Published:Updated:

`போதைப்பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார்!’ - கண்ணீர்விடும் பெண் இன்ஜினீயர்

`போதைப்பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார்!’ - கண்ணீர்விடும் பெண் இன்ஜினீயர்
`போதைப்பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார்!’ - கண்ணீர்விடும் பெண் இன்ஜினீயர்

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்ற பெண் இன்ஜினீயர் ஒருவரை தாக்கியதாக ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

கோவையைச் சேர்ந்த டிப்ளோமா இன்ஜினீயர் உமா (பெயர் மாற்றம்) என்பவர் சென்னை தேனாம்பேட்டைக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் பேசினோம். ``எனக்குச் சொந்த ஊர் கோவை. டிப்ளோமா இன்ஜீனியரிங் முடித்துவிட்டு சென்னையில் வேலை தேடிவந்தேன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். அப்போது நண்பர்கள் மூலம் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் ஐஸ் க்ரீம் பார்லர் நடத்திவரும் அசன் என்பவர் அறிமுகமானார். இருவரும் காதலித்தோம். இந்தச் சூழ்நிலையில் அவர் எனக்குப் போதை பொருள்களைக் கட்டாயப்படுத்திக் கொடுத்தார். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. 

இந்தநிலையில் அசனின் சுயரூபம் தெரிந்ததும் அவரைவிட்டு விலகிவிட்டேன். கடந்த 24-ம் தேதி, தேனாம்பேட்டை பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்குத் தோழியின் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்றிருந்தேன். அங்கு அசனும் வந்திருந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் என்னை ரெஸ்ட் ரூம் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து என்னைத் தாக்கினார். பிறகு, என்னுடைய செல்போனை உடைத்துவிட்டார். அவர் தாக்கியதில் எனக்கு மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் ரத்தம் கொட்டியது. இதனால் சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.

எனக்கு நடந்த கொடுமைகளைக் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை மனு ஏற்புச் சான்றிதழ்கூட கொடுக்கவில்லை. எனக்கு நீதி வேண்டும். எனக்குப் போதைப் பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார். நான் மட்டுமல்ல என்னைப்போல சில பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அசனுடன் பழகியபோதுதான் அவர் போதைப் பொருள்களைக் கொடுத்து சில பெண்களை ஏமாற்றுவது எனக்குத் தெரியவந்தது. அதைத் தட்டிக்கேட்டபோதுதான் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே, அசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். 

`போதைப்பொருள் கொடுத்து என் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்கிவிட்டார்!’ - கண்ணீர்விடும் பெண் இன்ஜினீயர்

அசனுக்குத் திருமணமாகிவிட்டதா என்று கேட்டதற்கு, ``அவருக்குத் திருமணமாகி குழந்தையும் இருக்கிறது. அதன் பிறகுதான் அவரைக் காதலித்தேன். ஆனால், என்னையும் அவர் திருமணம் செய்துகொள்வதாக முதலில் ஆசைவார்த்தை கூறினார். ஆனால், அதன் பிறகு அவர் என்னை ஏமாற்றிவிட்டார்’’ என்றார். 

அசன் மீது நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டதற்கு, ``என்னுடைய செல்போனில் இருந்தது. ஆனால், செல்போனை உடைத்து ஆதாரங்களை அழித்துவிட்டார். இருப்பினும் அவரும் நானும் பேசிய சில உரையாடல்கள் என்னிடம் இருக்கிறது’’ என்றார்.

உமாவின் குற்றச்சாட்டுகள் குறித்து அசனிடம் பேசினோம். ``நான் வாழ்க்கையில் செய்த பெரியதவறு உமாவுடன் பழகியதுதான். அவருக்காகச் செலவு செய்தேன். நான் வாங்கிக் கொடுத்ததுதான் அந்தச் செல்போன். என்னைப் பற்றித் தவறான தகவல்களை அவர் கூறிவருகிறார். என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்’’ என்றவர், `உமா குறித்து அவரின் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்போது உங்களுக்கு எல்லாம் தெரியும். உமாவின் உறவினர் ஒருவர் என்னிடம் பேசிய ஆடியோ உள்ளது. அந்த ஆடியோவைக் கேட்டாலே அவரின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்ளலாம். நான் மட்டுமல்ல இன்னும் சிலரும் அவரால் ஏமாந்துள்ளனர்’’ என்றார். 

நீங்கள் போதைப் பொருள் கொடுத்து சில பெண்களை ஏமாற்றியதாகச் கௌசல்யா குற்றம் சாட்டியுள்ளாரே என்று கேட்டதற்கு, ``அது உண்மையில்லை. உமாதான் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர். சம்பவத்தன்றுகூட ஹோட்டலில் என்னை அவர் தாக்கினார்’’ என்றார். 

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாரிடம் கேட்டதற்கு, `உமா கொடுத்த புகாரின்பேரில் விசாரணை நடத்திவருகிறோம். தற்போது அவர், அரசு மருத்துவமனையில் இருக்கிறார். அவரின் வாக்குமூலத்தையும் பெற்றுள்ளோம். விசாரணைக்குப் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நட்சத்திர ஹோட்டல்களுக்குப் பார்ட்டி என்ற பெயரில் போதைப் பொருள்களின் சப்ளை சர்வசாதாரணமாக நடந்துவருவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் நட்சத்திர ஹோட்டல்களுக்கு தடைவிதிக்கப்பட்ட போதைப் பொருள்களை சப்ளை செய்யும் கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளோம்’’ என்றார்.