Published:Updated:

என் மகள் கலைஞர் டி.வி. வாசலைக் கூட மிதிச்சது இல்லை!

ராஜாத்தி அம்மாள் வாக்குமூலம்

##~##

னிமொழியை அரசியலில் ஓர் அந்தஸ்துக்குக் கொண்டு வராமல் ஓய மாட்டார்கள் போல அவரது ஆதரவாளர்கள்! 

திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தபோது, சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பைப் போலவே, தடபுடலாகக் கொண்டாடப்பட்ட அவரது பிறந்த நாளும் கட்சிக்குள் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி கைதான தினம் தொடங்கியே, 'தன் மகளுக்குக் கட்சியில் முக்கியப் பதவி வேண்டும்’ என்று கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்துவந்தார் ராஜாத்தி அம்மாள் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், அவரது குரலுக்கு இன்னமும் சாதகமான பதில் வரவில்லை. அதனால், கடந்த 5-ம் தேதி கனிமொழியின் பிறந்தநாளை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொண்டாடி, அந்தக் கோரிக்கையை மேடையிலேயே முழங்கி விட்டார்கள்.

என் மகள் கலைஞர் டி.வி. வாசலைக் கூட மிதிச்சது இல்லை!

விழா மேடையில் இசை நிகழ்ச்சி நடத்திய தாயன்பன், 'ராசாத்தி அம்மாளுக்குப் பிடித்தமான பாடல்’ என்று முன்னுரை கொடுத்து... 'முல்லை மலர் மேலே... மொய்க்கும் வண்டு போலே’ என்ற பாடலைப் பாட, புன்னகையுடன் ரசித்துக் கேட்டார் ராஜாத்தி அம்மாள். அடுத்து அவரது மனைவி விஜயா தாயன்பன், 'ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...’ என்ற பாடலை ரீ-மிக்ஸ் செய்து கனிமொழி புகழ் பாட, ஒட்டு​மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ரசித்தது.

முதலில் மைக் பிடித்த சற்குணபாண்டியன், ''கலைஞருக்கு இருக்கும் இலக்கியப் பண்புகள் அத்தனையும் கலைஞரின் வாரிசான கனிமொழிக்​குத்தான் இருக்கிறது. கனிமொழி தானாக அரசியலுக்கு வரவில்லை. அரசியல்தான் அவரை இழுத்து வந்தது'' என்று ஆரம்பித்து வைத்தார்.

அடுத்துப் பேசிய தூத்துக்குடி எம்.பி. ஜெயதுரை, ''கலைஞரின் மரபணு அப்படியே கனிமொழிக்குத்தான் இருக்கிறது. அவருக்குக் கட்சியில் முக்கியப் பதவி தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். பத்திரிகைகள் எதிர்பார்க்கின்றன(?!)'' என்று 'நச்’சென்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ராஜாத்தி அம்மாள், பேசுவதற்கு மிகவும் தயங்கினார். சிலர் பேசத் தூண்டவே மிகுந்த யோசனையுடன் மைக் பிடித்துப் பேசத் தொடங்கினார். ''இவ்வளவு எதிர்ப்புகளுக்கு(?) மத்தியிலும் என் மகள் கனிமொழி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கீங்க. உங்க எல்லோருக்கும் நன்றி. எங்களுக்குப் பக்கபலமா இவ்வளவு பேர் இருப்பீங்கன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை. செய்யாத தப்புக்கு என் பொண்ணு தண்டனையை அனுபவிச்சது. வேடிக்கை என்ன தெரியுமா? என் மகள் கலைஞர் டி.வி. வாசலைக்கூட மிதிச்சது இல்லை. ராசாவோட ஆபீஸுக்கும் போனது இல்லை. 2ஜி-யைப் பத்தி கனிக்கு எதுவுமே தெரியாது. ஆனா, திகார் ஜெயில்ல அந்தப் பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டது தெரியுமா? திகார் ஜெயில்ல உட்கார மேடை கிடையாது. சேர் கிடையாது. டேபிள் கிடையாது. தரையிலதான் உட்கார்ந்து இருக்கணும். படுக்க ஒரு பாய்கூட கொடுக்கலை. அந்த ரூம்ல கனியோட... எத்தனையோ ஆயிரக்கணக்கான பூச்சிகளும் இருந்துச்சி. அவ பட்ட கஷ்டத்தைச் சொல்ல ஒரு நாள் போதாது. ஒரு நாள் பார்த்தா.. கழுத்து வீங்கி இருக்கும். இன்னொரு நாள் உடலில் வீக்கம் இருக்கும். முகத்தில் கறுப்பு கறுப்பா இருந்த தடிப்பைப் பார்த்து எனக்கு வயிறு எரிஞ்சது...'' என்று பேசியவரால் அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மேடையிலேயே தேம்பித் தேம்பி அழ... அருகில் இருந்த விஜயா தாயன்பன் அவரது கையைப் பிடித்துத் தேற்றினார். கலங்கிய கண்களுடன் மீண்டும் மைக் பிடித்தவர், ''இப்படி எம்பொண்ணு எவ்வளவோ வேதனையை அனுபவிச்சிருக்கு. கட்சிக்காகவும் உறவுகளுக்காகவும்தான் தண்டனையை அனுபவிச்சா. இன்னைக்குக்கூட இந்த பிறந்த நாள் விழாவுல கலந்துக்க முடியாம டெல்லி கோர்ட்ல போய் உட்கார்ந்திருக்கு...'' என்று தழுதழுத்தபடி பேச்சை முடித்தார். அடுத்துப் பேசிய மற்றவர்களும்கூட, கனிமொழிக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வதை மறந்து போனாலும், 'கட்சியில் முக்கியப் பதவி கொடுக்க வேண்டும்’ என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

செங்கை சிவம் பேசியபோது, ''வட சென்னையில் இப்படி ஒரு கூட்டம் நடத்த முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பி​னார்கள். அவர்களுக்கு நல்ல பதில் சொல்லி இருக்கிறோம்'' என்றார்.

'கனிமொழிக்குப் பிறந்தநாள் கொண்டாடக் கூடாது என்று ஸ்டாலின் தரப்பில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. ஆனால், நிச்சயம் நடத்தியே தீர வேண்டும் என்று ராஜாத்தி அம்மாள் பிடிவாதம் பிடித்து ஜெயித்ததைத்தான் செங்கை சிவம் சுட்டிக் காட்டுகிறார்’ என்று கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

ஆஹா... ஆரம்பிச்சுட்டாங்க!

- தி.கோபிவிஜய், படங்கள்: என்.விவேக்