Published:Updated:

`நாங்கள் இல்லாமல் நீங்கள் யாரைத் திட்டுவீர்கள்'- பிள்ளைகளை கொலை செய்து உயிரை மாய்த்த தாயின் உருக்கமான கடிதம்

`நாங்கள் இல்லாமல் நீங்கள் யாரைத் திட்டுவீர்கள்'- பிள்ளைகளை கொலை செய்து உயிரை மாய்த்த தாயின் உருக்கமான கடிதம்
`நாங்கள் இல்லாமல் நீங்கள் யாரைத் திட்டுவீர்கள்'- பிள்ளைகளை கொலை செய்து உயிரை மாய்த்த தாயின் உருக்கமான கடிதம்

சென்னையில் மகன், மகளை கொலை செய்துவிட்டு தாய், தற்கொலை செய்து கொண்டார். கணவர் திட்டியதற்காக இந்த விபரீத முடிவை அந்தக் குடும்பம் எடுத்துள்ளதாகக் கடிதம் எழுதி வைத்துள்ளார் அந்தப் பெண். 

சென்னை ராயலா நகர், 1-வது குறுக்குத் தெருவில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் செந்தாமரை. இவர் அரும்பாக்கத்தில் கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் நடத்திவருகிறார். இவருக்கு அபிதா என்ற மனைவியும் லட்சுமி நாராயணன் (10) என்ற மகனும் மகாலட்சுமி (7) என்ற மகளும் உள்ளனர். வழக்கம்போல செந்தாமரை வேலைக்குச் சென்றுவிட்டார். ஞாயிற்றுக்கிழமை என்பதால் குழந்தைகளுடன் வீட்டில் அபிதா இருந்தார். செந்தாமரை அபிதாவுக்கு போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தனித்தனியாக அபிதா மற்றும் குழந்தைகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்து செந்தாமரை அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து ராயலாநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார், சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் கௌதமன் தலைமையிலான போலீஸார் வந்து, கதவை உடைத்து உள்ளே சென்றனர். பிறகு தூக்கில் சடலமாகத் தொங்கிக்கொண்டிருந்த மூன்று பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து வீடு முழுவதும் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அபிதா எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்று போலீஸாரின் கையில் சிக்கியது. அதில், `எங்கள் மூன்று பேரின் மரணத்துக்கு யாரும் காரணமில்லை. நாங்களே இந்த முடிவை எடுத்துக்கொள்கிறோம்' என்று எழுதியிருந்தது.

அன்புள்ள கணவர் செந்தாமரைக்கு அபிதா எழுதிக் கொள்வது என்று தொடங்கும் கடிதத்தில் `நாங்கள் இல்லாமல் இனிமேல் நீங்கள் யாரைத் திட்டுவீர்கள். நீங்கள் தனிமையில் இருந்தால்தான் எங்களின் அருமை உங்களுக்குத் தெரியும். உங்கள் தம்பி, அவரின் மனைவியை நம்பாதீர்கள். எங்களின் சாவுக்கு அவர்கள் வரக் கூடாது. நீங்கள் எங்களைத் திட்டும்போது எல்லாம் நாங்கள் அவமானம் அடைகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில்தான் அபிதா இந்த முடிவை எடுத்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து செந்தாமரையிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர் கண்ணீர் மல்க போலீஸாரின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``செந்தாமரைக்கும் அபிதாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி மற்றும் குழந்தைகளை செந்தாமரை கடுமையாக திட்டுவதுண்டு. இதனால் மன உளைச்சலில் அபிதா மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதன் காரணமாகத்தான் அபிதா, மகனையும் மகளையும் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டுள்ளார். அதன்பிறகு அவர் புடவையில் தற்கொலை செய்துள்ளார். மூன்று பேரின் கழுத்துப்பகுதியில் காயங்கள் உள்ளன. மேலும், அபிதா எழுதிய தற்கொலைக் கடிதத்திலும் தற்கொலைக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. செந்தாமரையிடம் விசாரித்தபோது குடும்பத்தகராறில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது" என்றனர். 

மூன்று பேரின் சடலங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மூன்று பேருக்கும் ஒரே நேரத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. செந்தாமரையின் குடும்பம், சில நாள்களுக்கு முன்புதான் ராயலா நகர் பகுதிக்கு வந்துள்ளனர். அதற்கு முன்பு வளசரவாக்கம் குறிஞ்சி நகரில் குடியிருந்துள்ளனர். இதனால் தற்போது அவர்கள் குடியிருந்த பகுதியில் செந்தாமரை குடும்பத்தினர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதனால் குறிஞ்சி நகரில் செந்தாமரை குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். 

ராயலாநகர் பகுதியில் மகனையும் மகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவர் திட்டியதற்காகவும், குடும்பத்தகராறு காரணமாகவும் பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு அந்தக் குடும்பத் தலைவரை நிம்மதி இழக்க வைத்துள்ளது.