Published:Updated:

`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்!

ஜி.சதாசிவம்
`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்!
`நான் காதலிக்க மாட்டேன், நீ எங்கள் வீட்டில் பேசிக்கொள்' - கடலூர் ஆசிரியை கொலையில் திணறும் போலீஸ்!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சின்னக் கடை வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் ரம்யா (23). இவர் கடந்த வருடம் கடலூரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்துள்ளார். அப்பொழுது விருத்தாசலம் அருகே உள்ள விருத்தகிரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரும் கடலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்துள்ளார். இருவரும் கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்தில் அடிக்கடி சந்தித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அப்பொழுது  ராஜசேகர், ரம்யாவை காதலிப்பதாகக் கூறியுள்ளார். அதற்கு ரம்யா மறுத்துள்ளார். ஆனாலும் ராஜசேகர் விடாமல் பல முறை ரம்யாவிடம் தொடர்ந்து காதலிப்பதாக கூறியுள்ளார். ராஜசேகரின் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ரம்யா, ``நான் காதலிக்க மாட்டேன், நீ வேண்டுமானால் எங்கள் வீட்டில் வந்து பேசிக்கொள்" எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து, கடந்த 6 மாதம் முன்பு ரம்யா வீட்டுக்கு ராஜசேகர் வந்து பெண் கேட்டுள்ளார். அதற்கு ரம்யாவின் பெற்றோர் முடியாது எனக் கூறி மறுத்துள்ளனர். அதன் பிறகு ரம்யா, ராஜசேகரை புறக்கணித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், ரம்யா தற்பொழுது ஆசிரியையாக பணியாற்றிய குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக்கு வந்துள்ளார். அப்பொழுது வகுப்பறையில் அமர்ந்திருந்த ரம்யாவை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலேயே  உயிழந்தார். 

இது குறித்த குறிஞ்சிப்பாடி போலீஸார் ராஜசேகர் மீது கொலை வழக்கு பதிவு செய்து காணாமல் போன அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மதியம் ராஜசேகரின் சகோதரி ஆனந்திக்கு செல்போனுக்கு அவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். ராஜசேகரின் செல்போன் டவர் சிக்னலை வைத்து போலீஸார் அவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். தனக்குக் கிடைக்காத பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என ராஜசேகர் ரம்யாவை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.