Published:Updated:

`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு

`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு
`நாமக்கல் செல்ல பயமா இருக்கு’ - கோகுல்ராஜ் வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற அவரின் தாய் மனு

நாமக்கல் நீதிமன்றத்தில் யுவராஜின் ஆட்கள் அதிகமாக இருப்பதால் அங்குச் செல்ல தங்களுக்கு பயமாக உள்ளதாகவும் இந்த வழக்கை சேலம் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறி கோகுல்ராஜின் தாய் மனு அளித்துள்ளார். 

சேலம் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் கடந்த 30.8.2018-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கருணாநிதியும், யுவராஜ் தரப்பில் வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூவும் வாதாடி வருகிறார்கள்.

அரசு தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி வழக்கில் ஆர்வம் காட்டவில்லை. சாட்சிகளிடம் முறையாக விசாரிக்கவில்லை என்று கோகுல்ராஜ் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றம் சென்று இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.மோகனை நியமிக்க ஆணைப் பெற்று வந்தார்கள். அதையடுத்து ப.பா.மோகன் கடந்த மாதம்  10-ம்  தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகிப் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி மற்றும் அவரது அம்மா செல்வி உட்பட முக்கியச் சாட்சிகளை மறு விசாரணைக்கு அழைக்க மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.

ஆனால், நீதிபதி இளவழகன், `இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக முதலில் கருணாநிதி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்தான் மனுத் தாக்கல் செய்ய முடியும். நீங்கள் மனுத்தாக்கல் செய்ய உரிமையில்லை'என்றார். அதற்கு ப.பா.மோகன், 'உயர்நீதி மன்ற உத்தரவுப்படி அரசால் நியமிக்கப்பட்டவன்' என்றார். நீதிபதி, 'அவரும் அரசால் நியமிக்கப்பட்டவர்' என்று கூறியதை அடுத்து ப.பா.மோகன் கடந்த மாதம் 25-ம் தேதி நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கோகுல்ராஜின் அம்மா சித்ராவும், கோகுல்ராஜின் நண்பரும், வழக்கறிஞருமான சந்தியூர் பார்த்திபனும் நீதிபதை சந்தித்து இந்த வழக்கைச் சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென மனுக் கொடுத்தார்கள்.

இதுபற்றி கோகுல்ராஜ் அம்மா சித்ரா, ''கோகுல்ராஜ் கொலை வழக்கில் எங்க தரப்பில் ப.பா.மோகன் சார் வாதாட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போய் ஆடர் வாங்கி வந்தும் அவரை ஏற்றுக் கொள்ளாமல். வழக்கில் அக்கறை காட்டாத கருணாநிதியை வைத்து வழக்கு நடத்துறாங்க. அதனால் எங்க தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் சொல்லுவதற்கு கூட ஆள் இல்லை. நாமக்கல் நீதிமன்றம் முழுவதும் யுவராஜ் ஆட்களாகவே இருக்காங்க. நாங்களும், சாட்சிகளும் அங்குப் போவதற்கே பயமா இருக்கு. அதனால் இந்த வழக்கைச் சேலம் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்'' என்றார்.

கோகுல்ராஜின் நண்பரும், வழக்கறிஞருமான பார்த்திபன், ``இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் பிருந்தா சிறப்பாகக் கையாண்டு வந்தார். அவர் இந்த வழக்கில் சாட்சியாக இருப்பதால் நீதிமன்றத்திற்குள் வர ஆரம்பத்திலேயே அனுமதி மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக சி.பி.சி.ஐ.டி தரப்பில் அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. அதனால் வழக்கை பிருந்தா வெளியிலிருந்தே கவனித்து வருகிறார். நீதிமன்றத்திற்குள் இருக்கும் கருணாநிதிக்கு அவ்வப்போது பிருந்தா துண்டுச் சீட்டில் முக்கியத் தகவல்கள் எழுதிக் கொடுத்தனுப்பியும் அதை அவர் பேசுவதில்லை. இந்த நிலையில்தான் இந்த வழக்கு நடந்து வருகிறது. அதனால் அரசும், சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் முன்வந்து கோகுல்ராஜ் குடும்பத்தினர் விரும்பும் ப.பா.மோகன் சாரை நியமித்து கருணாநிதியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்'' என்றார்.