
ஓவியம்: அரஸ்
அன்று #MeToo - இன்று #UsToo
இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘#மீடூ’ இயக்கம் தீவிரமடைந்தபோது, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் எழுப்பிய குரல், உலகை உலுக்கியது. அதன் மூலம், பிரபலங்கள் பலரின் முகமூடிகள் கிழிக்கப்பட்டன. #மீடூ இயக்கம் ஏற்படுத்திய அதிர்வைவிட அதிக அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது, சமீபத்தில் எடுக்கப்பட்ட ‘#அஸ்டூ’ (#UsToo) என்கிற சர்வே முடிவுகள்!
பணியிடத்தில் பெண் வழக்கறிஞர்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் உள்ளிட்ட கொடுமைகள் குறித்து எடுக்கப்பட்ட சர்வேதான், #அஸ்டூ. லண்டனில் செயல்பட்டு வருகிறது, பன்னாட்டு வழக்கறிஞர்கள் சங்கம். 180 நாடுகளில் பணியாற்றும் 83,000 வழக்கறிஞர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்தப் பன்னாட்டு வழக்கறிஞர்கள் சங்கம் மூலம்தான் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 135 நாடுகளைச் சேர்ந்த ஏழாயிரம் தொழில் முறை வழக்கறிஞர்கள், 210 சட்ட நிறுவனங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள் ஆகியோரிடம் சர்வே எடுக்கப்பட்டுள்ளது. மே 15-ம் தேதி லண்டன் நகரில் வெளியிடப்பட்ட இந்த சர்வே முடிவுகள்… பல நாடுகளில் பணிபுரி யும் ஆண், பெண் வழக்கறிஞர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளை வெட்ட வெளிச்ச மாக்கியுள்ளன. சேம்பர், நீதிமன்ற வளாகம், வழக்கறிஞர்கள் அறை… என்று அனைத்து இடங்களிலும் பெண்கள் துன்புறுத்தப்பட்டிருக் கிறார்கள்.

சர்வேயில் கலந்துகொண்டு பதில் அளித்த வர்களில் மூன்றில் ஒரு பெண் வழக்கறிஞர், பாலியல் தொல்லைகள், வன்புணர்வு என ஏதோவொரு கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மூன்றில் இருவர், கீழ்த்தரமாக நடத்தப்படுதல், சிறுமைப்படுத்தப்படுதல் உட்பட பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
பெரும்பாலான நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை உதாசீனப்படுத்திவிடுவதால், பாதிக்கப்பட்ட பல பெண் வழக்கறிஞர்கள் புகார்கூட அளிக்கவில்லை. கிட்டத்தட்ட 65 சதவிகிதப் பெண் வழக்கறிஞர்கள், பணியிடத்தில் அனுபவித்த வன்கொடுமைகளையும் அவமானங்களையும் தாங்க முடியாமல் வழக்கறிஞர் தொழிலைவிட்டே விலகிவிட்டனர் என்கிறது ஆய்வறிக்கை.
பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகம் பேர் இதுபோன்ற கொடுமைகளால் பாதிக்கப்பட் டுள்ளனர். ஸ்வீடன், ரஷ்யா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் குறைவு. பெண்கள் மட்டுமல்ல... ஆண் வழக்கறிஞர்கள் பலரும் பணியிடங்களில் இந்தப் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அரசு வழக்கறிஞர்கள், சட்டத்துறையில் பணிபுரியும் ஜூனியர் சொலிசிடர்கள் போன்றோரும்கூட இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்ப முடியவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் புகார் அளிக்கக்கூட முன்வரவில்லை. புகார் கொடுத்த பெண்கள் பலர் மிரட்டப்பட்டுள்ளனர். பலர் கேலிப்பேச்சுக்கு ஆளாகியுள்ளனர். கொடுமை என்னவென்றால், பாலியல் புகார் கொடுத்த பெண்களை வேலையைவிட்டு விலகச் சொல்லியிருக்கின்றன, சில நிறுவனங்கள். சட்ட நிறுவனத் தலைவர்களின் பலம், ஆணாதிக்கம், வேலை போய்விடுமோ என்ற அச்சம், அவமானம் போன்றவைதான் பல இளம் பெண் வழக்கறிஞர் களை ஊமையாக்கியுள்ளன.

கடந்த 1982-ம் ஆண்டில் ஒரு பிரபல அமெரிக்கச் சட்ட ஆலோசனை நிறுவனம், ஒரு பல்கலைக் கழகத்தில் கேம்பஸ் தேர்வு மூலம் வழக்கறிஞர் பணிக்கு ஆட்களைத் தேர்வுசெய்தது. அப்போது பெண்களிடம் நீச்சல் உடைப் போட்டியை நடத்தியிருக்கிறது. பாலியல் வன்கொடுமையின் உச்சம் இதுதான் என்கிறது இந்த ஆய்வறிக்கை.
“பாலியல் தொல்லைகள் எந்த அளவுக்கு வழக்கறிஞர் தொழிலில் புரையோடி இருக்கின்றன என்பதையே இந்த சர்வே முடிவுகள் காட்டு கின்றன. பாலியல் தொல்லைகளுக்கு எதிராகச் சட்டப்போர் நடத்துபவர்களே, பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுவது வேதனை யானது” என்கிறார், பன்னாட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஹொராசியோ ஃபெர்னாண்டஸ் நேடொ. “பல துன்புறுத்தல்கள் மூடி மறைக்கப் படுவதால், பிரச்னையின் ஆழம் யாருக்கும் தெரியவில்லை” என்கிறார், லா சொசைட்டியின் தலைவர் க்ரிஸ்டினா ப்ளாக்லாஸ்.
“நம் வீட்டில் ஒழுக்கம் இருந்தால்தான், அதைப் பற்றி நாம் வெளியில் பேச முடியும்” என்கிறார், ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் பிரதமரும் உலகப் பெண்கள் தலைமைப் பண்பு நிறுவனத்தின் (Global Institute for Women’s Leadership) தலைவருமான ஜுலியா கில்லர்ட்.
சட்டத்துறைக்கு வந்த களங்கத்தைப் போக்க வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உண்டு!
- கே.ராஜூ,