Published:Updated:

`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!

`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!
`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை?' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி!

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதலாக காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீது நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உலகநாடுகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இப்படி ஒரு கொடூரத் தாக்குதலை நடத்தி 44 வீரர்களின் உயிரைக் காவு வாங்கியதற்குக் காரணமானவர் ஆதில் அகமது தார் என்ற இளைஞன். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள காக்கபோரா கிராமம்தான் இவனது சொந்த ஊர். ஜெய்ஷ்-இ- முகமது என்ற அமைப்பில் இணைந்து தீவிரவாதப் பயிற்சி பெற்ற இவன் ஒற்றை ஆளாக, ஸ்கார்பியோ கார் முழுவதும் 350 கிலோ வெடிப் பொருள்களை விளையாட்டுப் பொருள்களுக்குள் மறைத்துவைத்து அதை வீரர்கள் வந்த வாகனத்தில் மோத வைத்து இந்தக் கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளான்.

ஆதில்தான் தாக்குதலுக்குக் காரணம் என்பதைக் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு முன்னதாக ஆதில் பேசியுள்ள இரண்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. உருது, காஷ்மீரி என இரண்டு மொழிகளிலும் ஆதில் பேசிய வீடியோவில், ``நான் ஜெயிஷ் அமைப்பில் ஏன் சேர்ந்தேன் என்ற நோக்கத்தை நிறைவேற்ற ஒரு வருடத்துக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இதை முழுவதுமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறேன். இந்த வீடியோவை நீங்கள் பார்க்கும்போது நான் சொர்க்கத்தில் மிகவும் சந்தோஷமாக இருப்பேன். இதுதான் காஷ்மீர் மக்களுக்கு என் கடைசி செய்தி. காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் இந்தியாவுக்கு எதிராகப் புனிதப் போர் நடத்துங்கள். நான் இறந்தபிறகு என் வீர மரணத்தை விழாவாகக் கொண்டாடுங்கள். 

திருமணம் எவ்வளவு சிறப்பாக நடைபெறுமோ அந்த அளவுக்குச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவத்தினரை வெற்றி கொண்ட தாலிபான் தாக்குதலின் உத்வேகத்தினால்தான் நான் இதைச் செய்யவுள்ளேன். காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களின் நிரந்தர விடுதலைக்காகவே என் வீர மரணம்’ எனப் பேசியிருந்தான்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து தீவிரவாதி ஆதிலின் தந்தை குலாம் ஹசன் தார் ஆங்கில ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ``ஆதிலும், அவனின் நண்பனும் கடந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதியே காணாமல் போய்விட்டனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மார்ச் 23-ம் தேதியே நாங்கள் போலீஸில் புகார் கொடுத்துவிட்டோம். அவன் எப்படியும் வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவான் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், திரும்பி வரவேயில்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை எனத் தெரிந்துவிட்டது. அவனுக்கு 19 வயதுதான் ஆகிறது. போர்டு எக்ஸாம் எழுதியுள்ளான். போலீஸ் வந்து சொன்ன பிறகுதான் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்குத் தீவிரவாதிகள் உடன் தொடர்பு இருந்தது எனக் கூறுவதை எங்களால் நம்ப முடியவில்லை. 

பணத்துக்காக அவன் தீவிரவாதத்தில் சேர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவனுக்குப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவன் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன். கடின உழைப்பாளியும் கூட. அதனால் அவர் தீவிரவாதிகளுடன் சேர்ந்ததை நம்ப முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை, இங்குள்ள அரசியல்வாதிகள்தான் அனைத்துக்கும் பொறுப்பு. அவர்கள் தங்கள் குடும்பங்களைக் காத்துக்கொள்ள எது வேண்டுமானாலும் செய்துகொள்கிறார்கள். இந்தக் கொலைகள் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. மொத்த இந்தியாவும் இந்தச் சம்பவத்தை நினைத்துக் கொந்தளிக்கிறது. 

ஆனால், ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இங்கு கொல்லப்படுவதைப் பற்றிப் பேச மறுப்பது ஏன். சி.ஆர்.பி.எப் வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களின் வேதனையும் வலியும் எனக்குப் புரிகிறது. ஆனால், இதைப் பற்றி எல்லாம் அரசியல்வாதிகள் கவலைப்படுகிறீர்களா எனத் தெரியவில்லை. இறந்தவர்களுக்கு இழப்பீடுகள் கொடுப்பார்களே தவிர்த்து இங்குள்ள பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணமாட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அரசுக்கு நான் வைக்கும் கோரிக்கை, முடிந்தவரை விரைவாக இந்த தீவிரவாத பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டு இளைஞர்களை மோசமான பாதையில் செல்வதில் இருந்து தடுத்து நிறுத்துங்கள்" என்றார்.

news credits: indiatimes