Published:Updated:

வேலூர் சிறையில் 3-ம் நாளாக உண்ணாவிரதம்! - உடல்நிலை பாதிப்பால் நளினி மயக்கம்?

வேலூர் சிறையில் 3-ம் நாளாக உண்ணாவிரதம்! - உடல்நிலை பாதிப்பால் நளினி மயக்கம்?
வேலூர் சிறையில் 3-ம் நாளாக உண்ணாவிரதம்! - உடல்நிலை பாதிப்பால் நளினி மயக்கம்?

வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, உடல்நிலை பாதிக்கப்பட்டு மயக்கமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. சிறைத் துறையினரிடம் விசாரித்தபோது, நளினி நலமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.

‘‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் விடுதலைப் பரிந்துரையை ஆளுநர் உடனே ஏற்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், இன்றுடன் 10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அதேபோல், பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் மனைவி நளினி, மூன்றாவது நாளாக உண்ணா விரதத்தைத் தொடர்கிறார். சிறையில் வழங்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடாமல் இருவரும் உடலை வருத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், உண்ணாவிரதம் இருக்கும் நளினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் இன்று திடீரென மயக்கமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி சிறைத்துறை தரப்பில் விசாரித்தபோது, ‘‘உண்ணாவிரதம் இருக்கும் நளினி-முருகனின் உடல்நிலையைச் சிறை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நளினி மயக்கமடையவில்லை. நலமுடன் இருக்கிறார். சிறை விதிகளை மீறி இவர்கள் நடந்துவருவதால் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ரத்து செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, 15 நாள்களுக்கு ஒருமுறையான இவர்களின் சந்திப்பை ரத்து செய்வதற்கான வாய்ப்புள்ளது’’ என்றனர். 

இதுதொடர்பாக, வேலூர் எஸ்.பி அலுவலக தனிப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு, ‘‘நளினி மயக்கமடைந்ததாகச் சிறைத்துறை தரப்பிலிருந்து, எங்களுக்கு எந்தத் தகவல்களும் கொடுக்கப்படவில்லை. மருத்துவமனையில் நளினியை அனுமதிக்க வேண்டுமானால், எஸ்.பி அலுவலகத்துக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்கப்படும். டி.எஸ்.பி தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். இதுவரை, சிறைத் துறையிலிருந்து எந்தத் தகவல்களும் எங்களுக்கு வரவில்லை’’ என்றனர்.