Published:Updated:

`தாயின் உடல்நிலை கருதி விடுப்பு கேட்டும் கொடுக்கவில்லை!’- விபரீத முடிவு எடுத்த போலீஸ் ஏட்டு

suicide

`தாயின் உடல்நிலை கருதி விடுப்பு கேட்டும் கொடுக்கவில்லை!’- விபரீத முடிவு எடுத்த போலீஸ் ஏட்டு
`தாயின் உடல்நிலை கருதி விடுப்பு கேட்டும் கொடுக்கவில்லை!’- விபரீத முடிவு எடுத்த போலீஸ் ஏட்டு

படுக்கையில் நோயாளியாக இருக்கும் தாயின் உடல் நலம் காக்க, இன்ஸ்பெக்டர் விடுப்பு தர மறுத்ததால், மன உளைச்சலில் ஏட்டு ஒருவர்,  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாகை மாவட்ட காவல்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மதுவிலக்குப் பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தவர் மாமணி. வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடியை  பூர்வீகமாக கொண்ட மாமணிக்கு, வளர்மதி என்ற மனைவியும்,12 வயதான மாமதி என்ற மகளும், 8 வயதான சுவைமணி என்ற மகனும் உள்ளனர். இவரின் தாயார் சரோஜினி வயோதிக காலத்தில் படுக்கையில் இருக்கிறார். அவருக்கு மருந்தூட்டுவது முதல் குளிப்பாட்டுவது வரை அனைத்து பணிவிடைகளையும் செய்பவர் மாமணிதான். அவர் திடீரென விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுபற்றி மாமணியுடன் பணியாற்றிய  சக காவலர்களிடம் பேசினோம். ``தாயை தெய்வமாக வணங்கக் கூடியவர் மாமணி. பெயருக்கு ஏற்றபடி மகத்தான மனிதர். காவல் பணிகளை சின்சியராக செய்தவர். தாயாருக்கு உடல்நலம் இல்லை என்ற தகவல் வந்தவுடன் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிடம் லீவு  கேட்டார். ஆனால், இன்ஸ்பெக்டர் விடுப்பு தர மறுத்ததோடு `உனக்கு இதே வேலையா போச்சு’ என்று கடுகடுப்பாக பேசிவிட்டார். என்றாலும் தாயைக் காக்க 6 நாள்கள் விடுப்பு எழுதி நிலையத்தில் சமர்ப்பித்துவிட்டு இன்ஸ்பெக்டரின் அனுமதி இல்லாமலேயே ஊருக்குப் போய் விட்டார் மாமணி. அங்கிருந்தபடியே தனது விடுப்பை இன்ஸ்பெக்டர்  ஏற்றுக் கொண்டாரா என்று கேட்டிருக்கிறார். இல்லை என்று தெரியவரவே மன உளைச்சலில் `மீண்டும் பணிக்குச் சென்றால் இன்ஸ்பெக்டர் என்ன சொல்வாரோ’ என பயந்து விஷம் அருந்திவிட்டார். உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்துவிட்டார். தாயின் நலன் காக்க மாமணிக்கு விடுப்பு தந்திருந்தால் இன்று அவரை இழந்திருக்க மாட்டோம். தற்போது லீவு முன்பே கொடுத்ததுபோல் செட்டப் செய்கிறார்கள்’’ என்றார்கள். 

இதுபற்றி மயிலாடுதுறை மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவிடம் விளக்கம் கேட்டபோது, ``நான் வெளியூரில் இருந்தபோது மாமணி லீவு கேட்டார். அவரின் குடும்பச் சூழ்நிலை எனக்கு நன்கு தெரியும். எனவே, லீவு எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றுதான் சொன்னேன். ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டது எனக்கு வருத்தமளிக்கிறது"என்றார்.