Published:Updated:

`அவள் போன இடத்துக்கே நானும் போகிறேன்!'- 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தந்தை

`அவள் போன இடத்துக்கே நானும் போகிறேன்!'- 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தந்தை
`அவள் போன இடத்துக்கே நானும் போகிறேன்!'- 2 குழந்தைகளை தவிக்கவிட்டு தற்கொலை செய்த தந்தை

திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மனைவி தற்கொலை செய்ய, அந்த இழப்பைத் தாங்க முடியாத கணவர், இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆறு என்கிற ஆறுமுகம் (43). இவர், பெயின்டிங், வீடு புரோக்கர், ரியல் எஸ்டேட் தொழில் எனக் கிடைக்கிற வேலைகளை செய்துவந்தார். இவரின் மனைவி ஜெயலட்சுமி (30). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்தார் ஆறுமுகம். இந்தநிலையில் ஜெயலட்சுமி, மதுரை சிம்மக்கலுக்குச் சென்றார். கடந்த 21-ம் தேதி திடீரெனக் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவலை கேள்விபட்ட ஆறுமுகம் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மதுரைக்குச் சென்ற ஆறுமுகம், மனைவியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். மனைவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியிலும் சோகத்தோடு ஆறுமுகம் காணப்பட்டார். 

இதையடுத்து மதுரையிலிருந்து சென்னைக்கு அவர் திரும்பினார். வீட்டில் தனியாக இருந்த ஆறுமுகம், மனைவியின் புடவையில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஆறுமுகத்தின் சகோதரி அங்கு வந்தார். அப்போது தூக்கில் ஆறுமுகம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, நீலாங்கரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஆறுமுகத்தின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் சடலத்தையும் உறவினர்கள் தகனம் செய்தனர். அடுத்தடுத்து தாயும் தந்தையும் இழந்த சோகத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் அநாதையாக நிற்கின்றனர். 

இதுகுறித்து ஆறுமுகத்தின் நண்பர்கள் கூறுகையில், ``ஆறுமுகத்தின் மனைவி ஜெயலட்சுமி தற்கொலை செய்த சம்பவம் அந்தக் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இவர்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகளாகின்றன. மனைவி மற்றும் குழந்தைகள் மீது பாசமாக இருந்த ஆறுமுகம், வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் எங்களைச் சந்தித்த ஆறுமுகம், `அவள் போன இடத்துக்கே நானும் போகிறேன்' என்று சொல்லிவந்தார். அப்போது அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். `உன்னுடைய மனைவிதான் இப்படிப் பண்ணிவிட்டாள். நீயாவது, குழந்தைகளுக்காகவாவது வாழ வேண்டும்' என்று கூறினோம். ஆனால், மனைவியைப் பிரிந்த சோகத்திலிருந்து அவரால் மீள முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான் வீட்டில் அவர் தனியாக இருந்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்போது இரண்டு பெண் குழந்தைகளின் எதிர்காலம்தான் கேள்வியாகியுள்ளது" என்றனர் சோகத்துடன். 

மதுரையில் ஜெயலட்சுமியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை நடந்துவருகிறது. அதற்குள் ஆறுமுகம் தற்கொலை செய்துள்ளார். மனவேதனையில் அவர் தற்கொலை செய்திருப்பதாக நீலாங்கரை போலீஸார் கூறுகின்றனர். அவரின் வீட்டிலிருந்து கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அதோடு ஆறுமுகத்தின் உறவினர்களிடமும் விசாரணை நடந்துவருகிறது. 

ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அநாதையாக நிற்கும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் ஆறுமுகம், ஜெயலட்சுமியின் உறவினர்கள் தர்ம சங்கடத்தில் உள்ளனர். திருமணம் முடிந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி பிரிந்த துக்கத்தில் கணவன் இறந்த சம்பவம் ஈஞ்சம்பாக்கத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆறுமுகத்தின் சடலத்தைப் பார்த்து குழந்தைகளும் உறவினர்களும் கதறி அழுத சம்பவம் பார்ப்பவரை கண்கலங்கச் செய்தது.