Published:Updated:

ஒரு செய்தி... ஒரு பத்திரிகை... ஒரு கொந்தளிப்பு..

ஒரு செய்தி... ஒரு பத்திரிகை... ஒரு கொந்தளிப்பு..

##~##

க்கீரன் இதழில் வெளியான கவர் ஸ்டோரி காரணமாக, தமிழகம் முழுவதும் அந்த இதழ் பற்றி எரிந்திருக்கிறது!   

ஜெயலலிதாவை விமர்சித்து எழுதிய கவர் ஸ்டோரி தாங்கி வந்த 'நக்கீரன்’ இதழ் வெளியான 7-ம் தேதி காலை... சென்னை  ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தில் ஆத்திரத்தோடு புகுந்த அ.தி.மு.க-வினர், காவலாளியைத் தள்ளிவிட்டு உள்ளே நிறுத்தி இருந்த கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள். அங்கிருந்த பொருட்களை எல்லாம் சேதப்படுத்திவிட்டு அவர்கள் புறப்பட்டுப் போக, பதற்றம் ஆகி அலுவலகத்தின் மெயின்கேட்டை அவசரமாகப்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு செய்தி... ஒரு பத்திரிகை... ஒரு கொந்தளிப்பு..

பூட்டினார்கள் ஊழியர்கள். தொடர்ந்து, படை படையாகத் திரண்டு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள், கேட் மூடப்பட்டு இருந்ததால் தெருவில் இருந்தபடியே கற்களை எடுத்து சர்... சர்ரென உள்ளே வீசினார்கள். நக்கீரனுக்கு எதிரான கோஷங்களைப் போடுவதும்...

அதன்  பிரதிகளைக் கிழித்து எரிப்பதும், உருவப் பொம்மை எரித்து பாடை கட்டியதும் தொடர்ந்து​கொண்டே இருந்தது. காலையில் தொடங்கிய எதிர்ப்புப் போராட்டம் மாலை வரை நடந்துகொண்டே இருந்தது. இதை, ஆங்காங்கே நின்று போலீஸார் வேடிக்கை பார்த்ததும் நடந்தது!

உஷ்ணம் கூடிக்கொண்டே இருந்த சமயத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஒரு படையோடு வந்தார். உடன் வந்தவர்கள் நக்கீரன் பிரதிகளைத் தீயீட்டுக் கொளுத்த, ''அம்மா படம் இருக்கு. பார்த்து எரிங்க...'' என்று பதறினார். உடனே அட்டையை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, எரித்தனர்.

ஒரு செய்தி... ஒரு பத்திரிகை... ஒரு கொந்தளிப்பு..

இந்தக் களேபரங்கள் நடந்தபோது, 'நக்கீரன்’ ஆசிரியர் மற்றும் உரிமையாளர் ஆர்.ஆர். கோபால் உள்ளேதான் இருந்தார். கொஞ்சம் இடைவெளி கிடைத்த சமயத்தில், அலுவலகத்தின் உள்ளே சென்றது மீடியா. பத்திரிகையாளர்களிடம் பேசிய கோபால், ''ஜெயலலிதாவைத் தவறாக எதுவும் எழுதவில்லை. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கையில் எடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்?'' என்றார். அதற்குள் மீண்டும் திரண்ட தொண்டர்கள் கற்களை வீச... உள்ளே இருந்த மீடியா ஆட்களும் சிக்கிக்கொண்டனர். ஒரு வழியாக, பக்கத்து மாடி வழியாகத் தப்பித்து வெளியேறினர்.

நக்கீரன் செய்திக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையனிடம் இருந்து காட்டமான அறிக்கை வெளியானது. ''ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வண்ணம், வடிகட்டிய பொய்ச்செய்தியை திட்டமிட்டுக் கெட்ட நோக்குடன் வெளியிட்டு இருக்கிறார்கள். நக்கீரனில் வெளியானது போல சம்பவம் நடக்கவே இல்லை. செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை உரிமையாளர் மற்றும் எடிட்​டோரியல் பொறுப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஒரு செய்தி... ஒரு பத்திரிகை... ஒரு கொந்தளிப்பு..

