அரசியல்
Published:Updated:

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?
பிரீமியம் ஸ்டோரி
News
மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

துரை திருமங்கலம் அருகே வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, அதிகாரிகள் ஆதரவுடன் மணல் கடத்துகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு தாசில்தாரே துணைபோகிறார் என்றும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விசிட் அடித்தோம். கள்ளிக்குடியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது, சென்னம்பட்டி கிராமம். அங்கிருந்து பட்டப்பகலிலேயே நூற்றுக்கணக்கான லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு வெளியே செல்கின்றன. உண்மை நிலவரம் என்ன என்பதை விசாரித்தோம்.

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

“கள்ளிக்குடி மற்றும் இராயபாளையம் ஆகிய இரு ஊர்களிலும் தினமும் 200 வண்டிகள் முதல் 500 வண்டிகள்வரை மணல் அள்ளிச்செல்கின்றன. அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை. பத்து அடி தோண்டினால் நிலத்தடி நீர் கிடைத்தநிலை மாறி, இப்போது 400 அடிக்கு ஆழ்குழாய் தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. நிலத்தடி நீர்வளம் முற்றிலுமாக வற்றிவிட்டது’’ என்றார் இராயபாளையத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர்.

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

“பட்டா நிலங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி வாங்கிவிட்டு, மணல் கடத்துகின்றனர். இந்த மணல் கொள்ளைக்கு  கள்ளிக்குடி தாசில்தாரான ஆனந்தி துணைபோகிறார். இங்கே எடுக்கிற வண்டல் மண்ணை விவசாயத்துக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் ரயில்வே பணிகளுக்கு விற்கிறார்கள். தாசில்தார் ஆனந்தி குறித்து புகார் சொன்னால், உடனே சமூகவிரோதிகளிடமிருந்து மிரட்டல் வருகிறது. அதனால், இதை வெளியே சொல்லவே பயமாக இருக்கிறது’’ என்றார்கள் கள்ளிக்குடி மக்கள்.

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

“கடந்த பிப்ரவரி 12-ம் தேதி, நள்ளிரவு மணல் அள்ளுவதாகத் தகவல் கிடைத்தது. ஊர் மக்கள் ஒன்றுகூடி பிள்ளையாநத்தம் அருகே மணல் அள்ளிய இரண்டு டிராக்டர்களைப் பிடித்து, காவல் துறைக்கும் வி.ஏ.ஓ-வுக்கும் தகவல் கொடுத்தோம். சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் வந்தனர். இதனால், குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம். மறுநாள் திருமங்கலம்  வி.ஏ.ஓ-வான செந்திலைத் தொடர்புகொண்டு பேசியதற்கு, ‘தப்பைத் தட்டிக் கேட்டா, தாசில்தாரைப் பகைச்சுக்கிட்ட மாதிரி ஆயிடும். என் வேலை போயிடும். என்மேல டிராக்டர் ஏத்தி கொன்னுடுவாங்க’ என்றார். தொடர்ந்து மணல் அள்ளியவர்கள், அடுத்த நாளே நேரடியாக கிராமத்துக்கு வந்து மிரட்டிச்சென்றனர்” என்றனர் பிள்ளையார்நத்தம் மக்கள்.

இதைப்பற்றி திருமங்கலம் வி.ஏ.ஓ-வான செந்தில்குமாரிடம் பேசியபோது, “அப்படியெல்லாம் நான் பேசலையே, எங்க தாசில்தார் மணல் திருட்டைத் தடுக்க எப்போதும் விழிப்புடன் இருக்கணும்னு தொடர்ந்து எங்களுக்கு எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறார். மணல் திருட்டு பற்றி எங்கிருந்து தகவல் வந்தாலும் உடனே காவல்துறைக்குத் தகவல் கொடுத்துத் தடுத்துவிடுறோம்” என்று சொல்லி நம்மைத் திகைக்கவைத்தார்.

இதற்கிடையே கள்ளிக்குடி தாசில்தாராக இருந்த ஆனந்தி, பேரையூர் தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம், “நான் கள்ளிக்குடியில் இருந்தவரை மணல் கடத்தல் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்துள்ளேன். சவுடுமண் அள்ளிச்செல்லும் வண்டிகளை நிறுத்தி அது சவுடு மண்தானா, அதற்கான உரிமம் உள்ளதா என்றும் சோதனை செய்வோம். நாம் என்னதான் விழிப்புடன் இருந்தாலும், ‘திருச்சுழி பக்கமிருந்து சிலர் மணல் கடத்துகிறார்கள்’ என்று தகவல் வரும். ஆனால், நான் இருந்தவரை கள்ளிக்குடி தாலுகாவுக்குள் மணல் கடத்தலை அனுமதித்தது இல்லை. சென்னம்பட்டி மக்களும் அதைப்பற்றி என்னிடம் எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. எங்கள் மீது குறை செல்வதற்காகச் சிலர்  மிகைப் படுத்திக் கூறியிருக்கிறார்கள்’’ என்றார். 

மதுரையில் தொடரும் மணல் கொள்ளை! - துணைபோகிறார்களா அதிகாரிகள்?

திருமங்கலம் தாசில்தாராகப் பணியாற்றி, தற்போது ரயில்வே நிலமெடுப்பு தாசில்தாராகப் பொறுப்பேற்றுள்ள நாகரத்தினத்திடம் பேசினோம். “பிள்ளையாநத்தம் சம்பவம் நடந்தபோது நான் ஸ்பாட்டுக்குப் போகவில்லை. வி.ஏ.ஓ தான் நடவடிக்கை எடுத்தார். இராயபாளையத்தில் மணல் திருட்டு நடப்பதாக என்னிடம் யாரும் புகார் தரவில்லை. கலெக்டரிடம் மனுக் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுத்தேன். லோக்கல் அரசியலால் தேவையில்லாமல் எங்கள் பெயரை இழுத்துவிடுகிறார்கள்” என்றார்.

இதுபற்றி திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம். “நான் கிராமம் கிராமாக மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுவருகிறேன். இதுபற்றி யாரும் என்னிடம் புகார் சொல்லவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதையே புகாராக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறேன். சட்டவிரோதச் செயல்களுக்கு அதிகாரிகள் துணைபோவதாகத் தெரிந்தால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

- நமது நிருபர்கள்