மாயம்.. அழுகியநிலையில் சடலம்.. லாக்டெளனில் திரும்பிய சிறுவன் - பழைய வழக்கை தூசு தட்டும் ம.பி போலீஸ்!

டெல்லியில் எனக்கு வேலையும் இல்லை வருமானமும் இல்லை. எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது அதனால் வீடு திரும்பிவிட்டேன் என சிறுவன் கூறியுள்ளான்.
உதய்க்கு இப்போது 15 வயது. மத்தியப்பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு ஓடிவந்தபோது 12 வயது சிறுவன். குடும்பத்தில் ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுவன் உதய்யின் கால்கள் சென்றடைந்தது டெல்லியை. ஒரு சிறிய கடையில் வேலை, குடும்பத்தின் நினைவுகள் என மூன்று வருடங்கள் இப்படியே கழிந்துவிட்டன. கொரோனா ஊரடங்கு டெல்லியில் வேலையில்லை. உதய்யை கவனித்துக்கொள்வதற்கும் இந்த தலைநகரில் யாரும் இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்புவதைக் கண்ட உதய், `சரி நாமும் நம் வீட்டுக்கு சென்றுவிடலாம்' எனப் பயணமாகியுள்ளார்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறிய பழங்குடியின கிராமத்தில்தான் உதய் பெற்றோர்கள் வசித்து வருகின்றனர். சிறிய கிராமத்தில் நுழைந்த உதய்யை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். உதய்யின் வருகையை சற்றும் எதிர்பாராத அவரது குடும்பத்துக்கு இன்ப அதிர்ச்சி.
உதய் வீட்டை விட்டு வெளியேறியதும் அவரது குடும்பத்தினர் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டது. உதய் மாயமான சில நாள்கள் கழித்து காட்டுப்பகுதியில் சிறுவனின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சடலத்தில் இருந்த உடையும் உதய் அணிந்திருந்த உடையும் ஒரே மாதிரி இருந்ததால் அது உதய் எனக்கூறி அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகள் செய்துள்ளனர். மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் லாக்டெளன் காலத்தில் 15 வயது சிறுவனாக வீடு திரும்பிய உதய்யை கிராம மக்கள் வித்தியாசமாகப் பார்க்க இதுதான் காரணம்.

இதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை, ``மூன்று வருடங்களுக்கு முன்பு அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை என் மகன் என நினைத்து இறுதிச்சடங்குகள் எல்லாம் செய்து அஸ்தியை ஆற்றில் கரைந்தோம். அந்த உடல் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதில் இருந்த உடையை வைத்துதான் என் மகன் எனக் கூறினோம். கடவுள் மிகவும் இரக்கம் உள்ளவர். என் மகனை எங்களிடமே மீண்டும் ஒப்படைத்துவிட்டார்” என்றார். உதய் வருகையை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
உதய் பேசுகையில், ``டெல்லியில் எனக்கு வேலையும் இல்லை. வருமானமும் இல்லை. எனக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது. அதனால் இங்கு திரும்பி வர வேண்டும் என எண்ணினேன். சில தொழிலாளர்கள் நடந்து செல்வதாகக் கூறினர் அவர்களுடன் சேர்ந்து நானும் நடந்து வந்துவிட்டேன்” என்றார்.

உதய் வழக்கு காவல்துறையினருக்கு சுமுகமாக முடிந்துவிட்டது. உதய் என நினைத்து இறுதிச்சடங்கு செய்தது யாருடைய சடலம் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். `மூன்று வருடத்துக்கு முந்தைய வழக்கை மீண்டும் விசாரிக்கும் நேரம் வந்துவிட்டது. அந்தச் சடலம் யாருடையது என்பதை விரைவில் கண்டுபிடிப்போம்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.