Published:Updated:

இமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்!

இமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்!
இமாச்சல் என்று இருந்ததால் விட்டுவிட்டார்கள்; ஆனால்.. - புனேவில் காஷ்மீரி பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு நாடே கண்ணீர் வடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்துக்கு எதிராகவும் நாடு முழுவதும் உள்ள மக்கள் கண்டனங்கள் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றனர். 

காஷ்மீரைச் சேர்ந்த ஆதில் அகமது தார் என்ற இளைஞர், ஜெயிஷ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கத்தில் இணைந்து அவர்களால் மூளைச் சலவை செய்யப்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். இந்தச் செய்தி இந்திய மக்களுக்கு காட்டுத் தீ போலப் பரவ இந்தியாவின் பல இடங்களில் வசித்து வரும் காஷ்மீரிகளை அந்த மாநில மக்கள் தாக்கி தங்களின் மாநிலத்தில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். 

இதேபோன்று பல இடங்களில் படித்து வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இதேபோன்று மற்றொரு சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்துள்ளது. 

புனேவில் உள்ள ஒரு செய்தித்தாளில் பணிபுரிபவர் ஜிம்ரான் நிஸார். இவர் நேற்று இரவு சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது இவரைப் பின்தொடர்ந்த இரண்டு நபர்கள் நிஸாரை தாக்கி  `காஷ்மீருக்குத் திரும்பி போ’ என்று தெரிவித்துள்ளனர். பிறகு இது தொடர்பாக பத்திரிகையாளர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க, காவலர்கள் நிஸாரை தாக்கிய இருவரையும் கைது செய்துள்ளனர். பிறகு அந்த இருவரும் நிஸாரிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர். ஆனால், இதுபற்றி காவலர்கள் தரப்பில் கூறும்போது, நிஸாருக்கும், அந்த இருவருக்கும் சாலையில் சிக்னலின்போது ஏற்பட்ட பிரச்னையால் அவர்கள் நிஸாரை தாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இதுபற்றி நிஸார் கூறும்போது, `` என் பணியை முடித்துக்கொண்டு இரவு 10:45 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் புனே திலக் சாலையில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு சிக்னலில் நான் நின்றுகொண்டிருக்கும்போது என்னைப் பின் தொடர்ந்து மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் வழி விடச் சொல்லி ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தனர். பின்னர் என் வண்டி நம்பர் இமாசலப்பிரதேசத்தில் உள்ளதைப் பார்த்து வழி விடு இல்லை உன்னை இமாசலப்பிரதேசத்துக்கே அனுப்பிவிடுவோம் எனக்  கூறினார்கள். பிறகு நான் பத்திரிகையாளர், காஷ்மீரைச் சேர்ந்தவன் எனக் கூறினேன். அதைக் கேட்ட அவர்கள் என் செல்போனை உடைத்து, வண்டியைச் சேதப்படுத்தினர். பின்னர் என்னையும் தாக்கி காஷ்மீருக்கு திரும்பிப் போ எனக் கூறினர்’ என்று அவர் தெரிவித்துள்ளார். பிரச்னை பெரிதாவதை தடுத்த காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் திரும்ப பெற்றுள்ளார் நிஸார்.