கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது ஏன்? | The reason for removing Karunanidhi from Gokulraj murder case

வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (23/02/2019)

கடைசி தொடர்பு:17:46 (23/02/2019)

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது ஏன்?

இனி, கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஒவ்வொரு வாய்தாவிலும் அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.மோகனே ஆஜராவார். இதனால், நீதிமன்றத்தில் அனல் பறக்கும் சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோகுல்ராஜ் கொலை வழக்கு: அரசு வழக்கறிஞர் நீக்கப்பட்டது ஏன்?

சேலம் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கு நாமக்கல் முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் கடந்த 30.8.2018-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில், அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, கோகுல்ராஜின் தாய் சித்ராவின் வழக்கறிஞர் நாராயணன் மற்றும் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கோபால கிருஷ்ண லட்சுமண ராஜூ ஆகியோர் வாதாடி வருகிறார்கள். இந்த நிலையில், ``உயர் நீதிமன்றம் நியமித்த ப.பா.மோகனே இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்து இவ்வழக்கை நடத்த வேண்டும். தற்போது இவ்வழக்கை நடத்திவரும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இதில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, இவ்வழக்கைக் கவனித்து வரும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் வழக்கு சம்பந்தமாக ஆலோசனை செய்வதில்லை. சாட்சிகளிடம் பேசுவதில்லை என்றும், யுவராஜ் வழக்கறிஞர் சாட்சிகளை மிரட்டும் தோரணையில் பேசினால்கூட கருணாநிதி வாய் திறப்பதில்லை என்றும்,  சாட்சிகளுக்குத் தமிழ் தெரியுமா... தெரியாதா என்றுகூடத் தெரிந்து கொள்ளாமல் வழக்கை நடத்துகிறார் என்றும், ஸ்வாதி உட்பட முக்கியச் சாட்சிகள் 164 வாக்குமூலத்துக்கு மாறாகப் பிறழ் சாட்சியாக மாறிய போதும் அவர்களிடம் கிடுக்குப்பிடி கேள்விகளைக் கேட்கவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதையடுத்து, கோகுல்ராஜ் குடும்பத்தினர் கருணாநிதி மீது அதிருப்தி அடைந்து உயர் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து,  இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி பா.மோகன் நியமிக்கப்பட்டார். ஆனாலும், இவ்வழக்கிலிருந்து கருணாநிதி நீக்கப்படாமல் நீடித்து வந்தார். ப.பா.மோகன் இவ்வழக்கில் ஆஜரானதும் பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி உட்பட முக்கியச் சாட்சிகளை மறு விசாரணை செய்ய நீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்தார்.

அரசாணை - கோகுல்ராஜ் கொலை வழக்கு

நீதிபதி மனுவை ஏற்றுக்கொள்ளாமல், ``அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி மட்டுமே மனுத்தாக்கல் செய்ய முடியும்” என்றார். அதையடுத்து, ப.பா. மோகன் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறினார். இதற்கிடையில், பெரும்பாலான சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவிட்டது. இந்த நிலையில், கடந்த 19.2.2019 அன்று கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவருடைய தாயார் சித்ரா கோரிக்கையின் பேரில் உயர் நீதிமன்றம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ப.பா மோகனை நியமித்தது. இந்த நிலையில், ``உயர் நீதிமன்றம் நியமித்த ப.பா.மோகனே இவ்வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்து இவ்வழக்கை நடத்த வேண்டும். தற்போது இவ்வழக்கை நடத்தி வரும் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி வழக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என்று தமிழக உள்துறை அமைச்சகம் அதிரடி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இனி, கோகுல்ராஜ் கொலை வழக்கின் ஒவ்வொரு வாய்தாவிலும் அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.மோகனே ஆஜராவார். இதனால், நீதிமன்றத்தில் அனல் பறக்கும் சம்பவங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கோகுல்ராஜ் அம்மா சித்ராவிடம் கேட்டதற்கு, ``கலையும், கோகுல்ராஜும் சின்ன வயசா இருக்கும்போதே அவுங்க அப்பா இறந்துட்டாரு. நான் கஷ்டப்பட்டு ரெண்டு பசங்களையும் வளர்த்தேன். கல்லூரிப் படிப்பை முடித்ததும் என் பாரமே தீர்ந்ததென்று நினைச்சுட்டு இருக்கும்போது நெஞ்சில் நெருப்பை அள்ளிப்போட்டதுபோல கோகுல்ராஜை கொலை பண்ணிட்டாங்க. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கிறேன்'' என்று கதறி அழுதவர், சற்று நேரம் கழித்து, ``என் மகன் கொலைக்கு இந்த அரசும், நீதிமன்றமும் நீதி வழங்கும் என்று நம்பினேன். ஆனால், எங்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் சொல்வதற்குக்கூட ஆள் இல்லை. அரசு நியமித்த வழக்கறிஞரும் வாய் திறக்கவில்லை. அதையடுத்து, உயர் நீதிமன்றம் சென்று அரசு சிறப்பு வழக்கறிஞராகப் பவானி பா.மோகன் சாரை நியமித்து ஆணை பெற்று வந்தும் அவரை வாதிட அனுமதிக்கவில்லை. இதனால், மன வேதனையில் இருந்தோம்.

