Published:Updated:

`இந்திய விமானியின் நிலை குறித்து விசாரிக்கிறோம்!’ - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

`இந்திய விமானியின் நிலை குறித்து விசாரிக்கிறோம்!’ - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விளக்கம்
`இந்திய விமானியின் நிலை குறித்து விசாரிக்கிறோம்!’ - வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விளக்கம்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக, நேற்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய விமானப்படை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், பால்கோட் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப் பெரிய முகாம்கள் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை முதலில் மறுத்த பாகிஸ்தான் அரசு, இந்தியா போர் ஒப்பந்தத்தை மீறியுள்ளது, இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காகத் தாக்குதல் நடத்தப் பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது’’ என்றது.

இந்த நிலையில் இந்திய விமானப் படையின் விமானத்தைச் சுட்டுவீழ்த்தியதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. மேலும், அந்த விமானத்தின் விமானி ஒருவரையும் சிறைபிடித்துள்ளதாகக் கூறியது. இதை மத்திய அரசு முதலில் மறுத்தது. ஆனால், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. அதில் இருந்த விமானி அபினந்தன் வர்தன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இந்தியா தரப்பில் மிக்-21 ரக விமானத்தில் சென்ற விமானி அபினந்தன் விமானப்படைத் தளத்துக்குத் திரும்பவில்லை என்று தகவல் வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், ரவீஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப்படையின் F16 விமானத்தை ராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துவிட்டது. தொடர்ந்து நமது படைகள் மீது தாக்குதல் நடத்தப் பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. நாம் விழிப்புணர்வுடன் இருந்ததால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக இந்திய விமானப்படையின் மிக் 21 விமானத்தை ஒன்றையும் இழந்துள்ளோம். விமானப் படை தாக்குதலின்போது  நம் விமானம் கீழே விழுந்தது. அந்த விமானத்தில் இருந்து விமானிகளைக் காணவில்லை. அவர்களில் ஒருவரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன் உண்மைத் தன்மை குறித்து இந்தியா விசாரித்து வருகிறது’’ என்றார்.