Published:Updated:

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’
பிரீமியம் ஸ்டோரி
‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள்... வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறதா காவல்துறை?

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள்... வழக்கை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறதா காவல்துறை?

Published:Updated:
‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’
பிரீமியம் ஸ்டோரி
‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

சென்னை கொளப்பாக்கம் அருகே உள்ள இன்டர்நேஷனல் பள்ளி ஒன்றில், எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை அந்தப் பள்ளியின் பேருந்து உதவியாளர் உட்பட பள்ளியில் தங்கவரும் வெளிநாட்டினர் பாலியல்ரீதியாக துன்புறுத்தியிருப்பதாகக் கடந்த ஆண்டு புகார் கிளம்பியது. இதன் வழக்கு விசாரணை இன்னும் முடியாத நிலையில், “மோசமான வக்கிரத்துக்கு ஆளாகியிருக்கும் எங்கள் குழந்தைகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை; இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் வெளியே வந்துவிட்டார்கள். இவர்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகளை காவல்துறையே தப்பவைக்கிறது” என்று பெற்றோர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்துப் பேசினோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றை கட்டுரையில் மறைத்துள்ளோம்.

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் ஒருவரிடம் பேசியபோது, “போன வருடம் ஜூலை மாதத்தில் இருந்து என் குழந்தையை ஸ்கூல் பஸ்ல அனுப்ப ஆரம்பிச்சேன். எப்போதும் என் குழந்தை அவ்வளவு அசதியா வந்து, நான் பார்த்ததில்லை. ஸ்கூல்ல விளையாடிட்டு வந்ததுனால அசதியா இருக்கான்னு நெனச்சோம். சட்டை இன்ஷர்ட் பண்ணது எல்லாம் வெளிய வந்திருக்கும். ஒருநாள் என் பையனோட எல்.கே.ஜி படிக்கிற ஒரு பொண்ணு, ‘நான் கேர்ள்... நீ பாய்... வா கட்டிப்பிடிச்சுக்கலாம்’ன்னு சொல்லி என் பையனைக் கட்டிப்பிடிக்க வந்தப்போ ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் என் பையனும் இன்னொரு பையனும் எங்க வீட்ல விளையாடிட்டு இருந்தப்போ திடீர்னு ட்ரெஸ்ஸ கழட்டிட்டு ‘நமக்கு பாப்பா பொறக்கப்போகுது’ன்னு சொல்லி அவனை நெருங்குனப்போ எனக்கு தூக்கிவாரிப் போட்டுருச்சு. குழந்தையோட நடவடிக்கை ஏன் இப்படி இருக்குன்னு புரியாம அவன்கிட்டேயே பொறுமையாகக் கேட்டோம். அதுக்கு அவன், ‘அதை சொன்னா உங்களையும் அப்பாவையும் கொன்னுடுவாங்க’ன்னு சொன்னான். பகீர்னு தூக்கிவாரிப்போட்டுச்சு... அவனுக்கு தைரியம் சொல்லி விசாரிச்சோம். எல்லாத்தையும் சொன்னான். ஆனா, அதைக் கேட்கவே எனக்குத் தெம்பு இல்ல...” என்று அழத் தொடங்கியவர், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“பசங்களை அடிச்சு, வயித்துல எட்டி உதைச்சு, முடியைப் பிடிச்சுத் தூக்கித் துன்புறுத்தியிருக்காங்க. இது தொடர்பாக புகார் கொடுத்து கேஸ் போய்க்கிட்டு இருக்கு. ஆனா, நடவடிக்கையில் திருப்தி இல்லை. இதுல பெண் குழந்தைகளும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை மூடி மறைச்சிருக்காங்க. பஸ்ஸுல மட்டும்தான் இந்த வன்கொடுமை நடந்திருக்கிறதா சார்ஜ் சீட்ல கொண்டு வந்திருக்காங்க. ஆனா, குழந்தைங்க ஸ்கூல் சிக் ரூம், முதல் தளம்னு சில இடங்களைக் காமிக்கிறாங்க. அதையெல்லாம் விசாரணை அதிகாரி சார்ஜ் சீட்ல கொண்டு வரவே இல்ல. குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை முடிஞ்சு பூந்தமல்லி காவல் நிலையம் போயிட்டிருந்தப்போ இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இன்னொரு குழந்தையின் அம்மா எனக்கு போன் பண்ணி, ‘போலீஸ், பகவதி தியேட்டர்கிட்ட காத்திருக்கச் சொன்னாங்க’னு தகவல் சொன்னாங்க. அங்க புகாருக்கு உள்ளான இந்திராணியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஃபிரான்வின் டேனி வந்தார். அவர் எங்ககிட்ட, ‘இந்திராணி பாவம், ஏழையான குடும்பம்... அவங்களை விட்டுடலாம்’னு சொன்னார். அப்போது இந்திராணியை நேரில் பார்த்த எங்கக் குழந்தைகள் பயந்து அலற ஆரம்பித்துவிட்டன” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையின் தாயிடம்  பேசியபோது, “ஸ்கூல் முடிஞ்சு வந்ததும், என் குழந்தை அடிக்கடி டூ பாத்ரூம் போவான். மோஷன் போற இடத்துல வலிக்குதுன்னு அடிக்கடி சொல்லுவான். எங்களுக்கு சந்தேகம் வந்து, பையனிடம் கேட்டப்போ தயங்கித்தயங்கி சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்றதை எல்லாம் இங்க சொல்ல முடியாது. அவ்வளவு வக்கிரமாக இருந்துச்சு. பாபுஜி ஆசிரம நிர்வாகம் நடத்துற பள்ளிக்கூடம் அது. அங்க அடிக்கடி வெளிநாட்டுக்காரங்க வந்து தங்குவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறோம். அதனால, குழந்தைகளை பாலியல்ரீதியாக வெளிநாட்டவர் துன்புறுத்தியிருப்பாங்களோன்னு சந்தேகம் வருது. ஏன்னா... குழந்தைகள் ரோட்டுல போறப்ப வெளிநாட்டுக்காரங்களைப் பார்த்தாலே பயந்து அலறுறாங்க.