இந்நிலையில், உள்துறை அமைச்சகம் கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதியை நீக்கிவிட்டு ப.பா.மோகன் சாரை நியமித்திருப்பது சற்று மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. என் மகனின் சாவுக்கு ப.பா மோகன் சார் நீதி பெற்றுத் தருவார்'' என்றார்.

ப.பா.மோகன்

இதுபற்றி கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி பா.மோகன், ``கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசால் நியமிக்கப்பட்டு, சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான கருணாநிதிமீது பாதிக்கப்பட்ட கோகுல்ராஜ் குடும்பத்தினர் அதிருப்தி காரணமாக, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி தமிழக அரசால் கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நான் 12.11.2018 நியமிக்கப்பட்டேன். ஆனாலும், அரசுத் தரப்பில் ஆஜரான கருணாநிதி நீக்கப்படவில்லை. நான் நீதிமன்றத்தில் ஆஜரானதும், ஸ்வாதி உட்பட முக்கியச் சாட்சிகளை மறு விசாரணை செய்ய தாக்கல் செய்த மனுவைக்கூட நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், நீதிமன்றத்திலிருந்து வெளியேறி அரசுக்கும், சி.பி.சி.ஐ.டி துறை எஸ்.பி-க்கும் புகார் மனு அளித்தேன். அதையடுத்து, அரசின் உள்துறை அமைச்சகத்திடமிருந்து கோகுல்ராஜ் வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக கருணாநிதியை நீக்கி என்னை நியமித்து இருக்கிறார்கள். இதற்கிடையில், பெரும்பான்மையான சாட்சிகள் விசாரிக்கப்பட்டு விட்டன. மீண்டும், அவர்களை மறு விசாரணை செய்ய மனுத் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் கட்சிக்காரர்கள் நீதிமன்றத்துக்குச் சூழ்ந்து வருவதால் சாட்சிகளுக்கு தக்க பாதுகாப்பு இல்லை. அதனால், இவ்வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற கோகுல்ராஜ் தாயார் மூலம் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்றார்.

கருணாநிதி

கோகுல்ராஜ் கொலை வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக இருந்த கருணாநிதியிடம் கேட்டதற்கு, ``இந்த வழக்கிலிருந்து என்னை நீக்கியதாக நானும் கேள்விப்பட்டேன். நான் அரசாணை பெற்று முறையாக கோகுல்ராஜ் கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். அதனால், என்னை நீக்கியதற்கான ஆர்டர் நகல் எனக்கும் அனுப்புவார்கள். அந்த நகல் இன்னும் என் கைக்கு கிடைக்கவில்லை. நான் இந்த வழக்கில் சிறப்பாகவும், நேர்மையாகவும் செயல்பட்டேன். பாதிக்கப்பட்ட கோகுல்ராஜ் குடும்பத்தினர் பவானி பா.மோகன் வாதாடினால் நன்றாக இருக்கும் என விரும்பினார்கள். ப.பா.மோகன், ஸ்வாதியை மறு விசாரணை செய்ய மனுத் தாக்கல் செய்யும்போது என்னிடம் கேட்டார். ’நீங்களும் அரசு சிறப்பு வழக்கறிஞராக இருப்பதால் நீங்களே மனுத் தாக்கல் செய்யுங்கள்’ என்று சொன்னேனே தவிர, மனுத் தாக்கல் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. இறுதியில் நீதிபதி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்வாதியை மறு விசாரணை செய்தாலும், அவர் உண்மையைச் சொல்வாரா என்பது சந்தேகம். ஆனால், ஸ்வாதி சம்பவத்தன்று ஒரு செல்போன் வைத்திருந்தார். அந்த செல்போன் சிம் யாருடைய பெயரில் இருந்தது என்று கேட்டிருக்கலாம். அதைக் கேட்கத் தவறிவிட்டேன். மற்றபடி அவர், பிறழ் சாட்சியமாக மாறிய பிறகு என்ன செய்ய முடியும்? இவ்வழக்கில் இருந்து என்னை நீக்கியது குறித்து மகிழ்ச்சியும் இல்லை. வருத்தமும் இல்லை'' என்றார்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close