Published:Updated:

முருகன் இட்லிக் கடை இப்படி செய்யலாமா? - மின்வாரியத்துக்கு கொடுக்கப்பட்ட ஷாக்

முருகன் இட்லிக் கடை இப்படி  செய்யலாமா? - மின்வாரியத்துக்கு கொடுக்கப்பட்ட ஷாக்
முருகன் இட்லிக் கடை இப்படி செய்யலாமா? - மின்வாரியத்துக்கு கொடுக்கப்பட்ட ஷாக்

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் முருகன் இட்லிக் கடை, 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான மின்சார முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் புகார் கொடுத்துள்ளார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது பிரதான சாலையில் முருகன் இட்லிக் கடை செயல்பட்டுவருகிறது. இந்தக் கடைக்கு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மின்சாரத்தைப் பயன்படுத்தியதில் கடை நிர்வாகம் முறைகேடு செய்வதாக தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள்  கடையில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியதில் 42 லட்சம் ரூபாய் மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில்,  `` சோதனை செய்தபோது தொழிற்சாலைக்குரிய மின் இணைப்பை பெற்ற முருகன் இட்லிக் கடை அங்கு உணவு வகைகளை உற்பத்தி மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் வணிக நோக்கத்தில் தயாரித்த உணவு வகைகளை விற்றுவந்துள்ளனர். இதுதான் அவர்கள் செய்த தவறு. அதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 42 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால்தான்  கடை உரிமையாளர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை முருகன் இட்லி கடையின் மேலாளர் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளோம். இதையடுத்து, இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும்போது மின்சார வாரிய இழப்பை முருகன் இட்லி கடை நிர்வாகம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும்" என்றார். 

கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாரியத்துக்கு இழப்பு ஏற்பட்டதை தற்போது கண்டறிந்தது எப்படி என்ற கேள்வியை முன்வைத்தபோது மின்வாரிய அதிகாரிகளால் பதிலளிக்க முடியவில்லை.

புகார் கொடுத்த மின்வாரிய உதவி பொறியாளர் ஜெயபிரகாஷிடம் கேட்டதற்கு ``மின் கட்டணத்தில் முறைகேடு செய்ததாக முருகன் இட்லிக் கடை மீது புகார் கொடுத்துள்ளோம். சமரசத் தொகையாக 4 லட்சம் ரூபாயை கடை நிர்வாகம் இன்று செலுத்திவிட்டது. மீதமுள்ள தொகையை செலுத்துவதாக கடை நிர்வாகம் கூறியுள்ளது" என்றார். 

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்படும் முருகன் இட்லிக் கடையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னணியில் சிலர் உள்ளனர். அதாவது, கடை செயல்படும் இடமானது தொழிற்பேட்டையில் தொழிற்சாலை சங்க அலுவலக கட்டத்திலேயே செயல்படுகிறது. மேலும், அம்பத்தூர் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களை சரிவர கவனிக்காததே நடவடிக்கைக்கு காரணம் என்கின்றனர் உள்விவர வட்டாரங்கள். 

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை முருகன் இட்லிக் கடைக்கு போன் செய்தோம். மேலாளர் என்று நம்மிடம் பேசிய ஒருவர், மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படுத்திய தகவலை அவரிடம் தெரிவித்தவுடன் `கிச்சனில் ரெய்டு நடந்தது. ஆனால் எவ்வளவு தொகை என்பது எல்லாம் எங்களுக்குத் தெரியாது' என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.