
கோவை: ஐ.பி.எல். சூதாட்டத்தில் பல லட்சங்களை சுருட்டிய முக்கிய தரகர் உட்பட 3 புக்கிகள் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோர் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில், சென்னையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஐ.பி.எஸ் சூதாட்டம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கோவையிலும் இதேபோன்று சூதாட்டம் நடந்து வருவதாகவும், இதில் பல லட்ச ரூபாய்களை பெட்டிங் மூலமாக குவித்து வருவதாகவும் கோவை மாநகர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீசார், ஏஜெண்ட் போல் தொலைபேசியில் கோவையில் உள்ள தரகரை தொடர்பு கொண்டு பெட்டிங் வைக்க விரும்புவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த தரகர், ''டாஸ் ஜெயிக்க, 10 ஓவருக்கு 60 ரன் எடுக்க, மேட்ச் ஜெயிக்க என மூன்று வகையாக ‘பெட்டிங்’ நடக்கிறது. நீங்கள் எந்த வகை பெட்டிங்கில் பணம் கட்டுகிறீர்கள்,” என கேட்டிருக்கிறார்.
''மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கான போட்டியில் வெற்றி அணி மீது பந்தயம் கட்டுகிறோம், பணம் 10 ஆயிரம் ரூபாய் தருகிறோம்” என போலீசார் கூற, பணத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கிளப்பில் கொண்டு வந்து செலுத்துமாறு கூறியுள்ளார். அங்கு சென்ற போலீசார், அந்த தரகருடன் பேச்சு கொடுத்து, பொன்னையராஜபுரம் ராஜம்மாள் லே அவுட்டில் ஒரு அபார்ட்மென்ட் வீட்டுக்கு சென்றனர். அங்கு தங்களை போலீஸ் என அடையாளம் காட்டிக் கொண்டு அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (56) என்பதும் சி.டி. விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. லட்சுமணன் வீட்டில் சோதனை நடத்திய போலீசார் சூதாட்டம் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.5 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் லேப்டாப், 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
##~~## |
ச.ஜெ.ரவி