Published:Updated:

‘சாகும்வரை உண்ணாவிரதம்; உடல்நிலை பாதிப்பு!’ - நளினியைச் சந்திக்க தாய்க்கு அனுமதி மறுப்பு

‘சாகும்வரை உண்ணாவிரதம்; உடல்நிலை பாதிப்பு!’ - நளினியைச் சந்திக்க தாய்க்கு அனுமதி மறுப்பு
‘சாகும்வரை உண்ணாவிரதம்; உடல்நிலை பாதிப்பு!’ - நளினியைச் சந்திக்க தாய்க்கு அனுமதி மறுப்பு

வேலூர் மத்திய சிறையில், சாகும்வரை தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி மற்றும் அவரின் கணவர் முருகனின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள நளினியை சந்திக்க வந்த அவரின் தாய்க்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலை சம்பந்தமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். இதனால், ஏழு பேரும் மனஉளைச்சலில் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் அவரின் மனைவி நளினி இருவரும், தங்களின் விடுதலையை வலியுறுத்தித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள். சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி, கடந்த 12-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை வழக்கறிஞரைத் தவிர்த்து பார்வையாளர்களைச் சந்திப்பது உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் சிறைத்துறை நிர்வாகம் ரத்துசெய்துள்ளது. உணவு உண்ணாமல் இருப்பதால், இருவரின் உடல்நிலையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குளுக்கோஸ் ஏற்றி சிறை மருத்துவர்கள் 24 மணிநேரமும் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர். நளினியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதனைக்காக மருத்துவர்கள் நேற்று எடுத்துச்சென்றனர்.

இதனிடையே, சாகும்வரை தொடர் உண்ணாவிரதம் இருக்கும் நளினி, முருகனைக் காப்பாற்றக் கோரி, நளினியின் தாய் பத்மா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருக்கிறார். மனுவில், ‘‘இருவரின் உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேபோகிறது. அவர்களைக் காப்பாற்றவேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, நளினி-முருகனைக் காப்பாற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அவர் கூறியிருக்கிறார். இதுபற்றி நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டதற்கு, ‘‘நளினி, முருகனுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது. மருத்துவர்களின் உச்சக்கட்ட கண்காணிப்பில் இருவரும் உள்ளனர். நளினியின் தாயார் தாக்கல்செய்துள்ள ஆட்கொணர்வு மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது’’ என்றார்.

இந்த நிலையில், நளினியின் தாயார் பத்மா (80), இன்று வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். சிறை விதிகளை மீறியதாகக் கூறி பார்வையாளர்கள் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நளினி, முருகனைச் சந்திக்க தாயார் பத்மாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மகள், மருமகனைச் சந்திக்க முடியாததால் அவர் வேதனைப்பட்டார். சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த பத்மா, ‘‘எனது மகளின் உடல்நிலை சீரியஸாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன். நான் அவளைப் பார்த்து, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கூறுவதற்காக வந்தேன். எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, என் மகள் உள்பட ஏழு பேரையும் விடுதலைசெய்யுங்கள் என்று கெஞ்சி கேட்கப்போகிறேன்’’ என்றார் வேதனையோடு!