Published:Updated:

மூக்கை பிடிக்கிறதுக்கு முன்னாடி போட்டோ பிடி!

கெடுபிடி ஜல்லிக்கட்டு

மூக்கை பிடிக்கிறதுக்கு முன்னாடி போட்டோ பிடி!

கெடுபிடி ஜல்லிக்கட்டு

Published:Updated:
##~##

மாடுகளுடன் மல்லுக்கட்டுவதைவிட, பிராணிகள் நல வாரியத்துடன் முட்டி மோதுவதுதான் ஜல்லிக்கட்டுக் குழுவினருக்குப் பெரும்பாடு.  காலம் காலமாக நடந்த ஜல்லிக்கட்டுக்கு... ஐந்து ஆண்டு களுக்கு முன்னால் தடை விழுந்தது. அது, ஆண்டு தவறாமல் தொடர்ந்தாலும், இந்த ஆண்டு வீரியம் ரொம்பவே அதிகம். ஜல்லிக்கட்டுக்கு எதிரான அரசு ஆணையை 11.7.2011 அன்று மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பிக்க, பிராணிகள் நல வாரியமோ ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி ஜனவரி முதல் வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டது. 

'இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்’ என்று பரவலாகப் பேசப்பட்டதால், ஆவேசமான கிராம மக்கள், மாடு வளர்ப்பாளர்கள், மாடுபிடி வீரர்கள் திரண்டு மதுரையில் பிரமாண்ட பேரணி நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த அந்தந்த மாவட்டக் கலெக் டர்கள் மூலம் தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூக்கை பிடிக்கிறதுக்கு முன்னாடி போட்டோ பிடி!

இதற்கிடையே, 'அரசு ஆணைக்கு எதிராக எப்படி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கலாம்?’ என்று, பிராணிகள் நல வாரிய உதவிச் செயலாளர் வினோத்குமார் உள்ளிட்ட சிலரும், 'மத்திய அரசு பிறப்பித்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று தமிழக வீர விளையாட்டுப் பாதுகாப்புக் குழு, ஜல்லிக்கட்டு பேரவை போன்றவையும் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. கடைசியில் கூடுதல் பாதுகாப்புடன் கடுமை யான நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி வழங்கியது உயர் நீதிமன்ற மதுரை கிளை.  

வரலாறு காணாத பாதுகாப்பு அம்சங்களுடன் பொங்கல் தினத்தன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டும், மறுநாள் பாலமேடு ஜல்லிக்கட்டும் நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக் காளைகள் அனைத்தையும் முன், பின், இடது, வலது என்று நான்கு பக்கமும் போட்டோ எடுத்து ஏழு பக்க ஆங்கில விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பிராணிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது உத்தரவு. கோர்ட்டு தீர்ப்பு ஜல்லிக்கட்டு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் வந்ததால், புதிய காளைகளைப் பதிவு செய்ய முடியாமல் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. அதிலும்கூட உரிய சான்றிதழ் இல்லாதது, மருத்துவப் பரிசோதனையில் தகுதி இழந்தது என்று சுமார் 100 காளைகளைப் போட்டியில் இருந்து நீக்கினார்கள் அதிகாரிகள். அதனால் இந்த ஆண்டு காளைகளின் எண்ணிக்கை குறைவு.

காளைகள் சித்ரவதை செய்யப்படுகிறதா? வெறி ஊட்டப்படுகிறதா? என்று பிராணிகள் நல வாரியத்தினர் கண்காணித்தனர். வாடிவாசலில் இருந்து வெளியேறப் பயந்து மிரளும் காளை களைப் படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தார்கள். களத்தில் மாடு பிடிக்கும் எல்லை குறைக்கப்பட்டு... கெடுபிடி மேல் கெடுபிடிகள் விதிக்கப்பட்டாலும், சுவாரஸ் யம் மட்டும் குறையவே இல்லை. ஈரடுக்குப் பாதுகாப்புக்குப் பின்னே நின்று மக்கள் ஜல்லிக்கட்டை ரசித்துப் பார்த்தார்கள். பாலமேட்டில் கடும் பாதுகாப்பையும் மீறி ஓரிரு மாடுகள் பார்வையாளர் பகுதிக்குள் புகுந்ததால், வேடிக்கை பார்த்த பலர் காயம் அடைந்தார்கள். நல்ல வேளையாக உயிரிழப்பு ஏதும் இல்லை. மாடுகளைப் பிடிக்கக் களம் இறங்கிய இளசுகளிடம் மகிழ்ச்சிப் பொங்கல் பொங்கி வழிந்தது.

ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் விழா நடத்துவது, பொங்கலே இல்லாமல் நடத்துவதற்குச் சமம் என்று இந்த மக்கள் நினைக்கிறார்கள்!

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமுர்த்தி,

சொ.பாலசுப்பிரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism