Published:Updated:

ஊட்டி ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் திடீர் ரெய்டு - கணக்கில் வராத பணம் பறிமுதல்!

ஊட்டி ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் திடீர் ரெய்டு - கணக்கில் வராத பணம் பறிமுதல்!
ஊட்டி ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலகத்தில் திடீர் ரெய்டு - கணக்கில் வராத பணம் பறிமுதல்!

உதகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தப்பட்டதில் கணக்கில் வராத ரூ.6.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 27 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுக்கு விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்த தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.27 லட்சம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. இதற்கான காசோலை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவரும் ரூ.50,000 தர வேண்டும் என மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மணிவேலன் கேட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் புகார்கள் வந்துள்ளன. இப்புகாரின் பேரில் உதகை பிங்கர்போஸ்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் உதகை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். 

இந்தச் சோதனையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.6.35 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிவேலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணைக்கிடையே அதிர்ச்சியில் அலுவலக ஊழியர் ஒருவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது. இது குறித்து டி.எஸ்.பி ., தட்சணாமூர்த்தி கூறுகையில், ``ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வழங்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு தலைமையாசிரியரும் ரூ.50,000 லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கேட்டதாக வந்த புகாரின் பேரில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கணக்கில் வராத ரூ.6.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.