அடுத்த நாளும் களேபரம் ஓயவில்லை. அ.தி.மு.க. பிரமுகர் அன்பு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், மன உளைச்சலை ஏற்படுத்துதல், சட்டம் ஒழுங்கு பிரச்னையை உண்டாக்குதல், களங்கம் ஏற்படுத்துதல் உட்பட ஆறு பிரிவுகளில் கோபால் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். அதோடு, போராட்டம் நடத்திய அ.தி.மு.க-வினர் மீதும் வழக்கு போடப்பட்டு இருக்கிறது. நக்கீரன் அலுவலகத்தின் மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு ஆகியவை அதிரடியாகத் துண்டிக்கப்பட்டதாக அந்தப் பத்திரிக்கை அலுவலர்கள் சொல்கிறார்கள். இந்த அதிரடிக்கு நடுவில் அன்று மாலையில் கோபால் மற்றும் இணை ஆசிரியர் காமராஜைக் கைது செய்ய உள்ளே சென்றது போலீஸ். மூன்று மணி நேரம் சோதனை நடத்தியும் கோபாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் வரை, அலுவலகத்தில் இருந்த அவர், போலீஸ் தேடுவதை அறிந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது. அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் கோபாலுக்குத் தங்கும் இடம் இருக்கிறது.  அலுவலகத்தில் இருந்து அந்த வீட்டுக்குப் போய் அங்கே இருந்து அவர் வெளியேறி விட்டதாக சிலர் சொல்கிறார்கள்.  

தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்த பத்திரிகையாளர் சங்கங்கள், நக்கீரனில் வந்த செய்திக்கும் குட்டு வைத்தன. கருணாநிதி, திருமாவளவன் தவிர மற்ற யாருமே இதுதொடர்பாகக் கண்டனம் தெரிவிக்கவில்லை.

''நக்கீரன் அப்படி எழுதியது பத்திரிக்கை தர்மத்தை மீறிய செயல். அந்த அலுவலகத்தின் மீது அ.தி.மு.க. தாக்குதல் நடத்தியதும் தவறு'' என்று மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க.. நக்கீரன் அலுவலகம் உள்ள கட்டடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதும், இதற்கென அந்த ஏரியாவின் ஒட்டுமொத்த இணைப்பையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்ததையும் தவறான அணுகுமுறை என்றே விமர்சிக்கிறார்கள் இந்த மூத்த பத்திரிக்கையாளர்கள்.

போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், ''இந்த வழக்கோடு நக்கீரன் மீது  இருக்கும் வேறு வழக்குகளும் தூசு தட்டப்படும். படுக்கை அறையில் எடுத்ததாகப் படங்களை வெளி​யிட்ட நக்கீரன் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நடிகை ரஞ்சிதாவும் நித்தியானந்​தாவின் மேனேஜர் ஆதம் பிரபானந்தாவும் சில மாதங்களுக்கு முன் கொடுத்த புகார், சி.பி.சி.ஐ.டி. வசம் உள்ளது. அதோடு, பணம் கேட்டு மிரட்டியதாக ஒரு புகாரும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளில் கோபால், காமராஜ் ஆகியோர் கைது செய்யப்​படலாம். வீட்டுவசதி வாரியத்தில் காமராஜுக்கு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்திலும் ஒரு புகார் இருக்கிறது. அதனால் அடுத்தடுத்து வழக்குகள் பாயலாம்'' என்றார்கள்.

'கோபாலை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க முயற்சிகள் நடக்கிறது’ என்றும் திடுக்கிடும் வகையில் கோட்டையில் பேச்சு அடிபடுகிறது!

- எம். பரக்கத் அலி

படங்கள்: வி.செந்தில்குமார், நாகமணி,

சொ.பாலசுப்பிரமணியன்