
ரயில் மோதி பலியான மாணவி! - காதலனுடன் சென்றபோது நடந்த துயரம்
காதலர் தினமான நேற்று தண்டவாளத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ரயில் மோதி ப்ளஸ் டூ மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். காதலனிடம் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே பண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த உஷா (பெயர் மாற்றம்) கவரைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும், கவரைப்பேட்டை அருகே உள்ள சிட்டராசூர் பகுதியைச் சேர்ந்த விஜய்யும் (பெயர் மாற்றம்) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
காதலர் தினமான நேற்று பள்ளிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற உஷா வீடு திரும்பவில்லை. இருவரும் சேர்ந்து 5.30 மணியளவில் கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தின் மீது பேசிக்கொண்டு நடந்து சென்றனர். அப்போது, சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியதில் உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஜய் உயிர் தப்பினார். இது குறித்து விஜய் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் மாணவியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமுதாவிடம் கேட்டதற்கு, ``இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காதலர்கள் என்று சொல்ல முடியாது" என்றார். அப்படியானால் விஜய் அங்கே எப்படி வந்தார் என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்று பதிலளித்தார். உஷாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.