Published:Updated:

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்! - போதை வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்! - போதை வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல்! - போதை வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

தஞ்சாவூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்த குடிபோதை வாலிபரை பொதுமக்கள் அடித்து துவைத்தனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன. அங்கிருந்து, தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு செல்லும் நகரப் பேருந்துகள், கும்பகோணம், அரியலூர் உள்ளிட்ட வெளியூருக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுவதோடு பரபரப்பாகவும் இருக்கும்.மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் சிலர் வீட்டுக்குச் செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு வாலிபர் குடிபோதையில் அங்கும், இங்கும் திரிந்து கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் மாணவிகள் நின்று கொண்டிருந்த பகுதிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்த 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம், என் கூட வா, வீட்டுக்குப் போகலாம் என்று கூறி அழைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளான். அப்போது மாணவி காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டார்.

இதை கேட்டு அங்கிருந்தவர்கள்  வந்து அந்த வாலிபரிடம் இருந்து மாணவியைப் பத்திரமாக மீட்டு என்னவென்று கேட்டதும் போதை நபர் பேசியதைக் கூறினார். பொதுமக்கள் விசாரித்ததில், குடிபோதையில் ஏதேதோ உளறியபடியே இருந்திருக்கிறார். மேலும், முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். இதனால் பெண்கள் உட்பட பொதுமக்கள் அந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து துவைத்து எடுத்தனர்.

இதுபற்றி தஞ்சை மேற்கு காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரிடம் விசாரித்தனர். அப்போதும் ஆத்திரம் அடங்காத பெண் ஒருவர் போலீஸார் முன்னிலையிலேயே அவரை துவைத்து எடுத்தார். பின்னர் அவரை மீட்டு காவல்துறை நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ஒரத்தநாடு அருகே உள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தெரியவந்தது. மேலும், அவர் அளவுக்கதிகமான குடிபோதையில்  இருந்ததால் இந்தசெயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. அதனால் காவல்துறை அவரிடம் பெயளரவுக்கு மட்டுமே விசாரித்து விட்டு எச்சரித்து அனுப்பி வைத்து விட்டனர். வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கவில்லை. இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.