Published:Updated:

இன்று தாயகம் திரும்பும் அபிநந்தன் - காலை முதலே வாகா எல்லையில் குவிந்த இந்தியர்கள்!

இன்று தாயகம் திரும்பும் அபிநந்தன் - காலை முதலே வாகா எல்லையில் குவிந்த இந்தியர்கள்!
இன்று தாயகம் திரும்பும் அபிநந்தன் - காலை முதலே வாகா எல்லையில் குவிந்த இந்தியர்கள்!

பாகிஸ்தான் வசம் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை இன்று விடுவிப்பதாகப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை இந்தியாவிடம் ஆதாரங்கள் இருந்தால் எங்களிடம் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என இம்ரான் கான் பேசியிருந்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் மீது இந்தியா அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது. இதனை மறுத்த பாகிஸ்தான், இந்திய போர்விமானங்கள் எல்லை தாண்டியதாகக் கூறியது. எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவிய நிலையில் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லையில் அத்துமீறியது. விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்தியா தெரிவித்தது.


இதனை மறுத்த பாகிஸ்தான் தங்கள் எல்லையில் இந்திய விமானங்கள் அத்துமீறியதாகவும் அதைச் சுட்டுவீழ்த்தியதாகவும் ஒரு வீரர் பிடிபட்டுள்ளார் எனக் கூறியது. இந்தியா இதனை மறுத்த நிலையில் பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டது. பிடிபட்டுள்ள விமானப்படை வீரர் பெயர் அபிநந்தன் எனத் தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்குள் சென்ற இந்திய விமானம் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானப்படை வீரரை மீட்கும் முயற்சிகள் எடுக்கப்படும் எனக் கூறினர்.

இந்நிலையில்தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நல்லெண்ண அடிப்படையில் இந்திய வீரர் அபிநந்தனை விடுவிப்பதாக நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதன்படி இன்று அவர் இந்தியா வசம் ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிகிறது. ராவல்பிண்டி ராணுவ முகாமிலிருந்து விமானம் மூலம் அபிநந்தனை லாகூருக்கு அழைத்து வரப்படவுள்ளதாகும் அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்துவரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தனை எங்கு எத்தனை மணிக்கும் இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளனர் என்ற அதிகாரபூர்வத் தகவல் இல்லை. இருப்பினும் வாகா எல்லையில் ஏராளமான பொதுமக்கள் இந்திய தேசியக்கொடியுடன் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் அபிநந்தனை வரவேற்பதற்காக அவரது பெற்றோர் நேற்று இரவு டெல்லி புறப்பட்டுச் சென்றனர். விமானத்தில் அபிநந்தனின் தந்தை வர்தமன், தாயார் ஷோபனா ஆகியோருக்கு விமானப் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் விமானத்தில் ஏறியதும் கைத்தட்டியும் சிலர் வணக்கம் செலுத்தியும் வரவேற்றனர். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.