Published:Updated:

ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா?!

ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா?!
ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா?!

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். அதேபோல 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் 5 தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்தின் மீது மோதிய தீவிரவாதிகள், உடனடியாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து துணைக் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் நாடாளுமன்றம் முழுவதும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்தது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர் மசூத் அசார் என கண்டறியப்பட்டது.

Photo Credit: ANI

தொடர்ந்து இந்தியா மீதான தாக்குதலில் தீவிரம் காட்டிவந்த மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்தார். சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், `` மசூத் அசார், பாகிஸ்தானில்  இருப்பது உண்மைதான். ஆனால், அவர் உடல்நிலை

சரியில்லாமல் இருக்கிறார். அதனால், அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார். எனக்கு வந்த தகவல்படி அவர் பாகிஸ்தானில்தான் உள்ளார். ஆனால், வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத வகையில் அவர் உடல் நலிவுற்றுள்ளார்' என்றார்.

தொடர்ந்து மசூத் அசார் கைது செய்யப்படுவாரா என்று குரேஷியிடம் கேட்டதற்கு, `நாங்கள் கைது செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிரான ஆதாரம் என்ன இருக்கிறது. இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, அசார் மிகுந்த உடல் நலக் குறைவாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் உள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது” என்றார்.

இந்த நிலையில் மசூத் அசார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என பாகிஸ்தானின் சில ஊடகங்களிலும் வட இந்திய ஊடகங்கள் சிலவற்றிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அவர் இறந்தது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானில் மசூத் அசார் இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பவே இதுபோன்ற தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.