Published:Updated:

`இந்திய விமானப்படை தாக்குதலில் பாதிப்பு இல்லையென்றால் பதில் தாக்குதல் ஏன்?!’ - ஏர் சீஃப் மார்ஷல்

`இந்திய விமானப்படை தாக்குதலில் பாதிப்பு இல்லையென்றால் பதில் தாக்குதல் ஏன்?!’ - ஏர் சீஃப் மார்ஷல்
`இந்திய விமானப்படை தாக்குதலில் பாதிப்பு இல்லையென்றால் பதில் தாக்குதல் ஏன்?!’ - ஏர் சீஃப் மார்ஷல்

'இந்திய விமானப்படை விமானங்கள் காட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தால், பாகிஸ்தான் தரப்பில் ஏன் பதில் தாக்குதல் நடத்த வேண்டும்' என்று இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி பிரேந்தர் சிங் தானோ கேள்வி எழுப்பியிருக்கிறார். 

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில், தீவிரவாதத் தளம் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. ஆனால், இந்திய விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுவந்தது. 

இந்த நிலையில், சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் விமானப் படைகள், கடந்த பிப்ரவரி 27ல் தாக்குதல் நடத்த முயன்றன. பாகிஸ்தான் விமானப்படையின் முயற்சியை இந்திய விமானப்படை தடுத்து, பதில் தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் விமானப் படையின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல, மிக் 21 பைசான் ரக விமானம் ஒன்றை இந்திய விமானப்படை இழந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கிய இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. பின்னர், கடந்த 1-ம் தேதி அவரை வாகா எல்லையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவருக்கு, டெல்லியில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், கோவை வந்த இந்திய விமானப்படை தலைமைத் தளபதி பிரேந்தர் சிங் தானோ செய்தியாளர்களிடம் பேசினார். இந்திய விமானப் படை தாக்குதல்குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ``அவர்கள் கூற்றுப்படி இந்திய விமானப்படை காட்டுப் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தால், பதில் தாக்குதல் நடத்த அவர்களுக்கு அவசியம் இல்லையே. இந்திய விமானப்படையைப் பொறுத்தவரை இலக்குகளைத் தாக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விமானப்படை விமானங்கள் சரியாக அந்த இலக்குகளைத் தாக்கின. தாக்குதல் நடத்துவது மட்டுமே விமானப்படையின் வேலை. இலக்குகள் சரியாகத் தாக்கப்பட்டனவா இல்லையா என்பதையே விமானப்படை கணக்கிடும். தாக்குதலில் ஏற்படும் இழப்புகளைக் கணக்கிடுவது விமானப்படையின் பணி அல்ல. அதுகுறித்து அரசுதான் கூற வேண்டும்’’ என்றார்.

விமானப்படை விமானி அபிநந்தன், மீண்டும் போர் விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``அபிநந்தனின் உடல்நிலையைப் பொறுத்தே அந்த முடிவை எடுக்க முடியும். அவருக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவர் முழு உடல் தகுதியை எட்டினால், நிச்சயம் போர் விமானத்தை மீண்டும் இயக்குவார். போர் விமானங்களை இயக்கும் விமானிக்கு உடல்நிலைதான் முக்கியம். அவர் முழு உடல் தகுதியை எட்டுவதற்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது’’என்றார்.