Published:Updated:

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதிக்கு பிடிவாரன்ட்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதிக்கு பிடிவாரன்ட்!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதிக்கு பிடிவாரன்ட்!

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறி, வழக்கில் ஆஜராகாத ஸ்வாதிக்கு, நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரன்ட்  பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு, நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி இளவழகன் முன்னிலையில் நடைபெற்றுவருகிறது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜ் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜு ஆகியோர், அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கோகுல்ராஜின் கல்லூரித் தோழி, ஸ்வாதி. கோகுல்ராஜ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஸ்வாதி, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இருவரும்  23.6.2015 -ம் தேதி,  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றார்கள். அங்கு வந்த தீரன் சின்னமலைக்கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ், இருவரையும் மிரட்டி கோகுல்ராஜை தன்னுடைய காரில் அழைத்துச்சென்றார். அடுத்த நாள் 24.6.2015-ம் தேதி, கோகுல்ராஜ்  ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதனால், இவ்வழக்கில் அரசுத் தரப்பு மிக முக்கிய சாட்சியாக ஸ்வாதி கருதப்பட்டார். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, ஸ்வாதி நீதிமன்றத்தில் ஆஜராகி, ''இந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல, நானும் கோகுல்ராஜும் ஒன்றாகப் படித்தோம். ஆனால், கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுநாள் வரை அந்தக் கோயிலுக்குப் போனதில்லை'' என்று பிறழ் சாட்சியம் அளித்தார்.

 ஸ்வாதி பொய் சாட்சி அளித்துள்ளதால், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் 340-ன்படி தண்டிக்க வேண்டும் என  அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இது, தனி வழக்காக ஜே.எம்.1 நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன்னிலையில், கடந்த 11-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்வாதி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதும் ஸ்வாதி ஆஜராகாததால், நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.