Published:Updated:

‘உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நளினி-முருகன்!’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை

‘உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நளினி-முருகன்!’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை
‘உண்ணாவிரதத்தைக் கைவிட்ட நளினி-முருகன்!’ - வேலூர் சிறையில் தொடர்ந்து சிகிச்சை

வேலூர் மத்திய சிறையில், தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்த நளினியும், அவரின் கணவர் முருகனும், சிறைத்துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று இன்றிரவு உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு பேரின் விடுதலைச் சம்பந்தமாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக உள்ளார். இந்த நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் அவரின் மனைவி நளினி இருவரும், தங்களின் விடுதலையை வலியுறுத்தித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்துவந்தனர். சிறை விதிகளை மீறி உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறி, கடந்த 12-ம் தேதி முதல் வரும் 27-ம் தேதி வரை வழக்கறிஞரைத் தவிர்த்து பார்வையாளர்களைச் சந்திப்பது உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்துள்ளது. நேற்று சிறைக்கு வந்த நளினியின் தாய் பத்மா திருப்பி அனுப்பப்பட்டார்.

இதனிடையே, நளினி, முருகனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. சிறை மருத்துவர்கள், குளுக்கோஸ் ஏற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறார்கள். சிறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில், சிறைத்துறை டி.ஐ.ஜி ஜெயபாரதி நேற்று நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டதால், நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை நேற்றிரவு முடித்துக் கொண்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இருவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் சிறைக்குள்ளேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.