குழந்தைங்க பாதிக்கப்பட்டது தெரிஞ்ச உடனேயே பெற்றோர்கள் ஸ்கூலுக்குப் போய் போராட்டம் செஞ்சோம். அப்போ ஸ்கூல் சேர்மன் கிருஷ்ணன், ஸ்கூல் பி.ஆர்.ஓ சுப்பிரமணியன் ஆகியோர் மிரட்டுற தொனியில பேசுனாங்க. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஸ்கூல்ல ஒரு மீட்டிங் நடந்தது. அ.தி.மு.க-வைச் சேர்ந்த கொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இயேசுபாதம், ஆசிரமத்தைச் சேர்ந்த செந்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கெருகம்பாக்கம் ஊராட்சிக் கழகச் செயலாளர் - தலைவர் சுந்தரேசன் ஆகியோர் பெற்றோர் என்கிற போர்வையில மீட்டிங்குக்கு வந்து ஸ்கூலுக்கு ஆதரவாவே பேசிட்டு இருந்தாங்க. சுந்தரேசனின் ஆட்களும் இயேசுபாதத்தின் ஆட்களும் கைகலப்புல ஈடுபட்டுக் கூட்டத்தைக் கலைச்சிட்டாங்க. விசாரணை அதிகாரி, வாக்குமூலம் வாங்க குழந்தைகளை வரவெச்சு ரெண்டு மணி நேரம் இழுத்தடிச்சதுல குழந்தைங்க சோர்வாகிட்டாங்க. குற்றவாளிகள் நிறையப் பேரைக் குழந்தைகள் அடையாளம் சொல்லியும், ரெண்டு பேரை வெச்சே வழக்கை முடிக்கப் பாக்குறாங்க. குற்றவாளிகள் பாஸ்கர், இந்திராணி இரண்டு பேருமே கைதாகி 28 நாள்ல பிணையில் வெளிய வந்துட்டாங்க. தப்பு செஞ்சவங்க சுதந்திரமா திரியுறாங்க. பல பேரு எங்களை மிரட்டினாங்க, அதனால நாங்க இருந்த வீடுகளை விட்டே வேற இடத்துக்கு மாறிட்டோம்” என்றார்.

