண்டாக வெட்டினீர்கள் என்று கேட்டபோது அதற்கு அவர் பதிலளிக்காமல் அமைதியானார். சிறிது நேரத்துக்குப் பிறகு மனைவி மீது எனக்கு எந்தளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால், அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டார். தன் விருப்பம்போல வாழ்ந்தார்

அதைத் தட்டிக்கேட்டால் நான்தான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினார். அதோடு எங்கள் இருவருக்கும் இடையே உள்ள வயது வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி ஏளனமாக என்னை பேசினார். அவள் அழகாக இருப்பதைக் காரணம் காட்டி என்னை பல வகையில் நிராகரித்தார். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை கடுமையாக அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்’’ என்று கூறியதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

மனைவியைக் கொடூரமாக கொலை செய்த பாலகிருஷ்ணன், அதன் பிறகு சர்வசாதாரணமாகவே இருந்துள்ளார். அவரின் இந்த மனநிலை குறித்து போலீஸார் கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு பாலகிருஷ்ணன் சிரித்துள்ளார். சந்தியா கொலை செய்யப்பட்ட தகவலையறிந்து அவரின் பெற்றோர், தங்கை மற்றும் உறவினர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்குப் பதறியபடி நாகர்கோவிலிருந்து வந்திருந்தனர். அவர்களிடம் சந்தியாவின் உடல் பாகங்களைப் போலீஸார் காண்பித்தனர். அப்போது, சந்தியாவின் அம்மா பிரசன்னா, `உன்னை இந்த நிலைமையில் பார்க்கவா சென்னைக்கு அனுப்பி வைத்தேன்' என்று கதறியுள்ளார். அவருக்குப் போலீஸாரும் உறவினர்களும் ஆறுதல் கூறியுள்ளனர். 

போலீஸ் விசாரணையின்போது பாலகிருஷ்ணன் பதற்றமில்லாமலேயே இருந்துள்ளார். அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் போலீஸாருக்கு அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. சந்தியாவின் கொலை வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் 16 நாள்களுக்குப் பிறகு நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்