Published:Updated:

நாளெல்லாம் வெடிச் சத்தம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே திணறும் கிராமம்!

நாளெல்லாம் வெடிச் சத்தம்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே திணறும் கிராமம்!

Published:Updated:
##~##

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து படப்பை செல்லும் சாலையில் உள்ளது மஹாரண்யம் கிராமம். சிறிய மலை ஒன்று சூழ்ந்திருக்க பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கும் இந்தக் கிராமத்தில்தான், ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிஜியின் ஆசிரமம் மற்றும் பாபாஜி ஆசிரமம் ஆகியவை உள்ளன. வெளிநாடுகளில் இருந்தும்கூட ஏராளமான பக்தர்கள் இந்த ஆசிரமங்களுக்கு வந்து செல்கின்றனர். பாபாஜி ஆசிரமத்துக்கு அடிக்கடி வந்து தியானம் செய்து விட்டுப் போகிறவர்களில் முக்கியமானவர்... ரஜினிகாந்த்! 

''சார், நான் ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு படப்பை செல்லும் சாலையில் வந்து கொண்டு இருந்தேன்.  மஹாரண்யம் கிராமத்தைக் கடந்தபோது, நிலஅதிர்வு ஏற்பட்டது போன்ற சத்தம் காதைப் பிளந்தது. சற்று தொலைவில் குபுகுபுவெனப் புகை படர்ந்தது போல தூசு மண்டலம் உருவாகி உள்ளது'' என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு ஒருவர் பதற்றத் துடன் போன் செய்தார். உடனடியாக, அந்தப் பகுதிக்கு விரைந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாளெல்லாம் வெடிச் சத்தம்!

ஆனால், நாம் செல்லும் வழியில் மக்கள் ரொம்ப இயல்பாகவே இருந்தனர். ஆனால், வழி நெடுகப் புகை மண்டலமாக இருந்தது. அதைப் பார்த்தவுடன் பெரும் ஆச்சர்யமாக இருந்தது. சாதாரண ஒரு விபத்து நடந்தாலே திரண்டுவிடும் கிராம மக்கள், இவ்வளவு பெரிய அதிர்வு ஏற்பட்டும் சாதாரணமாக இருக்கிறார்களே!

மக்களிடம் விசாரித்த போதுதான், நிலஅதிர்வைவிட பெரிய அதிர்ச்சி நமக்கு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள மலை அருகே கல் எடுப்பவர்கள், அதே பகுதியில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்திலும் வெடி வைத்து மண் அள்ளிச் செல்கின்றனராம். இரவு-பகல் என்று நேரம் காலம் பார்க்காமல் வெடி வைத்துக்கொண்டே இருப்பதால், அந்தச் சத்தம் மக்களுக்குப் பழகிவிட்டதாம். தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் மண் மற்றும் கல் எடுத்துச் செல்வதால், இந்தக் கிராமத்தின் பிரதான சாலைகூட குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் எப்போதுமே இந்தப் பகுதி தூசு மண்டலமாகத்தான் இருக்கிறது. இதனால், பலவித நோய்கள் ஏற்பட்டுத் தவிக்கும் மஹாரண்யம் கிராம மக்கள், தாசில்தார், கலெக்டர், முதல்வர் என்று மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்கிறார்கள்.

நாளெல்லாம் வெடிச் சத்தம்!

அந்தப் பகுதியைச் சுற்றிப் பார்த்தோம். பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, அவற்றில் தண்ணீர் தேங்கி இருந்தது. சில குட்டைகளில் சிறுவர்கள் டைவ் அடித்துக் கொண்டு இருந்தார்கள். இது பெரிய ஆபத் தான விளையாட்டாக இருக்கிறதே என்று,  அங்கு மண் அள்ளிக்கொண்டு இருந்த சிலரிடம் பேசினோம். இந்தக் குவாரியின் உரிமையாளர் யார் என்பதைச் சொல்ல அவர்கள் மறுத்து விட்டனர். கிராம மக்களுக்கும் தெரியவில்லை.