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

இந்த வழக்கை நடத்தும் வழக்கறிஞர் கண்ணதாசன் பேசுகையில், “பொள்ளாச்சி சம்பவத்துக்குச் சற்றும் குறைந்ததில்லை இந்தச் சம்பவம். அந்தச் சம்பவத்தைப் போலவே இந்த வழக்கிலும் குற்றவாளிகள், விசாரணை அதிகாரியான ஃபிரான்வின் டேனி என்பவரால் காப்பாற்றப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட மற்ற குழந்தைகளின் பெற்றோர்களை மிரட்டி, ‘புகார் கொடுத்தால் அவர்கள் எதிர்காலம் கெட்டுப்போய்விடும்’ என்று மூளைச்சலவைச் செய்துவிட்டு, ‘விசாரித்ததில் யாரும் பாதிக்கப்படவில்லை’ என்று கணக்குக் காட்டுகிறார்கள். போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எப்படி 28 நாட்களில் பெயிலில் வெளிவருகிறார்கள்? போக்ஸோ அடிப்படையிலேயே இந்த விசாரணை நடைபெறவில்லை. முக்கியமாகக் குற்றவாளியை நேரடியாகக் குழந்தையைச் சந்திக்கவைத்திருக்கிறார்கள். இவர்களுக்குப் பின் மிகப் பெரும் நெட்ஒர்க் இருக்கிறது. வெளிநாட்டினர் வந்து தங்கியிருக்கும் பாபுஜி ஆசிரம நிர்வாகம் நடத்தும் பள்ளி அது. சைல்டு செக்ஸ் டூரிஸம் என்கிற வக்கிரம் சமீப காலமாக உலகெங்கும் பரவிவருகிறது. எனவே, வெளிநாட்டினர் இந்தக் குழந்தைகளை பாலியல்ரீதியாக துன்புறுத்தி இருப்பார்களோ என்கிற சந்தேகம் பலமாக இருக்கிறது” என்றார்.

‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’

விசாரணை அதிகாரியான பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஃபிரான்வின் டேனியிடம் பேசினோம். “இந்த வழக்கு பொள்ளாச்சி வழக்கு மாதிரி பெரிய வழக்கெல்லாம் இல்லை. தேவையில்லாமல் பெற்றோர்கள், இதைப் பெரிதாக்க முயற்சி செய்கிறார்கள். நான் விடுப்பில் இருந்ததால், குற்றவாளிகள் பிணையில் வந்தது தெரியாது. குற்றவாளி, அந்தப் பிள்ளைகளைச் சந்திக்க நான் அழைக்கவில்லை. இந்த வழக்கை மிகவும் கஷ்டப்பட்டு விசாரித்தேன். என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்” என்றார்.

இவரது மேல் அதிகாரியான துணை ஆணையாளர் ஈஸ்வரனிடம், “விசாரணை அதிகாரிமீது பெற்றோர்கள் அதிருப்தி தெரிவிக்கிறார்களே?” என்று கேட்டோம். “பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துப் பேசவைக்கின்றனர். வேறு எதையோ மனதில் வைத்துக்கொண்டு அவர்கள் விசாரணை அதிகாரி ஃபிரான்வின் டேனி மேல் குற்றம்சாட்டுகிறார்கள்” என்றார்.

 பள்ளி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டார் என்று கூறப்படும் அ.தி.மு.க-வின் இயேசுபாதம் கூறுகையில், “நான் யாரையும் மிரட்டவில்லை. அப்படி ஒரு மீட்டிங் அந்த ஸ்கூலில் நடக்கவும் இல்லை” என்றார் (ஆனால், அந்த மீட்டிங் தொடர்பான புகைப்படம் இருக்கிறது). தொடர்ந்து அவரிடம் “நீங்கள்தான் குற்றவாளி பாஸ்கரை பெயிலில் எடுத்தீர்கள் என்கிறார்களே?” என்று கேட்டோம். “கிடையாது. மேலும், அந்தப் பள்ளியில் அதுபோன்ற விஷயங்கள் நடக்கவே வாய்ப்பு இல்லை” என்றார்.

நடந்த சம்பவம் குறித்து மற்றக் குழந்தைகளின் பெற்றோர்களை விசாரித்ததில், ‘புகார் கொடுக்கக்கூடாது’ என்று அவர்கள் மிரட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கை முறையாக விசாரித்தால், இன்னும் பல உண்மைகள் வெளியே வரும்.

- இரா.வாஞ்சிநாதன்
படங்கள்: அபினேஷ்.தா

‘’விசாரணை முடிந்தபிறகே சொல்வோம்!’’

ந்த சம்பவத்தில், ‘தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்’ நடவடிக்கை ஏதும் எடுக்காதிருந்ததாகப் பெற்றோர்களிடமிருந்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நிர்மலா என்பவரிடம் நாம் கேள்வி எழுப்பினோம். இதனைத் தொடர்ந்து 3 நாட்களுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று இந்த ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது தெரியவருகிறது. விசாரணை குறித்துக் கேட்டபோது “இப்போதைக்கு எதுவும் சொல்ல இயலாது, விசாரணை முடிந்தபின்னரே பொதுவெளியில் சொல்வோம்” என்றார் நிர்மலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism