Published:Updated:

காஷ்மீரில் 16 மணிநேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டை! - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை #PulwamaEncounter

காஷ்மீரில் 16 மணிநேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டை! - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை #PulwamaEncounter
காஷ்மீரில் 16 மணிநேரமாக நடந்த துப்பாக்கிச் சண்டை! - 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை #PulwamaEncounter

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணமடைந்தனர். 

புல்வாமா மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த சி.ஆர்.பி.எஃப் வாகன அணிவகுப்பின்மீது கடந்த 14-ம் தேதி ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து, புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கிறது. 

புல்வாமாவின் பிங்லீனா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே, அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதிசெய்த பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் - பாதுகாப்புப் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. நேற்று அதிகாலை தொடங்கிய சண்டை, மாலை வரை நீடித்தது. புல்வாமா தாக்குதல் நடந்த பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் இந்த சண்டை நடைபெற்றது.

இதில், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த கம்ரான் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் ஒருவர், பொதுமக்கள் ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரிகேட் கமாண்டர், லெப்டினன்ட் கர்னல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் போலீஸ் டி.எஸ்.பி ஒருவர் ஆகியோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். 
சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூன்று பேரில் ஒருவர் கம்ரான் என்பதும், மற்றொருவர் ஹிலால் அகமது என்பதும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. மூன்றாவது நபர், உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், அவர் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.