மஹாரண்யம் ஊராட்சித் தலைவர் ராஜூவிடம் விசாரித்தோம். ''எனக்கு முன்பு இருந்த ஊராட்சித் தலைவர்தான், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பி.பி.ஜி.குமரன் என்பவருக்கு, மண் அள்ளும் உரிமை வழங்கி இருக்கிறார். சுமார் ஐந்து ஏக்கரில் மண் அள்ளிக்கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. லாரிகள் தொடர்ந்து சென்றுகொண்டே இருப்பதால், சாலைகள் குண்டும் குழியுமாக ஆகி விட்டன. இதுபற்றி, குமரனிடம் பேசி இருக்கிறேன். பொங்கல் முடிந்தவுடன் புதிய சாலை அமைத்துத் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்'' என்றார்.

நாளெல்லாம் வெடிச் சத்தம்!

மாவட்ட வருவாய் அதிகாரி சுதர்சனிடம் பேசினோம். ''அந்தக் கிராமத்தில் மண் அள்ளிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டு இருக்கிறதா என்று கனிம வள உதவி இயக்குநரிடம் விசாரிக்க வேண்டும். அவரிடம் கேட்டுவிட்டு உங்களுக்குப் பதில் சொல்கிறேன்'' என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டக் கனிம வள உதவி இயக்குநர் சிவக்குமாரிடம் பேசினோம். ''மஹாரண் யம் கிராமத்தில் மண் அள்ளும் உரிமை யாருக்கும் வழங்கப்பட்டு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை'' என்றார்.

அப்படியே மண் அள்ளும் உரிமை பெற்றிரு ந்தாலும், ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்தும் உரிமை யார் வழங்கினார்கள்? அவை எங்கிருந்து கிடைக்கிறது?

ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி-யிடம் பேசினோம். ''ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்த கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி இருக்க வேண் டும். மஹாரண்யம் கிராமத்தில் ஜெலட்டின் குச்சிகளைப் பயன்படுத்துபவர்கள் அனுமதி வாங்கி இருக்கிறார்களா என்று நான் விசாரிக்கிறேன். இல்லையென்றால், அவர்கள் மீது நிச்சயம் நடவ டிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

மண் அள்ளுவதாகக் கூறப்படும் பி.பி.ஜி. குமரனிடம் பேசினோம். ''மஹாரண்யம் கிராமத் தில் என்னுடைய பெயரில் இருக்கும் 3 ஏக்கர் 69 சென்ட் பட்டா நிலத்தில் குவாரி நடத்த, கனிம வளத்துறையில் உரிமம் பெற்று இருக்கிறேன். அந்த இடத்தில் இப்போது மண் அள்ளுகிறோம். அந்தப் பணி முடிந்தவுடன்தான், அங்கிருந்து கல் எடுக்க முடியும். எனக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தைத் தவிர, வேறு இடத்தில் நான் மண் எடுக்கவில்லை. அங்கு, வனத்துறையைச் சேர்ந்த இடம் இருப்பதால், இஷ்டத்துக்கு யாரும் மண் அள்ளிவிட முடியாது. பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளுக்கும் முறையாக அனுமதி வாங்கி இருக்கிறேன்'' என்றார்.

ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கிராமத்தில், எந்த நேரமும் வெடிச் சத்தமும் தூசியும் இருந்தால், மக்கள் எப்படி நிம்மதியாக வசிக்க முடியும்? ஏற்கெனவே, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றிக்கொண்டு இருக்கும் நிலையில், வண்டி வண்டியாக மண் அள்ளவும் உரிமை கொடுத்து விட் டால், பள்ளங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடித்துத்தான் எதிர்காலத்தில் உயிர் வாழ வேண்டுமா? விவசாயத்தை செழிக்கவைக்க யோசிக்க வேண்டிய அரசு எந்திரம் இப்படி அலட்சியமாக இருந்தால் எதிர்காலம் எல்லோருக்கும் கேள்விக்குறியாகிவிடும்!

- எஸ்.கோபாலகிருஷ்ணன்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism