Published:Updated:

`வாகன சோதனையில் வாலிபர் பலி!’ - போலீஸாரை தப்பவைக்க லாரி ஓட்டுநர் கைது?

`வாகன சோதனையில் வாலிபர் பலி!’ - போலீஸாரை தப்பவைக்க லாரி ஓட்டுநர் கைது?
`வாகன சோதனையில் வாலிபர் பலி!’ - போலீஸாரை தப்பவைக்க லாரி ஓட்டுநர் கைது?

வேலூர் அருகே வாகன சோதனையின்போது, போலீஸார் லத்தியால் தாக்கி சட்டையைப் பிடித்து இழுத்ததால், லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தில், லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சலவன்பேட்டையைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவரின் உறவினர் விக்ரம். இருவரும், கடந்த 8-ம் தேதி ஆரணியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்துகொள்ள பைக்கில் சென்றுவிட்டு, அன்று மாலை வீடு திரும்பினர். பைக்கை விக்ரம் ஓட்டினார். பின்புறம் விக்னேஷ் அமர்ந்திருந்தார். கணியம்பாடியில் உள்ள வேலூர் தாலுகா போலீஸ் நிலையம் அருகே வந்தபோது, அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், பைக்கை நிறுத்துமாறு கை காட்டினர். பைக்கை நிறுத்தாமல் விக்ரம் வேகமாக ஓட்டினார். 

போலீஸார், லத்தியால் தாக்கி பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த விக்னேஷின் சட்டையை எட்டிப்பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், நிலைதடுமாறிய இரு வாலிபர்களும் சாலையில் விழுந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியில் சிக்கிய விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். விக்ரம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இச்சம்பவம் தொடர்பாக, இறந்த வாலிபரின் உறவினர்கள், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை அருகே போலீஸாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

``வாலிபரின் மரணத்துக்கு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார் தான் காரணம். அவர்களைப் பணி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினர். சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கணியம்பாடி பாரதி நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன் (65) மீது வழக்கு பதிந்த போலீஸார், அவரைக் கைது செய்துள்ளனர். இளைஞரின் சாவுக்கு முக்கிய காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது, பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் போலீஸாரின் செயலை திசை திருப்ப லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.