##~## |
அரசின் பல்வேறு முக்கிய துறைகளின் இயக்குநர் அலுவலகங்கள் இயங்கி வரும் இந்தக் கட்டடத்தில் கடந்த 15-ம் தேதி நள்ளிரவு தீப்பற்றியது. எழிலகத்தில் தீ விபத்து ஒன்றும் புதிது இல்லை என்றாலும் இம்முறை நடந்த விபத்தால், தீயணைப்பு வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் விஷயம்.
இந்தத் தீ விபத்துக்கு காரணம், சமூக நலத்துறை அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் ஏற்பட்ட மின்கசிவு என்கிறார்கள். அங்கே இருந்து பரவிய தீ, தொழில் வணிகத்துறையின் கட்டடத்தையும் ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் நள்ளிரவு அங்கு சென்ற போது பனை மரம் உயரத்துக்குத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. மேல்தளத்தில் இருந்த தீயை ஓரளவு அணைத்துவிட்டு, தீயணைப்புத் துறையின் முன்னணி தீத்தடுப்பு வீரரான அன்பழகன் தலைமையிலான டீம், தொழில் வணிகத் துறை வளாகத்துக்குள் நுழைந் தது. ஆனால், மேல்தளம் முழுமையாக எரிந்து இருந்ததால், அந்தத் தளம் அப்படியே சரிந்து அன்பழகன் மீது விழுந்தது. அந்த இடத்திலேயே உடல் நசுங்கி அவர் இறந்தார்.
பின்னால் சென்ற, தீயணைப்புக் கோட்ட அதிகாரி ப்ரியா ரவிச்சந்திரன், தீயணைப்பு வீரர் முருகன் ஆகியோர் மீதும் சில இடிபாடுகள் விழுந்தன. தொடர்ந்து இவர்கள் வெளியேற முற்பட்டபோது, பின்பக்கமாகவும் தீயுடன் கூடிய இடிபாடுகள் விழுந்ததால் உள்ளே மாட்டிக்கொண்டார்கள். பத்து நிமிடங்கள் போராடி இருவரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இருவரும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

தனது மகளுக்கு வரும் 29-ம் தேதி நிச்சயதார்த்தம் வைத்து இருந்தார் அன்பழகன் என்பதுதான் வேதனை. கடந்த 2003-ம் ஆண்டு தமிழகத்தில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் நியமிக்கப்பட்ட இரு பெண் அதிகாரிகளில் ஒருவர் இந்த ப்ரியா ரவிச்சந்திரன். இப்போது அசோக்நகர் கோட்ட தீயணைப்புத் துறை அதிகாரியாக இருக்கிறார்.
தீ விபத்துக்கு காரணம் மின்கசிவு என்று கூறப்பட்டாலும், எழிலகத்தின் நேர்மையான ஊழியர்கள் இதை ஏற்க மறுக்கிறார்கள். தொழில் வணிகத் துறையில் நடந்த ஊழல்களை மறைக்க நடத்தப்பட்ட நாடகமே இந்தத் தீ விபத்து என்கிறார்கள் அவர்கள். ''சுமார் 250 ஆண்டுகளைத் தாண்டிவிட்ட இந்த கட்டடம் மிகவும் பலவீனம் ஆகிவிட்டது. இதனால், இங்குள்ள அரசுத் துறைகளைக் காலி செய்ய வேண்டும் என்று, கடந்த 10 ஆண்டுகளாகவே பொதுப்பணித் துறை வலியுறுத்தி வருகிறது. அவர்கள் சொன்னதைக் கேட்டு நில அளவையியல் துறையினர் மட்டுமே புதிய கட்டடத்துக்குச் சென்று விட்டார்கள். ஆனால், சமூக நலத் துறை, வேளாண்மைத் துறை, நெடுஞ்சாலைத் துறை, தொழில் வணிகத் துறை உள்ளிட்ட அலுவலகங்கள் காலி செய்ய மறுத்து வருகின்றன.
தொழில் வணிகத் துறையின் சார்பில் தொழில் வளர்ச்சிக்காக மானி யத்தில் கடன் வழங்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்கள் தயாரித்துச் சிலர் கோடிக்கணக்கில் கடன் பெற்று ஊழல் செய்துள்ளார்கள். சமீபத்தில் சசிகலாவின் ஆட்கள் வெளியேற்றத்துக்குப் பின், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து, பொங்கல் பண்டிகைக்குப் பின் அந்தத் துறைக்குப் புதிய அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் அலுவலகம் பற்றி எரிந்து கடன் ஆவணங்கள், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க் உட்பட அனைத்தும் சாம்பலாகிவிட்டன. அதனால், நிச்சயம் இது தீ விபத்து அல்ல. சதிதான்.
எழிலகத்தின் பாதுகாப்புக்காக 12-க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் எப்போதும் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இருப்பதோ மூன்றே பேர். சம்பவத்தன்று இரண்டு பேர் விடுப்பில் போய்விட ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். ஆனால், இங்குள்ள ஒரு முக்கியத் துறையின் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் மட்டுமே 13 பேர் ஆர்டர்லிகள் போல வேலை பார்க்கிறார்கள். ஏற்கெனவே பாதிக் கட்டடம் சிதிலமடைந்து இருக்கும் நிலையில், தீ விபத்தால் மொத்தக் கட்டடமும் பலவீனம் ஆகிவிட்டது. அதனால், பழமை வாய்ந்த இந்தக் கட்டடத்தின் பயன்பாட்டுக்கு விடை கொடுத்தால்தான் ஆபத்துக்களைத் தடுக்க முடியும். அரசாங்க ஆவணங்களையும் காப்பாற்ற முடியும்'' என்றார்கள்.
வழக்கமான விபத்தாக இதையும் முடித்துவிடாமல், நேர்மையாக விசாரணை நடத்தினால்... இன்னும் பல்வேறு ஊழல்கள் அம்பலத்துக்கு வரும்!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படங்கள்: கே.கார்த்திகேயன்